இரண்டு முறை திருமணம் நின்றுபோக.. பிரசாத் கல்யாணத்தில் கரை சேர்ந்தாரா இல்லையா?

 

 

 

 






 

பெல்லி வரமண்டி
இயக்கம் பிரசாத் பெஹ்ரா
நடிப்பு பிரசாத் பெஹ்ரா, விராஜிதா
இன்ஃபினிட்டம் மீடியா

பிரசாத்திற்கு திருமணம் உறுதியாகிறது. ஆனால் திருமணத்தன்று மண்டபத்தில் இருந்து ஒருமுறை அல்ல இருமுறை பெண்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். இதனால் திருமணத்தின் மேல் வெறுப்போடு இருக்கிறார். அதேநேரம் அவரது காதலி கஞ்சன் என்பவர், தனது நண்பரை மணம் செய்துகொள்வதைக் கேட்டு பொறாமைப்படுகிறார். கஞ்சனை திரும்பவும் காதலிக்க முயல்கிறார். பிரசாத்திறகு மணமானதா இல்லையா என்பதே வெப்சீரிஸின் கதை.

யூட்யூபில் வெளியாகும் தெலுங்கு வெப்சீரிஸூக்கு பெரிதாக பட்ஜெட் கிடையாது. அலுவலகம், வீடு என இரண்டே இடங்களில்தான் படம்பிடிக்கிறார்கள். இதற்கு முன்னர் சிவாஜி ராஜா, விராஜிதா நடித்த வெப் சீரிஸைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறோம். வெப்சீரிஸில் சிவாஜி ராஜா தனியாக போராடி காமெடி செய்திருப்பார். தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அவருக்கு துணையாக அல்லது எதிராக கவுன்டர் கொடுக்க யாருமே இல்லாத நிலையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்தது.

பிரசாத் பெஹ்ராவின் எழுத்து இயக்கத்தில் பெல்லி வரமண்டி வேறு விதமாக அனுபவத்தைத் தருகிறது. அவரின் காமடி டைமிங்கும், வசன உச்சரிப்பும், சூழலை உத்தேசித்து எழுதிய வசனங்களும் காட்சிகளை உயிர்ப்பு கொண்டதாக்குகி்ன்றன. எப்போதும் குடித்துவிட்டு சூதாடுகிற அப்பா. அப்பாவின் கெட்டப்பெயரால் திருமணம் செய்ய முடியாத மகனின் நிலை, அப்பா வாங்கிய கடனுக்காக அலுவலகத்தில் கடன்காரரால் அடிவாங்குவது என பிரசாத்தின் பாத்திரம் சற்று உண்மைக்கு நெருக்கமாக உள்ளது.

தொடரில் பிரசாத்திற்கு காமெடி துணையாக ஜேடிவி பிரசாத் என்ற நடிகர் உள்ளார். இவர் தொடர்ச்சியாக வெப் சீரிசில் நடித்தாலும் பெல்லி வரமண்டி சீரிஸ் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ரெட்டி காரு என்பதுதான் பாத்திரப் பெயர். இவரும் பிரசாத்தும் சேர்ந்து செய்யும் காமெடி தூள் கிளப்புகிறது. இப்போது அந்த பாத்திரத்தை மட்டுமே வைத்து தனியாக வெப் சீரிஸை  எழுதி இயக்கி வருகிறார் ஜேடிவி பிரசாத். பெல்லி வரமண்டிக்கு ப்ரீக்குவல் அது.

பிரசாத், நண்பரின் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எப்போதுமே கேலி கிண்டலாக பேசுபவரால் ஏற்படும் பிரச்னைகளை குழு தலைவரான விராஜிதா சமாளிக்கிறார். இவர்தான், பிரசாத்தை சொல்லாமல் காதலிக்கிறார். இவர் தனது காதலை அலுவலகத்தில் கூறும் காட்சியும், நகைச்சுவையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. விராஜிதாவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கும் காட்சி, அதில் வரும் வசனங்களும் வேடிக்கையாக உள்ளது.

கோபமும், வெறுப்பும் காற்றில் அதிகரித்து வருகிற சூழலில், பிரசாத் பெஹ்ராவின் வெப் சீரிஸ் நம்மை சிரிக்க வைக்கிறது. சற்றேனும் மனதை இளக்கமாக மாற்றுகிறது. நகைச்சுவையும், உணர்ச்சிகரமான வசனங்களும் தொடரை முக்கியமானதாக கருத வைக்கிறது.

இரண்டாவது திருமணமும் நின்று போய், அலுவலகத்திற்கு வரும் பிரசாத், கவலைகளை மறக்க நான் அங்குபோகவேண்டும், இதை செய்யவேண்டும் என கவித்துவமாக பேசும்போது, விராஜிதா சரக்கு அடிக்கணும் அதுக்கு எதுக்குடா இவ்வளவு பேசுற என கேட்பது... தெலுங்கில் சக பெண்களை உடனே மோகித்து பீச்சு மிட்டாய் மாரி உன்னாவ், கத்திலாண்டி உன்னாரு என தெலுங்கில் கூறி பிறகு, அதையே ஆங்கிலத்தில் மாற்றி பேசுவது என வசனங்கள் தொடர் எங்கும் வேறு லெவலில் உள்ளன. மென்பொருள் அலுவலகத்தில் தெலுங்கில் பேசினால் அவமானம், சொல்லும் விஷயத்தை ஆங்கிலத்தில் பேசினால் ஆனந்தம் என உள்ள மனநிலையை கிண்டல் செய்திருக்கிறார் பிரசாத்.

மைய பாத்திரங்களோடு ஜேசி, தோரணிக்கா, அஜய் என பாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இரு பாத்திரங்கள் மட்டுமே இல்லாமல் மற்ற பாத்திரங்களையும் நன்றாக காட்சிபடுத்தி காட்டியுள்ளனர்.

ஜாலியாக சிரிக்க...

கோமாளிமேடை டீம்








 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்