பசுமைக் கட்சியின் வரலாறு, பின்னணி, சாதக, பாதகங்கள் - க்ரீன்பாலிடிக்ஸ் - ஜேம்ஸ் ராட்கிளிப்

 

 


 

கிரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர்  டெமோகிரசி
ஜேம்ஸ் ராட்கிளிப்
மேக்மில்லன் பிரஸ்
235 பக்கங்கள்

நூலில் மொத்தம் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. அவை அனைத்திலும் ஏராளமான சூழலியலாளர்கள் கருத்துகள், பசுமைக் கட்சி அரசியல் அதிகாரத்தில் நுழைந்த வரலாறு, அதன் தேவை, அரசின் இயக்கம் என நிறைய விஷயங்களைப் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தகவல்களா, சிந்தனைகளா அயர்ச்சியே ஆகிவிடுகிறது.

பொதுவாக இடதுசாரிகளே, மெல்ல பசுமை சார்ந்து இயங்குவார்கள். பிறகு மார்க்சியத்தை மறுத்துவிட்டு முழுமையாக பசுமை அரசியலில் ஆலோசகர் அல்லது செயல்பாட்டாளராக, சிந்தனையாளராக மாறுவார்கள். சூழலியலின் அடிப்படை மார்க்சியத்திலிருந்தே தொடங்குகிறது. அதுவும் கூட வளமான மேற்கு நாடுகளில்தான் பசுமைக் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சு ப உதயகுமாரன் போன்றோர் பசுமைக்கட்சி என தொடங்கினாலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. சூழல் கவனத்தை இங்கு அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். அப்படி தொடங்காமல் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கினால், அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

சர்வாதிகாரமா, ஜனநாயகமா என கேள்வி கேட்டு நூல் எழுதப்பட்டு இருந்தாலும் அதைப் பற்றி நூல் ஆசிரியர் தீவிரமாக கருத்துகளை முன்வைக்கவில்லை. தெருவில் இறங்கி சூழல் அமைப்புகள் போராடி பிறகு மெல்ல அரசியல் அதிகாரத்தைப் பெற்று மாற்றத்தை கொண்டு வரலாம் என காலப்போக்கில் புரிந்துகொள்கின்றன. பிறகு, இடதுசாரி, வலதுசாரி என எந்த ஆட்சி அமைந்தாலும் தங்களது கொள்கையை நடைமுறைப்படுத்த அரசில் இணைந்து இருந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. அதில் சாதித்தது என்ன, சரிந்தது என்ன என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார். நூல் முழுக்க ஏராளமான ஆய்வறிஞர்களின் மேற்கோள்கள், கருத்துகள் உள்ளன. நூலின் பின்பகுதியில் உள்ள மேற்கோள் நூல்கள் பட்டியலை படித்தாலே, ஓராண்டுக்கு தேவையான பசுமை நூல்கள், கட்டுரைகள் கிடைத்துவிடும். அந்தளவு நூல்களை ஆய்வு செய்து ஜேம்ஸ், இந்த நூலை எழுதியிருக்கிறார். மலைக்க வைக்கும் உழைப்பு.

பசுமை அரசியல் சார்ந்து தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், ஜேம்ஸ் ராட்கிளிப்பின் இந்த நூலை தாராளமாக வாசிக்கலாம். இந்த வகைமையில் உள்ளவற்றை விட சற்று எளிமையான நூல்தான். அரசியல் கட்சி என்றால் கூட அதற்கு பின்னணியாக சுதந்திரமான சூழல் அமைப்புகளின் போராட்ட பின்னணி, வரலாறு தேவையா இல்லையா என்பது பற்றி விளக்கியிருக்கிறார். பசுமைக்கட்சி, மக்களிடையே வரவேற்பு பெற்றாலும் உள்கட்சி முரண்பாடுகளால் சில கட்சி உறுப்பினர்கள் படுகொலை ஆகிறார்கள். அதுவரை பெற்ற தேர்தல் வெற்றி மெல்ல காணாமல் போகிறது. அதை எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பதை அழகாக எழுதியிருக்கிறார் ஜேம்ஸ்.

பசுமைக்கட்சியின் வளர்ச்சி, தேர்தல் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகமெங்கும் பசுமைக்கட்சிகள் இயங்கி வருகின்றன. அவை ஏற்படுத்திய தாக்கம், அதிகாரம் பெற்ற பிறகு செய்த செயல்பாடுகள் என பலவும் விளக்கப்பட்டுள்ளது. பசுமைக்கட்சிக்கென சில அடிப்படை அம்சங்கள் உள்ளன. இவை மாறாதவை. மற்ற அம்சங்கள் நாடுகளின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். பொருளாதார கொள்கை, தூய ஆற்றல் கொள்கை, குடியேற்றக் கொள்கை ஆகியவற்றில் பசுமைக் கட்சி மரபான கட்சிகளை விட ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது. சூழல் அமைப்புகள், பசுமைக்கட்சி என இரண்டு வகைமையின் பலம், பலவீனத்தை, சரி, தவறுகளை நூல் வெளிப்படையாக பேசுகிறது.

பசுமைக்கட்சியின் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய நூல்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்