மனதில் நம்பிக்கை இருந்தால் சாதாரண களிமண் கூட தங்கமாக மாறும் - ஷி ச்சின் பிங் உரை















சோசலிசத்தின் அடிப்படையாக வறுமையை ஒழித்து, மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது முக்கியம். இதன் வழியாக பொதுமக்களின் நலத்தை வளப்படுத்தலாம். வறுமையான சூழலில் உள்ள மக்களின் நிலையை கவனமாக கண்காணிக்க வேண்டும். மரியாதையும் அன்பும் கொண்டு அவர்களைக் கவனித்துக்கொள்வது அவசியம்.




மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடிந்தளவு முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கும் மேல் உள்ள அவர்களின் தேவைகள், பிரச்னைகளை மனதில் குறித்துக்கொண்டு கட்சி, அரசு ஆகியவற்றின் வழியாக குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளை முன்னேற்ற முயலவேண்டும்.




சீனப் புரட்சிக்கு பழைய புரட்சித்தளங்கள், அங்குள்ள மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அதை மக்களும், கட்சியும் என்றுமே மறந்துவிடக்கூடாது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்த செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அதன் விளைவாக மக்களின் வாழ்க்கை பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது.




சீனா, சோசலிசத்தின் தொடக்க காலத்தில் நிற்பதால் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் வறுமை நிலையிலேயே உள்ளனர். கிராம பகுதிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள பகுதிகள் உள்ள நிலையில் வளமான சமூகத்தை கட்டமைப்பது என்பது கடினமான சவால் தரும் பணியாகவே இருக்கும். பின்தங்கிய கிராமத்து பகுதிகள் இருக்கும்போது, வளமான செழிப்பான நாடு என்று நம்மை நாம் கூறி ஏமாற்றிக் கொள்ள முடியாது.




மத்திய தலைமை வறுமை ஒழிப்பதில் பெரும் கவனத்தைக் கொண்டுள்ளது. கட்சி கமிட்டியும், அனைத்து மட்டத்திலுள்ள அரசுகளும் வறுமை ஒழிப்பில் உள்ள தங்களது பொறுப்பை உணர்ந்துள்ளன. இந்த அமைப்புகள், மேம்பாடு சார்ந்து இயங்கினால் வறுமையை ஒழிக்க முடியும்.




சரியான இலக்குகளைக் கொண்ட திட்டம், நிதி, திட்டமிடலோடு இயங்கி எதிர்பார்த்த முடிவுகளைக் கொண்டு வருவது முக்கியம். அப்போது , வறுமை நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கை, நல்ல நிலைக்கு உயர்ந்து வரும்.




'நம்பிக்கை கொண்டிருந்தால் சாதாரண களிமண் கூட தங்கமாக மாறும்' என்று நாம் கூறும் பொன்மொழி ஒன்றுண்டு. இந்த திட்டங்களில் உள்ளூர் சாதகங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெற்று இயங்க வேண்டும். இந்த திட்டங்களில் பழைய புரட்சித் தளங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் வறுமை நிலையில் வாழும் மக்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அவர்களது வாழ்க்கை நலமும் வளமும் பெற கடமையை மனதில் இருத்திக் கொண்டு இயங்கவேண்டும்.




கிராமப் பகுதிகள் மேம்படுவதோடு, அங்கு வாழும் விவசாயிகளின் வாழ்க்கை சிறந்த முறையில் உயரவேண்டும். கட்சியின் தொடக்க திட்டப்படி, அவர்களின் வாழ்க்கை வளமிக்கதாக மாற்றமடையவேண்டும். வறுமை ஒழிப்பு பணியில் இயங்கும் உள்ளூர் அதிகாரிகள், ஆண்டு முழுக்க பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப்பணி நிச்சயம் எளிதாக இருக்காது. பணியாளர்கள் அனைவருக்கும் எனது நேர்மையுடன் கூடிய மரியாதையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கிராமப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை நன்னிலைக்கு மேம்பட கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற ஒன்றாக இணைந்து பாடுபட்டு வருகிறோம்.













ஹெபாய் பகுதியில் புபிங் கவுன்டியில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு பணியை பார்வையிட்டு ஆற்றிய உரை.




டிசம்பர் 29, 30, 2012

ஷி ச்சின்பிங் உரைகள்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்