உணவுத்துறை இன்ஸ்பெக்டருக்கும், கலப்பட உணவுப்பொருள் நிறுவனத்திற்குமான கருத்தூசிச் சண்டை! - பட்டாபிராமன்
பட்டாபிராமன்
ஜெயராம், மியா ஜார்ஜ்
இயக்குநர் கண்ணன்
அரசின் உணவுத்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள பட்டாபிராமன், மாநிலத்தில் பெரிய உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதி, கலப்பட உணவுகளை தடுத்து நிறுத்த முயல்கிறார். இதற்காக அவர் கொடுக்கும் விலை, சந்திக்கும் அவமானங்கள் இவைதான் கதை.
உணவுப்பொருட்களில் உள்ள கலப்படத்தைப் பற்றி பேசுகிற நோக்கம் எந்த குறையும் கொண்டதில்லை. ஆனால், அதுவே படத்தை பார்க்க வைக்கத் தூண்டாது அல்லவா? பெரும்பாலான காட்சிகளில் நாயகன் வசனமாகவே நிறைய விஷயங்களைப் பேசுகிறார். இதனால், வில்லன்கள் செய்யும் கலப்பட சமாச்சாரங்களை விட அவர்களை எதிர்கொண்டு நாயகன் பேசும் வசனங்கள் பெரும் பயத்தை, பீதியை மனதில் விதைக்கின்றன. ரசம் வைக்கத் தெரிந்தால் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்பதெல்லாம் கண்ணைக் கட்டுகிற காட்சி. ரசம்தான் நாயகனுக்கே வைக்கத் தெரிகிறதே அப்புறம் என்ன? அவரும் குடித்துவிட்டு மனைவிக்கும் கொடுத்தால் பிரச்னை முடிந்ததுதானே? ஆனால் படத்தின் இயக்குநர் அந்த திசையில் யோசிக்கவில்லை.
நேர்மையாக வாழ விரும்புகிற நாயகன். அவருக்கு எதிரியாக உள்ள அலுவலக சகாக்கள், உதவியாளர்கள், பெரு நிறுவனம், அவரது மச்சான் கூட அதே துறையில் இருந்து லஞ்சம் வாங்குபவர்தான். இப்படியான செல்லும் கதை பெரிதாக வேகம் எடுக்கவே யோசிக்கிறது.
பத்திரிகையாளர் ஒருவர் இறந்துபோன பிறகுகூட கதை, சாகச தன்மையில் இல்லை. ஜெயராம் நேர்மையானவர், இயற்கை உணவை விரும்புகிறவர் சரி. அதற்காக அவரை காதலிக்கிறேன் என்று கூறும் பெண்ணை, லிப்ஸ்டிக் வைத்தெல்லாம் அவமானப்படுத்தி பேச வேண்டுமா என்ன?
மியா ஜார்ஜ் நன்றாக நடிக்கும் நடிகை, ஆனால் அவரது பாத்திரம் கறுப்பு, வெள்ளை என எந்த பக்கம் உள்ளது என யாருக்கும் தெரிவதில்லை. நகைச்சுவையாக அந்த பாத்திரமே தன்னைப் பற்றி உணர்ந்திருப்பதில்லை என்பதுதான் வேடிக்கை. மியா ஜார்ஜின் தந்தை, நோய்வாய்ப்பட்டவர். அவருக்கு பர்கர், பீட்சாவை உணவாக மகள் கொடுக்கிறார். அட ஆண்டவா, உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு அரிசி கஞ்சி கொடுப்பது கூட தெரியாதா என்ன? தெரிந்தாலும் செய்யக்கூடாது. ஏனென்றால், அதை நாயகன் வந்து செய்யவேண்டும். படத்தில் நாயகன் தவிர்த்து வேறு யாருக்கும் காமன் சென்ஸே இருப்பதில்லை. இடதுசாரி தோழர்கள் தவிர்த்து....
கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு காட்டில் வாழ்பவர், எப்படி டீக்கடை, உணவகம் நடத்த முடியும். அவரே தனது அடையாளத்தை பிறர் அறியக்கூடாது என மறைந்திருக்கிறார்தானே? நாயகனுக்கு இடதுசாரி இயக்கம் சார்ந்த இளம்பெண் தோழர் உதவுகிறார். இந்த இடத்திலும் நாயகனும் தனது அறிவை இழந்துவிடுகிறார்.
வல்சன் என்ற லஞ்சம் வாங்கும் பாத்திரம் படத்தில் வருகிறது. அவர்தான் பின்னாளில் நாயகனின் மச்சான் ஆகிறார். நாயகன் தனது வழியைப் பார்த்துக்கொண்டு செல்பவர். தனது நேர்மை பற்றி யாரேனும் சுட்டிக்காட்டி குத்தலாக பேசும்போது மட்டும் பதிலடி கொடுப்பவர். தனது செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்ட ஆள். புகார் வந்தால் உடனே அங்கு சென்று சோதனையிடுபவர்.
ஒருமுறை, வல்சனின் வீட்டுக்கு செல்லும்போது அவரது மகன் அப்பா ஓட்டலில் வாங்கிய ஏராளமான உணவுப் பொட்டலங்களை வைத்து சாப்பிடுகிறான். அப்போதே அவன் வயதுக்கு மீறிய உடல் பருமனைக் கொண்டிருக்கிறான். அந்த சமயத்தில் கூட பட்டாபி, அப்பாவைப் பற்றியல்ல. சிறுவனின் உடல்நலம் பற்றிய கரிசனையை வெளிப்படுத்தவில்லை. பின்னாளில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விஷத்தன்மையால் சிறுவன் இறந்துபோகும்போது நமக்கு எந்த பரிதாப உணர்வும் தோன்றுவதில்லை. வல்சன் அந்தளவு கடமையை புறக்கணித்து நடந்துகொண்ட ஆசாமி. இதேபோலவே இவரது மாமனார், அவரின் மகள் வினிதா(நாயகனின் ரசம் வைக்கும் மனைவி) ஆகியோர் இருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது, பெரும் பணக்காரராக இருந்து நலிந்துபோன வல்சனின் மாமனாரும் பெரிய நிறுவனத்தின் காசை வாங்கி குற்ற உணர்வே இன்றி ஓட்டல் நடத்தி சம்பாதிக்கிறார். ரசம் வைத்து நாயகனை திருமணம் செய்யும் நாயகனின் மனைவியும் கூட இதற்கு உடந்தை. ஏழ்மையாக இருந்தால் நேர்மை. காசிருந்தால் அநீதியை செய்யலாம் என சொல்கிறார்களா?
படம் சிக்கலான இடத்தை நோக்கி நகரும்போது காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார்கள். பார்க்க சகிக்கவில்லை. நாயகனின் மனைவி பாத்திரத்தில் நடித்தவர் நன்றாக நடித்தாரா என்றால், இல்லை. பார்க்க நன்றாக இருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. பிராண சங்கடம்.... படம் நெடுக ஜெயராம் மட்டுமே ஆறுதல் தருகிறார். மற்றவர்கள் எல்லாம் குருவாயூரப்பன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடித்திருக்கிறார்கள். மனைவி, மாமனார் பெயரில் உள்ள ஓட்டலில் கலப்பட்ட பொருட்கள் உணவு விற்கப்படுவதை நாயகன் கண்டுபிடிக்கிறார். முறைப்படி நடவடிக்கை எடுத்தால் மனைவி, மாமனார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் அல்லவா? கூடுதலாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தயாரித்த உணவில் விஷம் கலந்தது கூட நாயகனின் மனைவி என்ற வகையில் அவரும் கைது செய்யப்படவேண்டுமே? இதற்கெல்லாம் படத்தில் எந்த பதிலும் இல்லை.
படம் மலையாளப்படம். அதை தமிழில் டப் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் டப் செய்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தெரியும். அப்புறம் எதற்கு பாடல்களை டப் செய்வது? பாடல்களை மலையாள மொழியில் விட்டுவிடலாமே?
படத்தை காட்சியாக பார்ப்பதை விட ஹலோ எப்எம் வானொலியில் ஒலிச்சித்திரமாகவே ஒளிபரப்பிவிடலாம். கேட்டாலே போதும். புரிந்துவிடும். அப்படியொரு கருத்தூசிகளை டஜன் கணக்கில் கொண்ட படம்.
கோமாளிமேடை டீம்
நன்றி
தந்தி 1
Release date: 23 August 2019 (India)
Director: Kannan Thamarakkulam
Producer: Abraham Mathew
Music by: Saanand George Grace (score); M. Jayachandran (songs)
Production company: Abaam Movies
கருத்துகள்
கருத்துரையிடுக