பன்பட்டர்ஜாம் எக்ஸ்டென்டட் - பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு















அறிமுகம்...

வீரசுப்பி தாஸ், மெகந்தியா நாட்டை ஆளும் சர்வாதிகாரி. முன்னதாக நாடு ஜனநாயக தன்மையில் இயங்கியது. பின்னாளில், கல்வியறிவு இல்லாத மூடநம்பிக்கை கொண்ட விலங்குகளின் குதத்தை வழிபடும் பெரும்பான்மை மக்களே வீரசுப்பியின் ஆதரவாளர்கள். இதற்காக அவர் போலிச்செய்திகளை மெகந்தீயம் என்ற அரசு டிவி, தனியார் டிவி சேனல்கள் வழியாக பரப்பத் தொடங்கினார். 

ஜூமன் என்ற குதிரைக் கடவுளின் பக்தனாக காட்டிக்கொண்ட வீரசுப்பி, பிறகு தானே ஜூமனின் மறுபிறப்பு என கூறிக்கொண்டு தன்னுடைய சிலைகளை நாடெங்கும் வைக்கத் தொடங்கினார். வீரசுப்பிக்கு பொய்,புரட்டு, பித்தலாட்டம் என்ற தாய்க்கழகம் உண்டு. அவரது தொண்டர்களை அங்கிருந்து பொறுக்கி எடுத்து கலவரப்படைக்கு ஆள் சேர்க்கிறார்.




பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு

2

பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்!

எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே,

நமது நாட்டில் பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் அதற்கு பலியாகி வருகிறார்கள். பரவாயில்லை. பூநூலியர்கள் நோய்த்தொற்றுக்கான சடங்குகளைக்கூறி அதைச்செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இத்தனை நாட்கள் மக்கள் வலியிலும் வேதனையிலும் செத்து விழுந்ததைப் பார்த்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். சடங்குகளை செய்யாவிட்டால், எனது ஆட்சிக்கும் உயிருக்கும் ஆபத்து என மகாபிரஜைகள் சபை கூறிவிட்டது.

நோய்த்தொற்றை எதிர்க்க எனது அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் காணிக்கை கொடுத்து கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. மகாபிரஜை இனத்தவர் கெட்டிக்காரர்கள். அவர்களிடமிருந்து இனாமும் வந்துவிட்டது. பூஜைகளை வெளிநாட்டினர் செய்யவில்லை என சிலர் கூறுகிறார்கள். நாம் நம்புகிறோம் செய்கிறோம். அவர்கள் நம்பவில்லை அதனால் செய்யவில்லை. இதுதான் காரணம்.

நாம் விரும்பும் நாய்க்குட்டி என்றாலும் வாகனங்களில் அடிபட்டு செத்தால் வருத்தமாகத்தானே இருக்கும்? ஆனால் எனக்கு என்னமோ சிரிப்பு வருகிறது. இப்போது கூட எனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் பத்து பாலங்கள் இடிந்து விழுந்தன. அழகான இந்த காட்சியைக் காண இரண்டு கண்கள் போதாது. இதை ஒரு குறை என்று எனது எதிரிகள் புகார் கூறி காறித்துப்புகிறார்கள்.

உண்மையில் பாலங்கள் இடிந்துபோனால் என்ன? அப்போதுதானே புதிய பாலங்கள் கட்டமுடியும்? இதற்கு எனது நண்பர் குந்தாணி உதவுவார். அவரிடம் சிமெண்ட் கம்பெனி, கட்டுமான கம்பெனிகள் உள்ளன. அவற்றின் மூலம், எதிரி நாடான ஈனா நாட்டின் வடிவமைப்பாளர்களை வேலைக்கு வைத்து புதிய பாலங்களை கட்டுவோம். இறுதியாக, திறக்கப்பட்ட பாலத்திற்கு உள்ளூர் சாதித்தலைவர்கள் பெயர்களை சூட்டுவோம். சோற்றுக்கு அலைந்தாலும் வெட்டிப் பெருமைக்கு அலையும் மக்களுக்கு இதுபோதாதா என்ன? இந்த பாலத்தை பயன்படுத்தும் வாகனங்களுக்கு, நடந்து செல்பவர்களுக்கு என தனித்தனி வரிகள் விதித்தால் நாட்டிற்கு வருவாய் கிடைக்கும் என இப்போதுதான் யோசனை பிறந்தது. ஈனா நாட்டின் குடிமக்களை வேலைக்காரர்களாக்கி, அவர்களை அவமானப்படுத்தியுள்ளோம். அதை யாரும் புகழ்ந்து பேசுவதில்லை. எனது புத்திசாலித்தனம் புரியாமல், எதிரி நாட்டுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தோம் என புறணி பேசுகிறார்கள்.

நாட்டில் மழைக்காலம் பிறந்தால் தலைநகரம் முடாலி மூழ்கிப்போகிறது என வதந்திகள் வருகின்றன. இதற்கு, இதை ஆண்ட முன்னாள் அதிபர்களே காரணம். அவர்கள்தான் தலைநகர் முடாலி என அறிவித்தனர். அதனால்தான் இப்போது இப்பிரச்னை. உயரமான மலைச்சிகரமான இமயமலையை தலைநகர் என கூறியிருந்தால வெள்ளப் பிரச்னை வந்திருக்காது.

முந்தைய ஆட்சியாளர்கள், பள்ளத்தில் நீர் தேங்கும் என்ற அடிப்படை கூட அறியாத பாலக புத்திகொண்டவர்கள். அவர்கள் அப்படி என்றால் மக்கள் இன்னும் மட்டியாக உள்ளார்கள். சிறுபிள்ளை போல புகார் கூறுகிறார்களே? வெள்ளம் வந்தால் அந்நீரை குடத்தில் பிடித்து வைத்துக்கொண்டு அதை குடிக்கவேண்டியதுதானே? பஞ்சமாவது தீரும்.

சில வாரங்களுக்கு முன்னர்தான் வறட்சி, குடிநீர் இல்லை என புகார்கள் வந்தன. இப்போது வெள்ளம்? பரமாத்மாவான என்னால்தான் பருவ காலங்கள் வெயில், மழை என இரண்டாக மாற்றப்பட்டிருக்கிறது. இதைக்கூட புரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?

பூஜை நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என வலது உள்ளங்கைக் குழுவைச் சார்ந்த சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். அவர்கள் ஒட்டுமொத்த சாந்து மக்களை அவமானப்படுத்துகிறார்கள். குற்றம்சாட்டுகிறார்கள்.

நோய் வந்தாலும் கடவுள் ஜூமனிடம் பிரார்த்தனை செய்தால் போதும். தலைவலியை விட விரைவாக நோய் தீர்ந்துவிடு்ம். இதில் நம்பிக்கை இல்லையா? அப்படியெனில், அவர்கள் சாந்து மத எதிரிகள். மெகந்தியாவின் தேச விரோதிகள். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மோட்சம் வழங்க உறுதிகொண்டுள்ளேன். அதற்கென மூன்று சட்டங்களை உருவாக்கியுள்ளேன். அவற்றை பூநூலிய கூட்டம் ஜூபாபுகரியில் பெயரிட்டு அழைக்கிறது. சொல்லும்போதே நாக்கு சுளுக்குவதால், ஐயோடெக்ஸ் தடவி பயிற்சி செய்து வருகிறேன். இதில் குற்றம்சாட்டப்படும் கைதிகளுக்கென சிறை நகரத்தை கட்டமைக்க சுப்பிகேர் நிதித்திட்டத்திற்கு சாந்து இன மக்கள் நிதியளிக்க வேண்டுகிறேன்.

மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதை நம் சாந்து மதம் கூட வேதகாலத்தில் கூறியிருக்கிறது. நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.

எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக மாளிகையில் தங்கியுள்ளேன். அப்போது, டிவி சேனல்களைப் பார்த்தேன். அதில் சில மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை சாதி, மதம் பார்க்காமல் சிகிச்சை அளிப்பதைப் பார்த்து நெஞ்சம் புண்பட்டேன். இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.

இந்த மருத்துவர்களில் எத்தனை பேர் சாந்து, மூம் என கணக்கெடுத்து மூம் மருத்துவர்கள் கட்டாய உழைப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன். சாந்து இன மக்களை அதே இன மருத்துவர்கள்தான் காக்க வேண்டும். வேறொருவர் அப்பணியைச் செய்தால் மெகந்தியாவின் புனிதம் கெட்டுவிடும். இனி மெகந்திய மக்களின் சாதி, மதம் பார்க்க ஏதுவாக மெகார் எனும் அடையாள அட்டை அறிமுகப்படுத்த யோசித்துள்ளேன். அவரவர் சாதி, மதம் பார்த்தே கல்வி, மருத்துவம், வீடு, அரசு சலுகை, சிறை தண்டனை வழங்கப்படும்.

இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான் எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளைப் பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு முன்னர் எப்படி பேரிடர்கள் நேர்ந்து அழிவை சந்தித்தோமோ அதேபோல்தான் இம்முறையும் நடந்திருக்கிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கூட இரு புயல்களை சமாளித்து குறைந்த உயிர்ப்பலியோடு நமது நாடு மீண்டுள்ளது. அரசு கட்டமைப்பு செலவே செய்யாதபோதும் மக்களே தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொண்டது வருத்தமாக உள்ளது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிட்டால் பலி எண்ணிக்கை குறைந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இச்செய்தியால், எனது அரசின் அனுமதியின்றியே மக்கள் பிழைத்திருப்பார்களா என்ற பயமும் எழுகிறது. இருந்தாலும் அரசுக்கு சல்லிப்பைசா செலவு இல்லாமல் மக்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது ஆறுதலைத் தருகிறது. இதனால் அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்கு இன்றைய நள்ளிரவே விலை உயர்வை அறிவிக்க வீரசுப்பி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் மக்களுக்கு உயிரோடு இருப்பது எந்தளவு கடினம் என்று புரிய வைக்கமுடியும் என நம்புகிறேன். காலையில் விழித்தெழுந்ததும் அரசின் புதிய அறிவிப்பு அவர்களுக்கு ஆனந்தம் தரும் என நினைக்கிறேன்.

ஒருவகையில் மக்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களால் அரசுக்கு பயன் கிடைக்கும் என்பதால் புயலில் பிழைத்தவர்களை பிடிக்கவில்லை என்றாலும் கூட பாராட்டித் தொலைகிறேன்.

மக்களை காக்கும் பணியை தானாகவே கையில் எடுத்துக்கொண்டு பணியாற்றியவர்களை வேண்டாவெறுப்பாகத்தான் என்றாலும் பாராட்டத்தான் வேண்டும். எதிர்பாராத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் கூட சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவில் இந்த அமைப்புகளையும் எனது அரசு கையகப்படுத்தி கலவரப்படை ஆட்களை அதில் நியமிக்கும் என கூறிக்கொள்கிறேன். இந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட முந்தைய அனைத்து செய்திகளும் வரலாற்றிலிருந்து முற்றாக நீக்கப்படும்.

மூம் இன மக்களைக் கண்காணித்து அவர்களின் வீடுகளை இடிப்பதுதான் முழுநேரப்பணி. அதற்கே உள்ளூர் அமைப்புகள் தன்னை அர்ப்பணித்திருப்பார்கள். இடிப்பதற்கு சூரியன் தாமதமாக வந்தது, வறட்சி, வெள்ளம், விலைவாசி ஏற்றம், நியாய விலைக்கடை இயங்கவில்லை, தலைவலி, மலபந்தனம், மூக்கு நமைச்சல் என ஏதாவது காரணம் கூறிக்கொள்ளலாம். காரணத்தை எழுதி வழங்க, 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். காரணமல்ல, வீடுகளை இடிப்பதே முக்கியம். அதுவே லட்சியம்.

தலைநகரின் வெள்ளநீரில் நடந்து வந்தால் எனது இறக்குமதி ஷூக்கள் நனைந்துவிடும். எனவே, ஹெலிகாப்டரில் அக்காட்சியைக் கண்டேன். பொழுதுபோக்காக இருந்ததால் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன். மீட்புப் பணிக்கு தன்னார்வமாக வந்து பணியாற்றியவர்களை வரவேற்கிறேன். அரசின் பணியை இவர்களே செய்துவிட்டார்கள். பிரமாதம் அல்லவா?

இதில் ஈடுபட்ட தன்னார்வலர்களைப் பிடித்து தலைநகரில் தினந்தோறும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை கட்டாயமாக செய்ய உத்தரவிடவிருகிறேன். இதன் மூலம் அரசை விட சிறப்பாக வேலை செய்தோம் என்ற அகங்காரம் மனதில் குறையும். கழிவுகளை அகற்றுவது புனிதமான பணி என சாந்து மத சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதை பஜனை பாடியபடியே மலம், குப்பைகளை அள்ள வேண்டும்.

மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் அனைவருமே கட்டாய கழிவு நீக்க வேலையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன்மூலம் மெகந்தியாவுக்கு கழிவுவேலைக்கு ஊதியம் வழங்கும் சுமை குறையும்.

பெருந்தொற்று ஏற்படும் முன்னரே தேவையான ஆக்சிஜனை, மருந்துகளை வெளிநாட்டுக்கு ஆர்டர் பிடித்து விற்றுவிட்டோம். ஆனால் இதனை சரியானபடி வெளிநாட்டினருக்கு கொண்டு சேர்க்க படாதபாடு பட்டோம். சிறந்த வணிக வாய்ப்பு, இனி எப்போது கிடைக்கும் சொல்லுங்கள்?

ஆயுதங்களை சகாய விலையில் தரும் நட்பு தேசத்தினருக்கு தடுப்பூசிகளையும், ஆக்சிஜனையும் வழங்குவதுதானே மனிதநேயம்? இதை சிலர் தடுக்க நினைக்கின்றனர். விமர்சிக்கின்றனர்.

நாம் சாந்து மக்கள். மத சூத்திரத்தில் உள்ள அதிதி தேவோ பவ என்பதை மறந்துவிடுகிறோம். எனவே, வெளிநாட்டினர் நோயிலிருந்து விடுபடுவதே நமது மெகந்தியாவின் இலக்கு. அதற்குப் பிறகு ஆக்சிஜனும், மருந்தும் மிச்சமிருந்தால் அதனை எனது நண்பர்களின் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்றுவிட அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன்மூலம் தனியார் துறை எதிர்பார்க்காத வளர்ச்சி பெறும். அதுதானே எனது அரசுக்குத் தேவை. தர்ம மருத்துவமனைகளை முன்னேற்ற அவற்றுக்கு, மெகந்திய சிகிச்சாலயா என பெயர் மாற்றப்படும். இதன்மூலம், அதன் தரம் மேம்படும் என ஜோதிடர் குலவீ கூறியிருக்கிறார்.

அடுத்த மாதமும் மாசாணி வானொலி அலைவரிசையில் எனது செறிவுமிக்க உரையைக் கேட்க காத்திருங்கள். இப்போதைக்கு உரையாற்றி வாய் வலிப்பதோடு தூக்கமும் வருகிறது. விடைபெறுகிறேன் மக்களே!









...............................

..............................




பன் பட்டர் ஜாம்

































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்