இழந்த அலுவலக வேலையைப் பெற நாயகன் செய்யும் அதீத சோதனைகள்!

 

 

 

 




 

 


மிஸ்ஸம்மா
நீலகண்டா
சிவாஜி, லயா, பூமிகா


தனியாக தொழில்நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடிய திறமை உள்ள நாயகன், நண்பர்களால் மோசடிக்கு உள்ளாக்கப்பட வேறு வழியின்றி ஒரு நிறுவனத்தில் கணக்காளனாக வேலை செய்கிறான். அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர், ஒருநாள் அவனது நிறுவனத்திற்கு வருகை தருகிறார் அப்போது, தனது வணிக திட்டங்களைக் கொடுத்து பொதுமேலாளர் பதவியைப் பெற நினைக்கிறான். இயக்குநரோ, அவனை பணிவிலக்கி, வினோதமாக சோதனைகளை செய்யச் சொல்கிறார். அதனால், நாயகனின் குடும்பவாழ்க்கை, தொழில்வாழ்க்கை என அனைத்துமே சிதைந்து போகிறது. உண்மையில் அந்த இயக்குநரின் நோக்கம் என்ன? நாயகனின் வணிக கனவு என்னவானது என்பதே மீதிக்கதை.

படத்தில் வணிக ரீதியான கவர்ச்சிப் பாடல்கள் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி படத்தில் பூமிகா சாவ்லா சிறப்பாக நடித்திருக்கிறார். மிகச்சில பாத்திரங்கள்தான். கதையும் பெரிதாக எங்கும் நகரவில்லை. அதில் சுவாரசியம் சேர்க்கவே பல்வேறு சோதனைகள் என்பதை சேர்த்திருக்கிறார்கள். பூமிகா பாத்திரத்தை தொடக்கத்தில் எதிர்மறையாக தொடங்கி பிறகு நேர்மறையாக முடித்திருக்கிறார்கள்.

வினோத சோதனையில் நாயகன் தனிப்பட்ட மனிதனாக வெல்கிறானே ஒழிய, அவனது மனைவி தோற்றுப்போகிறாள். அவனை சந்தேகப்பட்டு தன் குழந்தையுடன் தனியாக வாழத் தொடங்குகிறாள். திருமண வாழ்க்கையில் நம்பிக்கை எந்தளவு எளிதாக உடைந்துபோகிறது என்பதைக் காட்டுவதாகப் புரிந்துகொள்ளலாம். நாயகனின் மனைவியாக லயா தனது பாத்திரத்தை நன்றாகவே நடித்திருக்கிறார். அதில் பெரிய பழுது ஏதுமில்லை.

பூமிகா சொல்லும் வேலைகளை நாயகன் சிவாஜி செய்வதற்கு அவசியமே இல்லை. ஆனால் செய்கிறார். அவரது குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கிற ஆள். தத்தெடுத்து வளர்க்கிற பெண் குழந்தை இருக்கிறது. மனைவி, மனைவியின் பெற்றோர்,மச்சினி என உள்ளனர். இவர்களுக்கான செலவுகளை நாயகன்தான் ஏற்கிறான். இதெல்லாம் சரிதான். ஆனால், அலுவலகத்தில் வேலையை இழந்தபிறகு எதற்காக சுயமரியாதையை இழந்து பூமிகாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என புரியவில்லை. அந்த இடத்தில் அந்த பாத்திரத்தின் நம்பகத்தன்மை, நேர்மை எல்லாமே தடுமாறுகிறது.

தான் செய்யும் செயல் வழியாக தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது என்பதைக் கூட அறியாமலா நாயகன் பாத்திரம் இருப்பது? இப்படி இருப்பவர் எப்படி வணிக நிறுவனத்தை தொலைநோக்காக வடிவமைத்து நடத்த முடியும்?

பூமிகா பாத்திரத்தை எதிர்மறையாக தொடங்கி நேர்மறையாக முடிக்கிறார்கள். அவர் நடந்துகொண்ட விதத்தை பின்னாளில் ஏன் அப்படி செய்தார் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒருபக்கம்தான். நாயகன் விவகாரத்து கேட்கிறான் என்பதை அறிந்த அவனின் மனைவி தற்கொலை செய்துகொள்கிறாள் என்பதாக கொள்வோமே,,. அப்போது பூமிகா விளையாடிய விளையாட்டின் முடிவு என்ன? எல்லோரும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள் அல்லவே? இந்த விளையாட்டு அதாவது சோதனை சற்று அதீதமானது. அனைவராலும் இதன் விளைவுகளை ஏற்க, சமாளிக்க, மீண்டு வர முடியாது.

திரைப்படம் என்பதால் அதற்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு காட்சிகளை இயக்குநர் தனது நோக்கத்திற்கேற்ப உருவாக்கியிருக்கிறார். நிஜத்தில் படத்தில் உள்ளது போல கச்சிதமாக நடக்க வாய்ப்பு குறைவு. உண்மையில் படம் நிறைவடையும்போது பூமிகாவின் நிறுவனத்தின் தலைவராக நாயகன் மாற்றப்பட்டிருக்கிறார்.

 அவரைச் சுற்றி இருப்பவர்கள் பூமிகாவின் உறவினர்கள். வேறு ஆட்கள் எவரும் இல்லை. உறவினர்களைப் பொறுத்தவரை நிறுவனம் அவர்களது சொத்தாக வேண்டியது. ஆனால், பூமிகாவின் திருமணம் காரணமாக இன்னொருவருக்கு சென்றுவிட்டது. அதை அவர்கள் அபகரிக்க நினைத்தால்....உண்மையில் திரைப்படத்தின் அடுத்த பாகம் இங்கிருந்து தொடங்கக்கூடும். சிறப்பாக இருக்கும்.

இந்த தெலுங்கு திரைப்படம் ஆந்திரத்தின் மாநில அரசு விருதைப் பெற்றுள்ளது. யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. பாருங்கள். காதல், கிளுகிளு பாடல்களைக் கழித்துவிட்டு பார்த்தால் நேரம் மிச்சமாகும்.

காலம் மாறிவிட்டதால், இன்று பார்க்கும்போது கொஞ்சம் சீரியல்தன்மையுடன் இருப்பதாக தெரியலாம். இருந்தாலும் வணிக ரீதியான தெலுங்கு சினிமாவை விட மிஸ்ஸம்மா கதையைச் சொல்லும் நோக்கத்தில் தீவிரமாக உள்ளது.

அமிலச்சோதனை

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்