நாவித காதலனுக்கு தங்கையைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கும் ரவுடி அண்ணன்!

 

 

 

 


 

 

 

 


 

 


விய்யாலாவாரி கய்யாலு
உதய் கிரண், நேகா ஜூல்கார ஶ்ரீஹரி


நகரத்தில் படிக்கும் இளம்பெண்ணான நாயகி, நாயனை காதலிக்கிறாள். ஆனால் திருமணம் தனது ரவுடி அண்ணனின் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என விரும்புகிறாள். இதற்காக நாயகன், அவளது அண்ணனை சந்திக்க செல்கிறான். அவனால், திருமணத்திற்கான சம்மதத்தைப் பெற முடிந்ததா இல்லையா என்பதே கதை.

பொதுவாக, தெலுங்குப்படங்களில் நிலப்பிரப்புத்துவ இயல்பை, ஆண்டான் அடிமை சமாச்சாரங்களை விசுவாசம், நேர்மையுடன் தொடர்புபடுத்தி பெருமையாக கூறுவார்களே ஒழிய, சாதி, வர்ணாசிரமம், சனாதன படிநிலையின் கொடூரங்களைக் காட்ட மாட்டார்கள். காதல் படத்தில் இருந்தாலும் அதை பெற்றோருக்கு கூறி அவர்களை ஒப்புவித்து திருமணம் செய்வதற்கு பாடுபட்டு இரண்டரை மணிநேர படத்தை ஓட்டுவார்கள்.

டூ ஸ்டேட்ஸ் நாவலில் சேட்டன் பகத், இந்திய சமூகத்தில் ஆண், பெண்ணைக் காதலிப்பதோடு முடிந்துவிடாது. அவனை பெண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பெண்ணை, ஆண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பிறகுதான் திருமணம் நடைபெறும் என பகடியாக எழுதியிருப்பார். அதேதான் இங்கும் நடக்கிறது. அதே கதையை இந்தப் படத்திலும் பார்க்கலாம்.

பொதுவாக உதய்கிரண், தெலுங்கில் இயல்பாக நடிக்கும் நாயகன் என கேள்விப்பட்டேன். ஆனால் இதில் நாயக துதி ரொம்பவே அதிகம். நாயகன், நகரில் சலூன் வைத்து நடத்துகிறான். வெளிநாடு சென்று சிகை வடிவமைப்பு கலையைக் கற்று வந்து சொந்தக்கடை வைத்திருக்கிறான். அவன் வேலைக்குப் போகும்போது, கல்லூரி பெண் ஒருவரை பாலியல் சீண்டலில் இருந்து காப்பாற்றுகிறான். அதுதான் நாயகனுக்கான சண்டை அறிமுக காட்சி. அதில் நாயகியை ஒரு யோகா மேட் போல பயன்படுத்தி (உதாரணத்திற்கு கர்லாக்கட்டை சுழற்றுவது போல) அடியாட்களை அடிக்கிறான். அப்புறம் என்ன, உடனே நாயகிக்கு நாயகன் மீது டன் கணக்கில் காதல் வந்து தொலைக்கிறது. விடுதிக்குச் சென்றபிறகுதான், அவளது அம்மா கொடுத்த காதணி காணாமல் போனது தெரியவருகிறது. அதை,  நாயகன் பின்னாளில் திருப்பிக் கொடுக்கிறான். அப்போதே நாயகி அவனை நகரில் பல புறங்களில் தேடி அலைந்திருக்கிறாள். எதற்கு காதலிக்கத்தான்.

நாயகன் நகரில் சலூன் வைத்து தொழில் செய்தாலும் சிந்தனை என்ற வகையில் குடும்பம் சார்ந்த ஆள். காதல் என்பதில் பெரிய ஆர்வம் இல்லாத ஆள். திடீரென ஒரு பெண் வந்து காதலிப்பதாக சொல்ல, அவளுக்கு தன்னுடைய வீட்டு முகவரி என போலியாக ஒரு முகவரியைக் கொடுத்து சந்திக்கச் சொல்லி அனுப்புகிறான். அங்கு நாயகி சென்று விசாரிக்கிறாள். அதை நகைச்சுவை என காட்டுகிறார்கள். ஆனால் அது நகைச்சுவையாக உருவாகவில்லை. பிறகு, நாயகி வந்து நாயகனிடம் காதலைச் சொல்லும்போது, கோவிலுக்கு வரச்சொல்லி திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறான். காதல் உண்மை. திருமணம். எனது அண்ணனின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என கூறுகிறாள். சரி என ஒப்புக்கொள்பவன், அவளது கிராமத்திற்கு செல்கிறான்.

ஜீப்பில் காதலியின் ஊருக்குச் செல்லும் நாயகன், கூட வரும் நண்பனுக்கு தனது காதல் கதையைக் கூறுவதாக படம் தொடங்கி நகர்கிறது.

ஆந்திரா என்றால் படித்தவர்கள் வாழும் பகுதி. தெலங்கானா என்றால் படிக்காத, கிராமத்து முரட்டு மனிதர்கள் வாழும் பகுதியாக காட்டுவது திரைப்பட வழக்கம். இந்தப்படமும் அதே திசையில் பயணிக்கிறது. பெரிய மாறுதல் இல்லை.

ஶ்ரீஹரி நாயகியின் அண்ணன். சிறப்பாக நடித்திருக்கிறார். முடிவெட்டுவதை கிராமங்களில் பெரிய மரியாதையான தொழிலாக பார்ப்பதில்லை. எனவே, ஶ்ரீஹரி நாயகன் செய்யும் வேலையை தெரிந்துகொண்டு முடிவெட்டுபவன் என அவமானப்படுத்தி பேசுகிறார். கூடுதலாக அவரது வீட்டில் வேலை செய்யும் நாவிதரை உதாரணம் காட்டி பேசுவது பயங்கரம்.

நகரில் எப்படியோ, கிராமங்களில் முடிவெட்டுபவன் என்றால் எப்படி மாப்பிள்ளையாக ஏற்பது என கோபம் கொள்கிறார். ஶ்ரீஹரி அந்த கிராமங்களில் இருக்கும் இரண்டு பெரும் நிலக்கிழார்களில் ஒருவர். இவருக்கு எதிராக வெங்கல ரெட்டி என்பவர் இயங்குகிறார். தன் தங்கையை முடிவெட்டும் ஒருவனுக்கு, நாவிதனுக்கு மணம் செய்து கொடுத்தால் ஊரில் நம் மானம் மரியாதை என்னவாகும் என ஶ்ரீஹரி யோசிக்கிறார். அவரின் உயிரைக் காப்பாற்றி நாயகன் நெருக்கமாகிறான். பிறகு, நாயகனின் பெற்றோரை நச்சி கல்யாணத்திற்கு ஒப்புதல் வாங்குவது படத்தின் இன்னொரு பகுதி.

நாயகனின் அப்பா, ரவுடியாக இருக்கவேண்டாம். அரசியல் அதிகாரத்தைப் பெற்று எம்எல்ஏ ஆகுங்கள். அப்படி செய்தால், எனது மகனை உங்கள் தங்கைக்கு மணம் செய்து கொடுக்கிறேன் என்கிறார். அவர் முன்னாள் நீதிபதி. நேர்மையான ஆள். அதாவது அப்படி அவர் நம்புகிறார். ஶ்ரீஹரி அவரை தனது ஊருக்கு அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்க்கையைக் காட்டுகிறார்.

பொதுவாக தெலுங்குப் படத்தில் நாயகன் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படுவது மிகவும் குறைவு. சமகாலத்தில் சாதி, மதம், சமூக படிநிலை சார்ந்த படங்கள் வருகின்றன. சமகாலத்தில் நடிகர் சுகாஸ் அதுபோல சில படங்களில் நடிக்கிறார். ஆனால், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் சாதி, மதம் சார்ந்த விஷயங்களை கவனமாக தவிர்த்துவிட்டு காதலை மட்டும் பேசுபொருளாக கொண்டதாக மாறிவிட்டன. அரசியல் அதிகாரத்தை நிலக்கிழார்கள் பெறுவது மாற்றத்திற்கான வழி என படத்தில் ஶ்ரீஹரி கூறுகிறார். படம் நிறைவுபெறுகிறது. இதில் சில சிக்கல்கள் உள்ளன.

கத்தி, வெடிகுண்டுகளை தான் வாழும் கிராமத்து மக்களிடையே பயன்படுத்தி அவர்களைக் கொல்லவும் தயங்காத ஒருவரை அரசியல் அதிகாரம் அடைய உதவுவது, சரியான தீர்வாக தெரியவில்லை. சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்க கல்வியை வழியாக காட்டினால் கூட நன்றாக இருந்திருக்கும். ஶ்ரீஹரி இறுதியில் கூட நான் சொல்கிறேன். எனக்காக வெங்கல ரெட்டிக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார். இந்த இடத்தில் கூட மக்களை சிந்தித்து வாக்களியுங்கள் என்று கூறவில்லை. அவர் தனது தங்கை வாழ்க்கைக்காக அமைதியாக விட்டுக்கொடுத்து செல்ல முடிவெடுத்துவிட்டார். அதை ஊர் மக்கள் ஏற்கவேண்டுமென வற்புறுத்துகிறார். மறைமுகமாக உள்ள உண்மை அதுதான்.

உண்மையில் இந்த இடத்தில் ஶ்ரீஹரி பாத்திரம் வலுவிழந்துபோகிறது. அவரை படத்தின் இறுதியில் முதன்மை நாயகன் போல காட்ட முயல்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் காட்டினாலும் அதெல்லாம் உண்மை கிடையாது. அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கும், அவரது குடும்பத்தின் நலத்திற்குமானதுதான். திரைப்படம் பரிதாபமாக தோற்றுப்போவது இந்த இடத்தில்தான். கூறும் செய்தி இப்படி தகராறாக இருக்கிறது என்றால் எடுத்த காட்சிகளில் ஏதாவது புதுமை உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

ஶ்ரீஹரி ஏராளமான ஆட்களை அடித்து உதைத்து பிறகு வசனம் பேசியே வில்லனின் மனதை மாற்றுவதற்கு, முன்னமே வில்லனை சந்தித்து பேசி இருந்தால் மக்கள் காயம்பட்டு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்காதே? அது சாத்வீகமான இயல்பு என கூறலாம். வில்லனின் ஆட்களை அடுத்து துவைத்து நிராயுதபாணியில் அவரை நிற்க வைத்து புத்திமதி கூறுவதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது? ஒருவேளை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முன்னமே வில்லன் திருந்திவிட்டால், இறுதியில் சண்டைக்காட்சி வைக்க முடியாத பிரச்னை இயக்குநருக்கு இருக்கிறது.

நாயகனுக்கு சண்டைக்காட்சி அறிமுகம். நாயகிக்கு தொப்புள் குழியைக் காட்டி பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுவதாக அறிமுகம். கேமரா நாயகியின் இடுப்பிலிருந்து மெல்ல மார்பு முகம் என மேலேறுகிறது. ஸ்ஸ்... என்னவொரு கலைத்தன்மையான ஒளிப்பதிவு.... நாயகன் நகரில் வாழ்கிற நவீன கல்வி கற்றவன், அவன் சந்திக்கும் காதலியின் அண்ணன் பிற்போக்கான ஆள். இருவரும் உலகைப் பார்க்கும் விதம் வேறு. படத்தில் இறுதிவரை அவர்களுக்கு இடையில் எந்தவித உரையாடலுமே நடக்கவில்லை. அப்புறம் எப்படி ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது நடந்தேறும்?

சாதி பற்றி பேசுவது, வன்முறையை தவிர்ப்பது ஆகிய அம்சங்களில் மட்டுமே படம் தேறுகிறது. ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், சாதி மேலாதிக்கம் ஆகியவற்றை அப்படியே பின்பற்றியுள்ள மற்றுமொரு கரம்மசாலா தெலுங்குப்படம்.

ஆணாதிக்க வன்முறைவெறி பிளஸ்

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்