ஒரே மெகந்தியா ஒரே ஒரு குரல்! - பன் பட்டர் ஜாம் எக்ஸ்டென்டட்



















1

பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வோமே?





எனதருமை நாட்டு மக்களே , வணக்கம். என்னை சந்திப்பதில் குரலைக் கேட்பதில் மகிழ்வீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நீங்கள் தாக்குப்பிடித்து எனது நாட்டில் உயிரோடு வாழ்கிறீர்கள் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்புங்கள். அப்படியே உங்களை ஆளும் பரமாத்மாவான என்னை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுங்கள். கரம் கூப்பித் தொழுங்கள்.

மாசி மகம் எனும் நன்னாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனது ஆட்சியில் ஆறுகளை, ஏரிகளை எனது தொழிலதிபரான நண்பர்களுக்கு குத்தகை விட்டுவிட்டேன் என விமர்சனங்கள் வருகின்றன. அதை யாருக்காக செய்தேன்? எல்லாம் உங்களுக்காகவே.

ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு அவை இல்லாமல் போனதால்தான், மக்களுக்கு பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்க அபாயம் குறைந்திருக்கிறது. இந்த தசாப்த சீர்திருத்தங்களுக்கு முன்னர் நீர்நிலைகளோடு கொண்டாடும் பண்டிகைகள் எப்போதும் நமது மெகந்தியாவில் உண்டு. இனிமேல் அவற்றை எனது வலைப்பக்கத்தில் மெய்நிகர் வடிவில் கொண்டாட வசதி செய்துள்ளேன்.

ஜில்பவாசம் எனும் பழக்கத்தை மக்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி குடும்பத்தை விட்டுவிட்டு ஆற்றின்கரையில் ஒருமாதம் தங்கியிருப்பார்கள். இவர்களை அங்கிருந்து விரட்டவே ஆற்று நீரை பெரு நிறுவனங்களுக்கு வழங்கினேன். கைநிறைய இனாம் கிடைத்தது. இன்பமான வசதிகளும் கிடைத்தது.





எனது பெயரான சுப்பி தாஸ் என்பதை உடைகளில் அச்சிட்டு விற்க ஏற்பாடு செய்துள்ளேன். மக்கள் இதை வாங்கவேண்டும். இதன்மூலமே நான் கடவுள் என்பது உறுதியாகும். உடைகளை வாங்காதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சொத்து வரி முந்நூறு சதவீதம் உயர்த்தப்படு்ம். குறிப்பாக மூம் மதத்தினருக்கு வரி அளவு 500 சதவீதம் என்பதை தனியாக கூறவேண்டிய கடமை உள்ளது.

நாட்டின் நீர்நிலைகளை அரசு பாதுகாப்பது கடினமாக உள்ளது. எனவே, அதை இனி எனக்குப் பிடித்த நண்பர்களின் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டேன். இதனால், அரசுக்கு நதிகளை பாதுகாத்து பராமரிக்கும் பெரிய சுமை நீங்குகிறது.

மக்களும் கூட வரி கொடுத்தது போல காசு மீந்தால் குடிநீரை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால், பசுமாட்டின் மூத்திரம் இருக்கிறதே? மக்களுக்கு பொறுப்புணர்வும் தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியத்தையும் தந்தையின் நிலையில் நின்று, எனது அரசு நிறைவேற்றும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

நீர் , உலகளவில் முக்கியமான வணிகப்பொருள். அதனை நாம் விற்காமல் வீணடித்து வருகிறோம். பாரஸ் கல்லில் இரும்பு படும்போது பொன்னாகிவிடும் என்பார்கள். குடிநீர் நிறுவனங்கள் நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும்போது, மெகந்தியா அரசின் புகழ் எல்லையின்றி பரவுகிறது.

இது மக்களாகிய உங்களுக்கு நிச்சய மகிழ்ச்சி தரும். நமது இயற்கை வளங்களால் பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெறும்போது நாம்தான் இதற்கு காரணம் என்ற பேருவகையால் மெகந்தியா நாட்டு மக்கள் மகிழ்வார்கள் என்று எனக்குத் தெரியும்.

விருந்து போடும் வீட்டுக்காரி பட்டினியால் படுப்பாள் என முத்துப்புலவர் பாடல் எழுதியதை எனதருமை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஆறு, ஏரி, குளம் காணோம் என சிலர் கூப்பாடு போடுகிறார்கள். அதில் தொழி்ல் நடப்பதால்தான் இனாம் கிடைக்கிறது. இழந்த ஆற்றை சிவப்பு மிளகாய் நிறுவனம் மூலம் கிராபிக்ஸ் செய்துகொண்டால் அதைப் பார்த்து மகிழலாமே?

மக்களின் திருப்திக்காக வேண்டுமென்றால், திட்டங்களுக்கு பழங்காலத்தில் கொள்ளை, கொலை, கற்பழிப்பில் ஈடுபட்ட முதல்தர மேல்சாதி தலைவர்கள் பெயரை சூட்டுகிறோம். நூலியன் வம்சத்தைக் காப்பாற்றுவதே எங்கள் ஒரே நோக்கம்.

வெளிநாட்டு ஏழை முதலாளிகள் விமானத்தில் இங்கு பறந்து வந்து ஆற்று நீரை புட்டியில் அடைத்து விற்று, வளம் பெற்று சொகுசுகார்களிலும், விமானங்களில் வணிக பிரிவிலும் பயணிப்பது மெகந்தியாவுக்கு அல்லவா பெருமை? இப்படி நாம் எளிமையாக பிறருக்கு விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றி ஒலைச்சுவடிகளில் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்களை வேத காலத்திற்கு கூட்டிச் சென்று அவர்களை சாதிக்கு ஏற்ப புனிதமடையச் செய்வதே எனது அறப்பணி. அதுவே ஆட்சிப்பணியும் கூட.

உலக நீர்நாள் மாசி மாதத்தில்தான் வருகிறது. அன்றைய தினம், நான் கூறும் நேரத்தில், மக்கள் அனைவரும் பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் புட்டிகளை வாங்கி ஒரே கல்பில் குடிக்கவேண்டும். பிறகு காலி புட்டிகளை ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டு சாதி்ச் சண்டையில் மகிழவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மெகந்தியாவின் மகிழ்ச்சியை இணையம் வழியாக உலகம் அறியவேண்டும்.

அடுத்து கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆலைகளில் தயாராகும் நீரை காசு கொடுத்து பேரமின்றி வாங்கிக் குடித்து அவர்களை ஆதரிக்கவேண்டும். இதன்மூலம் அரசுக்கு தேவையான வரி கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு இனாம் கிடைக்கும்.

மெகந்தியாவில் சம்பளக்காரர்களின் மாதசம்பளத்தில் 30 சதவீதம் வரி பிடித்தமாகிறது. உடனே, பெரு நிறுவனங்கள் மேல் அதிக பிடித்தம் என்று சிலர் புகார் கூறுகிறார்கள். இதுபோன்று நாட்டின் அமைதியை குலைக்குமாறு உண்மையை பேசுகிறவர்களுக்காகத்தான் ஜூபா சட்டத்தை உருவாக்கினோம். விரைவில் புகார் கொடுத்தவர்களை விசாரணையின்றி சிறையில் அடைத்து பன்னாட்டு தொழில் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இந்த சிந்தனைகளை எனது அணுக்க நண்பரான சோமாரியின் தனிவிமானத்தில் பயணத்தபடியே யோசித்தேன். உடனே நோட்டில் எழுதிவைக்க விரும்பினேன். விரும்பினாலும் அதை செய்ய முடியவில்லை. எனக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது. அதுவும் நல்லதுதான். படிப்பறிவு இல்லையென்றாலும் கூட இளமையில் வறுமை என உணர்ச்சிகரமாக பேசி தேர்தலில் வெல்ல முடிந்திருக்காது. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகளைக் கூட யோசித்து வைத்தேன். நானே படிக்கவில்லை. ஆனால் எனது மக்கள் படித்தால், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு தோன்ற வாய்ப்புள்ளதே?

குளம், குட்டை, ஏரி, கிணறு, நதி என அனைத்துமே மக்களுக்கானது என கங்கம் மாநிலத்திலிருந்து முஜித் என்பவர் கூறியிருக்கிறார். தசாப்தத்தில் ஒரே புத்திசாலியாக பிற எனக்கே ஆலோசனையா? . ஏழைத் தாயின் மகனுக்கு யோசனை சொல்லுமளவு அவருக்கு ஓய்வு நேரம் கிடைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சினிமா, கவர்ச்சி செய்திகள், மதுபான காட்சிகள் என அரசு, தனியார் டிவி மற்றும் இணையத்தின் பெருச்சாளிகளுக்கு எலும்புத்துண்டுகளைக் கொடுத்தும் பயனில்லையா? எனது குடிமக்களில் ஒருவர், எனக்கே பாடம் கற்பிக்கிறார் எனில் என்னவொரு அவலம்?

எனவே , அன்பிற்குரிய குடிமகன் முஜித்தை கட்டாய உழைப்பு முகாமுக்கு அழைத்து சென்று 23 மணி நேர உழைப்பில் ஈடுபடுத்த தொழிலாளர் துறை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன். அரசின் தலைவரான என்னைவிட அதிகம் யோசிப்பவர்கள் தாராளமாக எனக்கு ஆலோசனைகளை கூறுங்கள். அவர்களை உளவு அமைப்பினர் கண்டுபிடித்து, ஜூபா சட்டத்தில் வழக்கு தொடர்வார்கள். எனது சிறப்பு சேவைத் தொண்டர்கள் புல்டோசர் மூலம் அறிவுரை கூறியவர்களின் வீடுகளை நிர்மூலமாக்கி தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது.

இவரல்லாத மற்ற இருவர் ஜூபிதா, மகதீஷ் இவர்களில் ஜூபிதா நேரடியாக செயலில் இறங்கி எனது வேலையை சுலபமாக்கிவிட்டார். ஜூபிதா, வறண்டுபோன ஏரியை மேம்படுத்த மழைநீர் வடிகால் கால்வாயை அமைத்தார். மகதீஷ், தனது ஊரில் நிலத்தடி நீரை பெருக்க மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதனால் அரசு எளிதாக பன்னாட்டு பெருநிறுவனங்களை அழைத்து அவர்களது ஊரில் குளி்ர்பான தொழிற்சாலையைத் தொடங்குங்கள் என கூற முடியும். கூடவே டிம்பர் தொழிற்சாலையையும் அமைக்கலாம்.

எனது கட்சிக்கு தேர்தல் பிரசார நிதி தந்த உள்ளூர் தொழிலதிபர்களை இதில் பங்காளிகளாக்க முடியும். இதுபோல மற்ற மெகந்தியர்களும் அரசுக்கு உதவினால், எனக்கு உதவிய தொழிலதிபர்களுக்கு, பிஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கை எளிதாக தொடங்கி அதிவேகத்தில் பணத்தை இருப்பு வைக்க முடியும். உங்கள் வாழ்க்கை மேம்படாவிட்டால் என்ன? பணக்கார ர்களின் வாழ்க்கை செழிக்க உதவுவதால் பெரிதாக என்ன இழந்துவிடப் போகிறீர்கள்? தசாப்தங்களாக ஏழை மக்களாக உள்ள நீங்கள் இழக்க என்ன இருக்கிறது? இப்படி இருப்பது உங்கள் விதி. அதை செய்தது எனது மதி.

இனி நிலம் உங்களுடைய இருந்தாலும் நீர் என்பது எனது நேச தொழிலதிபர்களின் சொத்து. எனவே மழை பெய்யும்போது அதனை பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்துங்கள். மழைநீர் அரசின் சொத்து என்பதால், பிடிக்கும் மழைநீரை மீட்டர் மூலம் அளவிட்டு அதற்கென தனி வரி விதிக்க நிதியமைச்சரிடம் கூறியுள்ளேன். உங்கள் மகிழ்ச்சியே எனது தேவை.

குடிநீர் பற்றாக்குறை என நண்பர்களின் ஊடகங்களில் புகார் சொல்லாதீர்கள். அவர்களை வழிக்குக் கொண்டு வர எங்களிடம் நிறைய சட்டங்கள், விருதுகள் உள்ளன. எனவே, ஏரி, குளங்களை உங்கள் சொந்த உழைப்பை கொண்டு வளப்படுத்தி அரசுக்கு உதவுங்கள். இன்று உங்களுடையது, நாளை மற்றொருவருடையதாகிறது என்ற பாகவதத்தை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் சாப்பிடும் உணவில் அரசு வாகனம் சகதியை தெளித்தாலும் அது உங்கள் நன்மையின் பொருட்டே என்பதை உணருங்கள். நமது நாட்டின் மண் உங்கள் உணவோடு சென்று ரத்தத்தில் கலந்தால் அதைவிட எளிய மெகந்தியர்களின் தேசப்பற்றுக்கு வேறு பலம் வேண்டுமா?

எனதருமை இளைஞர்களே, உங்களது வேலைவாய்ப்பின்மைக்கு நீங்களே காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? கல்வி, வேலை, சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச சம்பளம் என அரசு உங்களுக்கு அத்தனையும் தருவதற்கு மனமில்லை. ஒவ்வொருவரின் முதுகையும் தொட்டு தடவி நூலைத் தேடுவது எனது வழக்கம். இப்படித்தான் வங்கியில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. நூலில்லாதவர்களைத் தொட்டால் தீட்டாகிவிடுமே? ஆல்ப்ஸ் மலை குடிநீரை குடிக்கும் எனக்கு, பிணங்களை எரிக்கும் சுங்கா ஆற்றில் குளிக்கும் கட்டாயம் ஏற்பட்டு விடும்.

இளைஞர்களே, நான் இளமையில் தேநீர் விற்று பிழைத்தேன். நீங்களும் அதுபோல பட்டங்களை வீசி எறிந்துவிட்டு எளிய மெகந்தியனாக மாறுங்கள். தெருவில் நின்று பக்கோடா, அதிரசம், முறுக்கு, பானிபூரி, கச்சோரி சுடுங்கள். அப்படி இல்லையா எனதமு நண்பர்களின் எண்ணெய் ஆலையில் மாத ஊதியத்திற்கு சேருங்கள். அதனால் வரிவருவாய் அரசுக்கு நிலையாக கிடைக்கும். எனவே உங்கள் பாதை இப்படித்தான் இருக்கவேண்டும்.

இதைவிட்டு வேலையில்லை என கிளம்பினால் புலனாய்வு, அமலாக்கத்துறையினரின் நெருக்கடிகளால் உங்களால் தினசரி சோற்றுக்கு அரிசி வாங்க கூட காசில்லாமல் தவிக்க நேரிடும். புதிதாக யோசிக்கிறேன் என்று தவறுகளை செய்து அரசை எரிச்சல் ஊட்டாமல் தொன்மை மெகந்தி வழிகளில் செயல்பட்டு ஆதரவளியுங்கள்.

நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும். வேறெதையும் கேட்கவில்லை. பிறகு உங்கள் வாழ்க்கை, கழுத்தில் பெல்ட் கட்டிய நாய் போல தானாக எங்கள் கைகளில் வந்துவிடும். உங்கள் பிள்ளைக்கு படிப்பு வரவில்லையென கவலைப்படாதீர்கள். அவர்களை தொழிற்சாலைக்கு அனுப்பி சம்பள பணத்தை தரவே நுழைவுத்தேர்வுகளை உருவாக்கியுள்ளேன்.

இந்த சீர்திருத்தம் மூலம் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவதால் அவர்களும் வரி பயனர்களாக மாறுவார்கள். வங்கிக் கணக்கைத் தொடங்கி சாதனை படைப்போம். நூலிய வரலாற்றை படித்து ஒப்பித்து இளமைக்காலங்களை வீண்டிக்க வேண்டாம் என்பது நள்ளிரவில் சுவரில் சிறுநீர் கழிக்கும்போது எனக்கு தோன்றிய அதிரடி சிந்தனை. தேவையான செய்திகளை பால்ஸ்அப்பிலேயே அனுப்புகிறேன். வாசியுங்கள்.

அரசு வழங்கும் சலுகைகளை பெற்று வெளிநாட்டுக்கு சென்று நன்றாக வாழும் நூலிய மெகந்தியர்களைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு ஊக்கமூட்டலாம். ஆனால் அவை அனைவருக்குமானதல்ல.

இளமையில் வேலைக்கு செல்வதால், சிறுவர், சிறுமிக்கும் வருமானம் கிடைக்கும். குடும்பமும் சோறு தின்னும் வாய்ப்பு பெறுகிறது. இதை சாத்தியப்படுத்த ஐந்து கிலோ, பத்து கிலோ அரிசி பைகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளேன். இதனை யோசித்துப் பார்க்க கூட வேண்டாம். நான் சொல்லுவதை நீங்கள் கேட்டு நடந்தால் போதும். அதை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்.

மாட்டறிவியல் தினத்தன்று சிலர் மெகந்தியா நாட்டு விஞ்ஞானிகளை இளைஞர்கள் அறியவேண்டுமென கூறியுள்ளனர். நமது ஒட்டுமொத்த அறிவியல் உலகமே பசுமாட்டின் பின்புறம்தான். அதன் மூத்திரம், சாணி ஆகியவற்றில், ஆல் இன் ஆல் சர்வரோக நிவாரணி மருந்துகளை தயாரிக்கலாம். எனது சாமியார் நண்பர், மூத்திரத்தில் சோப்பு, ஷாம்பூ, பிஸ்கெட், நெய் கூட தயாரித்து வியப்பளித்து வருகிறார். என்னே சாமர்த்தியம். இதற்கு உலக அமைப்புகளின் அனுமதி தேவையில்லை. வேதகால ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்ட அறிவியல் செய்திகள் என உதவியாளர் கூறினார். அதை அப்படியே நம்புகிறேன். எனவே கட்டாயம் நீங்களும் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை.

மீண்டும் வானொலியில் சந்திப்போம். எனது செறிவான கருத்துகளைக் கேட்க காத்திருங்கள்!

நன்றி!



பன் பட்டர் ஜாம்

விக்டர் காமெஸி



































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்