சமையல் எண்ணெய்யை எரிபொருள் கண்டெய்னரில் ஏற்றிச்சென்ற சீன அரசு நிறுவனம்!

 

 

 

 

 


 


சமையல் எண்ணெய்யும், எரிபொருட்களும் ஒரே கன்டெய்னரில்.....

சீனாவில் புலனாய்வு செய்தி என்பது அரிதிலும் அரிதானது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதிலுமுள்ள ஊடக செய்திகளைக் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட செய்திகளை பரப்ப வேண்டுமெனில் பரப்புகிறது. இல்லையெனில் அவற்றை நீக்கிவிடுகிறது. அந்த வகையில், அண்மையில் சமையல் எண்ணெய்யை எரிபொருள் லாரியில் கொண்டு சென்றது தொடர்பான செய்தி ஒன்றை வெய்போ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியது. பெய்ஜிங் நியூஸ் என்ற ஊடகம், சீன அரசு நிறுவனம் ஒன்று, தனது எரிபொருள் லாரியில் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்யை சுகாதாரமின்றி கையாண்டதை புலனாய்வு செய்து கட்டுரையாக நாளிதழில் பிரசுரித்தது. அதுதொடர்பான வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டது.

அதில் வேடிக்கை, சுகாதார சிக்கலுக்கு உள்ளானது சீனாவின் அரசு நிறுவனம். அதன் பெயர் சினோகிரெய்ன். இந்த நிறுவனம் தொடர்பான விசாரணைகளை சீன அரசு தொடங்கியது. இப்படி தொடங்குவதற்கு வெய்போவில் பயனர்கள், அரசை குறைசொல்லி பதிவுகளை இடத்தொடங்கியதே முக்கிய காரணம். முறையாக விசாரணை செய்து தவறுகளை தீர்ப்பதை விட, முன்னதாக இணையத்தில் உள்ள எண்ணெய் விவகாரம் தொடர்பான செய்திகளை, வீடியோக்களை நீக்கவே அரசு பெரிதும் மெனக்கெட்டது. அந்த வகையில் பெய்ஜிங் நியூஸ் செய்தியாளர் ஹான் ஃபுடாவோவின் சமூக வலைத்தள கணக்கு மூடப்பட்டது. லாரிகளை பின்தொடர்ந்து வந்த சமூக வலைத்தள பயனர்களின் செய்திகள் நீக்கப்பட்டன. வெய்போ ஆப், இதற்கு சமத்காரமாக ஆப்பை மேம்படுத்துகிறோம் என பதில் கூறியது.

இந்த விவகாரம் அத்தோடு ஓயவில்லை. பெய்ஜிங்கிலுள்ள வணிக இதழான கைஷின் இதழ், சரக்கு கப்பல்களில் சமையல் எண்ணெய், ஆபத்தான எரிபொருட்கள ஆகிய இரண்டையும் ஒன்றுபோலவே அலட்சியமாக கையாள்கிறார்கள் . எவ்வித சுகாதார விதிகளும் பின்பற்றப்படுவதில்லை என்று செய்தி வெளியிட்டது. உடனே இந்த செய்தியும் இணையத்தில் தணிக்கை செய்யப்பட்டது. தேசியவாத செல்வாக்கு பெற்ற இணைய ஆளுமையான சைமாநான் , பெய்ஜிங் நியூஸ் செய்தியாளர்கள், வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சீனா மீது அவதூறு பரப்பும் உள்நோக்கம் இருக்கிறது என அரசு ஆதரவு வாதத்தை வெய்போவில் பதிவிட்டனர். உடனே அரசு ஆதரவு இணைய கூலிப்படைகளும் களத்தில் இறங்கி, சைமா நான் கூறியதை வழிமொழியத் தொடங்கின.

சீனாவில் எழுபத்தைந்து சதவீத சமையல் எண்ணெய், கண்டெய்னர்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சென்று அவை புதிய பாக்கெட்டுகளுக்கு மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சுகாதாரமில்லாத எண்ணெய் விவகாரம் என்பது 2015ஆம் ஆண்டு தொடங்கி நாட்டில் புகைந்து வருகிறது. இன்னும் முழுமையாக இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அந்த விவகாரமும் இதைப்போலவே சமூக ஊடகங்களில் மௌனமாக்கப்பட்டது. நடப்பு காலமும் கடந்த காலத்தை அப்படியே பிரதிபலித்துள்ளது.  
2008ஆம் ஆண்டு பால் பவுடரில் மெலாமைன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.  இதனால், அதை பயன்படுத்திய மூன்று லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டன. அதில் ஆறு குழந்தைகள் மரணத்தை சந்தித்தன. அடுத்த ஆண்டே சீன அரசு, உணவு பாதுகாப்பு விதிகளை இறுக்கியது. 2010ஆம் ஆண்டு இதற்கான கமிஷன் உருவானது. கலப்படம், வேதிப்பொருள் இருந்தால் தவறு செய்த நிறுவனங்கள், நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படியாக சட்டங்கள் மாற்றப்பட்டன.  அதிபர் ஷி ச்சின்பிங் இதற்கான முயற்சிகளை எடுத்தார். மறுக்க முடியாது. ஆனால் அரசு மீது இழந்துபோன மக்களின் நம்பிக்கை சமையல் எண்ணெய் விவகாரத்தில் பெரிதாக மாறவில்லை.

2023ஆம் ஆண்டு, இன்சைட் சீனா, இதழில் கால்வாசி மக்கள் மட்டுமே உணவு பாதுகாப்பு விவகாரத்தில் திருப்தி அடைந்ததாக பதில் கூறினர்.  பெரிதாக நம்பிக்கை இல்லாத பொருட்களில் ஒன்றாக பத்தாவது இடத்தில் இருந்தது வேறு ஒன்றல்ல. சமையல் எண்ணெய்தான்.

எகனாமிஸ்ட்
 https://www.economist.com/china/2024/07/18/fury-erupts-in-china-over-a-food-safety-scandal

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்