பற்பசையைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

 

 

 

 

 

 



 

 



அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி

பற்பசைகளில் மூலிகை, உப்பு, கிராம்பு, கரி என பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எதை வாங்குவது?

வேப்பிலை, புதினா, கிராம்பு ஆகிய சுவை கொண்ட பற்பசைகள் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். எனவே,அதற்காகவே அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றால் பற்களுக்கு பெரிய நன்மை இல்லை. அப்படி இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. புதிதாக வரும் சில நிறுவனங்கள் பிரியாணி செய்யத் தேவைப்படும் மசாலாக்களை வைத்தே பற்பசை தயாரித்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் சென்று ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார்கள். அவையெல்லாம் உண்மை கிடையாது. பற்பசையின் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். அவ்வளவுதான். ஒரே பற்பசை என சலிப்பு தந்தால், இப்படியான மூலிகை, உப்பு, கரி என டிரெண்டிங் கொண்ட பற்பசைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

மற்றபடி பற்பசையில் ஃப்ளூரைடு அவசியம். இந்த வேதிப்பொருள் பற்சிதைவிலிருந்து பற்களைக் காக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு பெருநிறுவனங்கள், சுதேசி நிறுவனங்கள் இரண்டுமே ஏராளமான பொருட்களை பற்பசையில் கலக்கி விளம்பரம் செய்து விற்கின்றன. அவற்றை அடையாளம் கண்டுகொள்வது நல்லது. இப்போது, வேதிப்பொருட்கள், அதன் பயன்களைப் பார்ப்போம்.

பொட்டாசியம் நைட்ரேட், ஸ்டானஸ் ஃப்ளுரைட் ஆகியவை பற்சிதைவைத் தடுக்கிறது. கரி, பற்களுக்கு குறைந்த பளபளப்பையே தருகிறது. ஈறுகளில் உள்ள அழற்சியைத் தீர்க்கிறது. பேக்கிங் சோடா, கால்சியம் கார்பனேட் பற் கறைகளை நீக்குகிறது.

குழந்தைகளுக்கான பற்பசையில், ப்ளூரைட் அளவு சற்று குறைவாக இருக்கும். அதை அவர்கள் விழுங்கிவிட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை வாசகமும் அச்சிடப்பட்டிருக்கும். பற்பசையில் உள்ள சோடியம் லாரல் சல்பேட், நுரைக்கான பொருள். அதிகமாக பயன்படுத்தும்போது, வாயில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். டிரைகுளோசன், ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பளபளப்பு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள், பற்களின் எனாமலை அரிக்கின்றன. செயற்கை சுவையூட்டிகள், ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. புரப்பலீன் கிளைகோலும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்துகிற ஒன்றுதான்.

பற்பசைகள் முறையாக பாதுகாப்பு தர பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அப்படியான சான்றிதழ் இல்லாத பற்பசைகளைப் பயன்படுத்தினால் பற்களுக்கு ஆபத்து நேரும். நேர்மையற்ற நிறுவனங்களைத் திருத்துவது, அறிவியல் விழிப்புணர்வே இல்லாத இந்திய சமூகத்தில் மிக கடினம். சமூக வலைத்தளங்களில் படித்த மருத்துவரே மூடநம்பிக்கைகளை உடைத்து பேசினாலும், மூளையை கழற்றிவைத்துவிட்டு இயங்கும் சினிமா பிரபலங்களுக்கே ஆதரவாக மக்களும் ஊடகங்களும் இருப்பார்கள். அப்படியான செய்தியைக்கூட ஆராய்ந்து எழுதாமல் காசு கிடைக்கும் என சினிமா ஆட்களுக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். எனவே, மக்களே விழிப்புணர்வோடு யாரையும் நம்பாமல் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகம் இருந்தால் மாற்று மருத்துவர் அல்ல முறையாக மருத்துவக் கல்வி பெற்ற மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

எப்படி வாங்குவது?

பற்பசையில் 1000 பிபிஎம் அளவுக்கு ப்ளூரைட் இருப்பது அவசியம். பாக்கெட்டில் ஐடிஏ அங்கீகார முத்திரையை சோதியுங்கள். இதெல்லாம் அவசியம். உங்களுக்கு பற்களில் பிரச்னை இருந்தால், பல் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு அதற்கு ஏற்ப சிறப்பு பற்பசை பரிந்துரைகளைப் பெற்று மருந்தகங்களில் வாங்கிப் பயன்படுத்தலாம். பொதுவான பற்பசை என்றால், ப்ளுரைட் வேதிப்பொருள் இருக்கவேண்டும். ஒருவர் பயன்படுத்தும் பற்பசை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றது என கூற முடியாது. பிரச்னைகளைப் பொறுத்து பற்பசைகளும் மாறும்.

மூலக்கட்டுரை
மருத்துவர் ஆதோஷ் லால்
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்