பொதுவாழ்க்கையை மதம் கட்டுப்படுத்தும்போது, மதச்சார்பற்றவராக இருப்பதே நல்லது - எழுத்தாளர் எலிஃப் சாஃபாக்

 

 




 

நேர்காணல்

எலிஃப் சாஃபாக்

ஆங்கில துருக்கி பூர்வீகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சாஃபாக். தனது பத்தொன்பதாவது நூலை எழுதியிருக்கிறார். அந்த நாவலின் பெயர், தேர் ஆர் ரிவர்ஸ் இன் தி ஸ்கை.  நாவலின் கதை தொன்மைக்கால மெசபடோமியா, விக்டோரியா காலகட்ட இங்கிலாந்து எனச் சுற்றி நவீன கால துருக்கியில் வந்து நிறைவு பெறுகிறது. இந்த விஷயங்களை ஒன்றாக இணைக்கும் புள்ளியாக நீர் உள்ளது. ஹெவி மெட்டல் இசை கேட்டபடியே நாவல் எழுதும் பழக்கம் கொண்டவரிடம் பேசினோம்.

புதிய நாவலில், வரலாறு, நிலப்பரப்பு என இரண்டுமே கலந்துள்ளது. இப்படியான அம்சங்களை தொடர்ச்சியாக எடுத்து எழுத என்ன காரணம்?

எழுத்தாளராக எனக்கு கதைகள் மட்டும் பிடித்தமானதில்லை, மௌனமும் பிடிக்கும். வரலாற்றில் மக்கள் மௌனமாக்கப்பட்ட இடங்கள் உண்டு. துருக்கியில் கூறப்பட்ட கதைகள் பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கோணத்தில் அமைந்தவைதான். நமக்கு கூறப்படும் பெரும்பான்மை கதைகள் இப்படியான பின்னணி கொண்டவைதான். அதிகாரமற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண் ஆகியோரின் கதைகள் மறந்துபோனவையாக உள்ளன. கூறப்படாத கதைகளைக் கூறுவதில் எனக்கு ஆர்வமுண்டு. மௌனம், இடைவெளி, நேர்ந்த சம்பவங்கள் இப்படித்தான் கதையாக கூறவேண்டிய தன்மையுடவையாக மாறுகின்றன. கேட்கப்படாதவர்களின் கதைகளை கேட்க வைக்க இலக்கியத்தில் வாய்ப்புள்ளது. அப்படித்தான், ஒற்றைத் துளி நீரில் முழு உலகம் கட்டப்பட்டதை எழுத முயன்றேன். இந்த பணி பெரும் சவாலாகவே இருந்தது.

எதற்கு நீரை எடுத்துக்கொண்டீர்கள்?

எனக்கு 52 வயதாகிறது. இந்த வயதில் கூட கதைகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் இயற்கை மீது ஆர்வமுள்ளது என்பது மட்டுமே. நுகர்வோராக நம்மை கருதிக்கொண்டு அதிகளவு நுகர்வு செய்யும்போது நமது மதிப்பு கூடுகிறது. நாம் இதை கேள்வி கேட்கவேண்டும்.  நாம் இந்த இயற்கை சூழலில் மிகச்சிறிய பங்கு வகிக்கிறோம். இங்கு மரங்களுக்கும் குரல் உண்டு. நான் சூழல் பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்டவள். காலநிலை மாற்றத்தைப் பற்றி பேசும்போது, நன்னீர் தட்டுப்பாடு பற்றியும் அவசியம் பேசியாக வேண்டும். உலகம் முழுக்க பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக குடிநீரை வெகுதொலைவிலிருந்து சுமந்துகொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக பாலின வன்முறை வேறு அதிகரித்து வருகிறது. இங்கு அனைத்து விஷயங்களும் தொடர்புடையதுதான். இந்த நாவல், நான் நீருக்காக எழுதிய காதல் கவிதை.

துருக்கியில் உங்களது சிறுவயது அனுபவங்களைக் கூறுங்கள்.

நான் பிரான்சில் பிறந்தேன். பிறகு எனது பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட, அம்மா துருக்கியிலுள்ள அங்காராவிற்கு வந்துவிட்டார். இடமாற்றம், வீடு என்பது எனக்கு முக்கியமாகப்பட்டது. எனது அம்மாவும், பாட்டியும் ஒருவருக்கொருவர் வேறுபட்ட ஆளுமைகள் என்றாலும் அனுசரித்து செல்லும் விவகாரத்தில் அக்கா, தங்கை போன்றவர்கள். எனது பாட்டிக்கு கல்வி அறிவு இல்லை. ஆனாலும் கூட பெண் சுதந்திரத்தை உறுதியாக நம்பினார்.
அம்மா, விவாகரத்து பெற்று கையில் பணம் இல்லாமல் படிப்பு இல்லாமல் வேலை இல்லாமல் துருக்கி வந்தபோதும் பாட்டி கவலைப்படவில்லை. அம்மாவை, அவர் பல்கலைக்கழகத்திற்கு படிக்க அனுப்பினார். என்னை பாட்டி கவனித்துக்கொண்டார். பாட்டியின் அனுசரணை எங்கள் வாழ்க்கையை மாற்றியது. பெண்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதை முக்கியமானதாக கருதுகிறேன். நம்புகிறேன்.

நீங்கள் உங்களை ஆன்மிகரீதியானவராக, மதச்சார்பு கொண்டவராக, மதச்சார்பற்றவராக என மூன்றும் கொண்டவராக நினைக்கிறீர்களா?

ஒருங்கிணைக்கப்பட்ட மதத்தின் அடிப்படையில் நான் மதச்சார்பு கொண்டவள் அல்ல. ஆன்மிகரீதியான தன்மை தனிப்பட்ட ஆர்வத்தை அடிப்படையாக கொண்டது. நம் அனைவரின் பயணமும் வேறுவகையானது. கைரேகைகளை ஒன்றுபோல என்று கூறமுடியாது அல்லவா? மதம் என்பது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற, பொது வாழ்க்கையை கட்டமைக்கிறது எனும் பட்சத்தில் மதச்சார்பற்றவராக இருப்பது முக்கியம். குறிப்பாக நீங்கள் பெண்ணாக இருக்கையில்.....

நிலையான விஷயங்கள் என்பதை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். நம்பிக்கையும், சந்தேகமும் ஒரே நேரத்தில் தோன்றுவதாக கூறுகிறீர்கள். இதை சற்று விளக்கி கூற முடியுமா?

நவீன காலத்தில் கசப்புணர்வு கொண்டவர்களாக, பாகுபாடு கொண்டவர்களாக மாறியிருக்கிறோம். கதைசொல்லிகளாக உள்ள ஒருவருக்கு எதிராக ஒன்று என முன்வைக்க எதிர்தரப்பில் ஏதுமில்லை. அவர்களுக்கு முன்னால் மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் மனிதர்களாக என்ன விஷயங்களை பகிர்ந்துகொள்கிறோம் என்பதே முக்கியம். பன்மைத்துவம், பல்வேறு கலாசாரங்கள் என்பது வெளிப்புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் முக்கியமானவை. மதிக்கத்தக்கவையே.

பன்மைத்தன்மை எனது ஆன்மாவிலும் இருக்கவேண்டுமென விரும்புகிறேன். ஒன்றுபோல உள்ள விஷயங்களை விட வேறுபாடுகளிலிருந்துதான் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். என்னைப்போல யோசிக்கும், உடை உடுத்தும் ஆட்கள் என்னைச் சூழ இருப்பது பிடிப்பதில்லை. அது தன்னை மையப்படுத்திய தன்மையை ஊக்குவிக்கிறது. இணையம் பெருகியுள்ள சூழலில், அறிவுசார்ந்த பரிமாற்றங்களை இழந்துவிட்டோம். எனக்குத் தெரியாது, பயணத்தில் இருக்கிறேன். கற்றுக்கொண்டு இருக்கிறேன். வாழ்க்கையைக் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்களை எனக்குப்பிடித்திருக்கிறது.


இளம் எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


பள்ளிகளில் பேசும்போது ஆறு அல்லது ஏழு வயது கொண்ட சிறுவர்கள் சிறுமிகள் துணிச்சலோடு இருக்கிறார்கள். அவர்களிடம் இங்கு யார் கலைஞர்கள் அல்லது கவிஞர்கள் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டால், சிறுமிகளின் கரங்கள் வேகமாக உயருகின்றன. ஆனால் அவர்கள் மேல்நிலைக் கல்விக்கு செல்லும்போது,  பேசவே விரும்புவதில்லை. அவர்களில் யாரும் கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஆக விரும்புவதில்லை. நாம்தான் அவர்களிடம் எழுந்து நிற்காதே, ஒன்றாக சேர்ந்து நில் என்று சொல்லி அவர்களின் புதுமைத்திறனை, நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம். இளம் எழுத்தாளர்களுக்கு நான் கூறுவது இதுதான். இப்படி நேருமாறு விட்டுவிடாதீர்கள். உங்கள் மனதிலுள்ள தோட்டத்திற்கு சென்று அதை மறு உருவாக்கம் செய்து கட்டுங்கள்.

 
நமிதா தேவிதயா
டைம்ஸ் ஆப் இந்தியா 30.6.2024

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்