வணிக நடைமுறைகளை நகல் செய்தால் வெற்றி பெற முடியாது! - ஷி ச்சின்பிங்















ஒ ருமுறை நாம் பறக்கத் தொடங்கி கடலைத் தாண்ட முயன்றால் தட்பவெப்பநிலை, உலக நாடுகளின் சந்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போராடி பிழைத்து சமாளித்து நிற்க வேண்டும்.




வணிகத்திற்கு ஏற்ற மாதிரி நிங்டே, ஷியாபு, ஃபுவான், ஃபுடிங் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள இரண்டு பகுதிகளும் வணிகத்திற்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. நிங்டே, ஷியாபு ஆகிய இருபகுதிகளும் நாம் செல்லவேண்டிய திசையைக் காட்டுகின்றன. அந்த வழியில் நாம் செல்லவேண்டுமெனில், அதற்கு நம் உழைப்பு தேவைப்படுகிறது. சூழலின் அவசரத்தைப புரிந்துகொண்டு நிலையை அங்கீகரிப்பது அவசியம்.




வணிகத்திற்காக பின்தங்கியுள்ள பகுதியை திறந்து வைப்பது என்பது எளிதல்ல. காலம், இடம், உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், வணிக மாதிரிகள் என நிறைய சவால்கள் உள்ளன. திறந்த முறையைப் பின்பற்றும் பிற நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அப்படியே நகல் எடுப்பது உதவாது. நம்முடைய நடைமுறை சார்ந்த சூழல்களைக் கருத்தில் கொண்டு வணிக முறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.




வணிகத்திற்காக ஒரு பகுதியை திறக்கும்போது, முதலீட்டு சூழல், சர்வதேச அளவில் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்புவது ஆகியவற்றை முன்னமே கவனமாக தீர்மானித்து களத்தில் இறங்கவேண்டும். நீர், மின்சாரம், எரிவாயு, சாலை, பாலங்கள் ஆகியவை உள்ள இடத்தில் தொழில்நிறுவனங்களை தொடங்கி போட்டியிடுவது எளிதல்ல. மேற்சொன்ன அம்சங்கள் கொண்ட பகுதிகள் வளர்ச்சியடைந்தவை. இவை பெரும்பாலும் நகரங்களாக இருக்கலாம்.




எந்த ஆதாரங்களும் இல்லாமல் கீழிருந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கி முதலீட்டு சூழலை உருவாக்குவது கடினம். இந்த முறை நமக்கு பொருந்தாது. நம்முடைய பொருளாதார நிலைக்கு இந்த திட்டம் உதவாது. 

நம்மிடம் வன்பொருட்கள் இல்லாதபோது, மென்பொருட்களை நம்பவேண்டும். தொழிலுக்கான சிறந்த சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள முயல வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவில் தொடங்கியுள்ளனர். அவர்கள் நம்மீது சொல்லும் முதல் புகார், திறனின்மை. அனுமதியை பெற ஏராளமான ஆணையங்கள், அதிகாரிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இந்த வகையில் உள்ளீடு, வெளியீடு, செலவு ஆகியவற்றை வைத்து ஒப்பீடு செய்தால், நம்மால் பிற பகுதிகளோடு போட்டியிட்டு வெல்ல முடியாது.




இப்படியான நிலையில் சூழலைக் கட்டமைக்க முயலலாம். பெரிய நகரங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களைப் போல நம்மால் எதையும் உருவாக்க முடியாது. ஆனால், நமது அணுகுமுறையில் புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்தலாம்.




புதிய தொழில்களை தொடங்க முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டப்படி எளிய நடைமுறை, குறைந்த கட்டணம், ஒரே சாளரத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆகியவற்றை சாத்தியப்படுத்தலாம். இந்த நேரத்தில் உள்ளூர் சட்டங்கள், சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம். இப்படியான மென்பொருள் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினால், வறுமையில் பின்தங்கிய பகுதியை வலிமையாக்கி வானில் பறக்க வைக்க முடியும்.




வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்காதபோது, அந்த நிறுவனங்கள் நம் நாட்டிற்கு வரமாட்டார்கள். இங்கு ஏற்கெனவே இருப்பவர்களும் தொழில் செய்வதை நிறுத்திக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களை, அரசு தனது நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். அயல்நாட்டு நிறுவனங்கள், தயாரிப்பு நிர்வாகங்களை உலக நடைமுறைக்கு ஏற்றபடி வைத்துக்கொள்ளலாம்.




வணிகத்திற்கு உதவும்படியான மென்பொருள் சூழ்நிலையை நாம் உருவாக்கினால், கடலைத் தாண்டி நாம் பறக்க முடியும். நாம் கூற விரும்பும் செய்தியை பிற மக்களுக்கு கூறலாம். இதன் விளைவாக, பல்லாயிரம் தொலைவுக்கு அப்பாலிலிருந்து வரும் மக்கள் நம் நாட்டில் முதலீடு செய்து தொழில் நிறுவனங்களைத் தொடங்குவார்கள்.










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்