சிவப்பு இறைச்சியில் கசியும் திரவம், கிராமபோன் கண்டுபிடிப்பாளர், ராட்சஷ சிலந்தி - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
மாட்டிறைச்சியில் இருந்து வெளியாகும் சிவப்பு நிற திரவத்தின் பெயர் என்ன?
மாட்டிறைச்சியை வெட்டி வைத்த பிறகு அதிலிருந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று கசியும். அது ரத்தமோ என பலரும் பதற்றமடைகிறார்கள். அது ரத்தமல்ல. அதன் பெயர் மையோகுளோபின். இது நீரில் கரையக்கூடியது.
இந்த வேதி திரவம், உடலில் உள்ள ஆக்சிஜனை தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை செய்கிறது. ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு, நான்கு ஆக்சிஜன் மூலக்கூறுகளை கவர்ந்திழுத்து சேமித்துக்கொள்கிறது. ஆனால் மையோகுளோபின் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறை மட்டுமே சேமிக்கிறது.
இரண்டின் பணிகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபின், உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆனால், மையோகுளோபின் தற்காலிகமாக ஆக்சிஜனை சேகரித்து வைத்துக்கொள்கிறது. கடலில் உள்ள உயிரினங்களான திமிங்கலம், சீல் ஆகியவற்றின் உடலில் மையோகுளோபின் அதிகளவில் காணப்படுகிறது. இவை. மூச்சு விடுவதற்காக சிலமுறை மட்டுமே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மற்ற நேரங்களில் மையோகுளோபின் சேகரிப்பு உதவுகிறது.
பிட்ஸ்
சிவப்பு இறைச்சியை ஒருவர் சமைக்கும்போது, அதன் சிவப்பு நிறம் பழுப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், இறைச்சியிலுள்ள எலக்ட்ரான்கள் இழக்கப்படுவதுதான். அதைப்போலவே, இதில் பதப்படுத்த நைட்ரைடுகளை சேர்க்கும்போது, ரோஸ் நிறத்தில் காட்சியளிக்கும்.
2
மனிதர்களை இரையாக கொள்ளும் அளவுக்கு சிலந்திகள் இல்லையா?
சிலந்திகளை அந்தளவு மந்திர தந்திரத்தில் உருவாக்கினால் கூட அவற்றால் சுவாசிக்க முடியாது. உடல் எடையை அதன் கால்களால் தாங்கி இயங்க முடியாது. சிலந்திகள், தேளின் இனத்தைச் சேர்ந்தவை. அவை அவற்றின் மேல்தோல் மூலமே சுவாசிக்கிறது. பிரமாண்ட அளவுக்கு உடல், கால்கள் மாறினால் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும். உடல் எடையை நூறு மடங்கு அதிகரித்தால், அதன் கால்களையும் அதேயளவு பலப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாதபோது, உடல் எடையே அதைக் கொன்றுவிடும். ஏதாவது ஆய்வகத்தில் இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து ராட்சஷ சிலந்தி வரும்வரை சிஜியில் அவற்றைப் பார்த்து பயப்படுவோம். கவலையை விடுங்கள்.
3
கிராமபோனை கண்டுபிடித்தது யார்?
உடனே பஸ்ஸரை அழுத்தி, தாமஸ் ஆல்வா எடிசன் என கூறாதீர்கள். அது தவறான பதில். ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த கண்டுபிடிப்பாளர் எமிலி பெர்லைனர் என்பதே சரியான பதில். எடிசன் கண்டுபிடித்தது என்னவென்றால், அது சிலிண்டரை அடிப்படையாக கொண்ட போனோகிராப். பெர்லைனர், 1887ஆம் ஆண்டு கிராமபோனை, காப்புரிமைக்கு பதிவு செய்தார். பத்தே ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து என புகழ் பெறத் தொடங்கியது கிராமபோன்.
இஎம்ஐ நிறுவனத்தின் பகுதியாக கிராமபோன் கம்பெனி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. தொடக்கத்தில் உலோகத்தில் ரெக்கார்டுகள் உருவாயின. பிறகுதான், அதை மாற்றி வினைலில் ரெக்கார்டுகள் வந்தன. வேகமும் கூட 33 1/3, 45 ஆர்பிஎம் இருவேறு வேக அளவுகள் செயல்பாட்டில் இருந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக