மனைவியை முன்னாள் காதலனுக்கு விட்டுத்தர முயலும் கணவன்!

 

 

 

 


 




 

 



தில் பசந்த்

வெப் சீரிஸ்

இன்ஃபினிட்டம்

இயக்கம் பிரசாத் பெஹ்ரா

நடிப்பு பிரசாத் பெஹ்ரா, எப்சிபா


எப்சிபா, ஒரு இளைஞனைக் காதலித்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கோ வேலை இல்லை. வேலை தேடிக்கொண்டு வந்தால், என் அப்பாவிடம் பேசலாம் என்று கூறுகிறாள். ஆனால் எதிர்பார்த்தது போல வேலை கிடைக்கவில்லை. அதேசமயம், எப்சிபாவுக்கு, சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஒருவரோடு மணமாகிறது. எப்சிபாவுக்கு அதில் விருப்பமில்லை. இருந்தாலும் அவளது அப்பாவுக்கு வேலை இல்லாத காதலனுக்கு மணம் செய்து தர விருப்பமில்லை.

இப்படியான சூழ்நிலையில், அப்பாவியான அரசு ஊழியன் வாழ்க்கை என்னவானது, எப்சிபாவின் காதல் திருமணத்திற்குப் பிறகு என்னவானது என்பதை தொடர் விவரிக்கிறது யூட்யூபில் ஒருமணிநேரமாக தொடர் மாற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிடலாம்.

பிரசாத், அப்பாவியான அரசு ஊழியராக நடித்துள்ளார். சாதிப்பற்று கொண்ட அதேநேரம் அவரது வேலையில் நியாயமான ஆள். ஆபீசுக்கு வேலையாக வருபவர்களிடம் கூட பெண் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் அளவுக்கு, திருமணத்திற்கு துடிப்பவர். அப்படி இருப்பவருக்கு எப்சிபா மணமுடித்து வைக்கப்படுகிறார். காதல் என்பது வேறு. கல்யாணம் என்பது வேறு.

தெலுங்கில் அமாய்க்குடு என வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பிரசாத் தன் மனைவி இன்னொருவரை காதலிக்கிறாள் என்பதை ஹோட்டலில் நேரடியாக பார்க்கும் காட்சியில் புரிந்துகொள்கிறார். இவ்வளவு காலம் ஆகி கல்யாணம் ஆகியும் அது நமக்கு பொருந்தாமல் போய்விட்டதென... இன்னொரு காட்சியில் அவர் மனைவி முன்னாள் காதலனோடு உணவருந்திவிட்டு வருகிறார். அப்போது, சாப்பிடாமல் மனைவிக்காக காத்திருப்பவர், மனைவி என்ன சாப்பிட்டார் என கேட்டுத் தெரிந்து வைத்துக்கொள்கிறார். அந்த உணவு பதார்த்தம் பெயர்தான், தொடரில் தலைப்பு. தில் பசந்த்.

பிரசாத் பாத்திரம் பேசும் வசனங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வேடிக்கை வேதனை என இரண்டையும் ஏற்படுத்துகிறது. எப்சிபாவின் அப்பா, மகளின் காதலுக்கு இன்னும் சற்று நேரம் கொடுத்திருக்கலாம். மகளாவது காதலுக்காக போராடி இருக்கலாம். இந்த இரண்டுமே அங்கு நடப்பதில்லை. பதிலா புதிய உறவாக பிரசாத் வருகிறார். அவருக்கு மனைவியின் மனதில் வேறு ஒருவர் உள்ளார் என்பதை அறியாத மனிதர். திருமணத்திற்கு முந்தைய காதல், மனைவியின் மனதில் அப்படியே இருக்கிறது என்பதை பிரசாத் உணர்கிறார். அப்போதும், முன்னாள் காதலனிடம் பேசி மனைவியைக் கூட அனுப்பிவைக்க நினைக்கிறார். இங்கு, முக்கியமான விஷயம் ஒன்றுண்டு.

தொடரில் யாரும் வில்லன் கிடையாது. அவரவருக்கான சூழ்நிலையில் இன்னொருவர் நேர்மறையாக, மற்றொருவர் எதிர்மறையாக இருக்கிறார். இந்த தொடரில் எளிதாக முன்னாள் காதலன் பாத்திரத்தை வில்லனாக யாவருமே கருதலாம். ஆனால். தொடரின் இறுதியில் அந்த பாத்திரம் தியாகம் செய்வதாக மாறுகிறது. அதை அப்படி கூட கூற முடியாது. சற்று முதிர்ச்சி அடைகிறது. மாறியுள்ள சூழல்களைப் புரிந்துகொள்கிறது எனலாம். வேலை இல்லாமல் இருப்பதை காதலியின் மீது குற்றச்சாட்டாக வைத்து சண்டை போடுபவர், ஒரு கட்டத்தில் தனது காதலியை மணந்தவர் யார் என பார்த்து அந்த ஒரே சந்திப்பில் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார்.

எப்சிபாவுக்கு திருமணத்திற்கு பிறகு தான் முந்தைய காதலைத் தொடர்ந்தால் உருவாகும் இழிவு தெரிகிறது. அதேநேரம், தனக்கு பிடிக்காத பாலுறவில் ஈடுபடுவது கூட தெரியாத கணவருடன் வாழப் பிடிக்கவும் இல்லை. தனக்கான வாழ்வை தேடுவது என விடாப்பிடியாக இருக்கிறாள். இறுதியாக முன்னாள் காதலன் கூறும் வார்த்தைகளைக் கேட்டு கணவர் பிரசாத் பற்றிய புரிதல் அவளுக்கு வருகிறது. தொடரில் எப்சிபா பாத்திரம் ஒருவித குழப்பத்திலேயே உள்ளது. காதலின் சுதந்திரமா, திருமணத்தின் பாதுகாப்பா என தடுமாற்றம் உள்ளது.

திருமணமான பிறகு எப்சிபாவின் அப்பா, பிரசாத்தின் வீட்டுக்கு வருகிறார். மகளிடம் உரையாடுகிறார். அந்த காட்சி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இங்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் எது சிறந்தது என்று வாதிட விரும்பவில்லை. இருதரப்பிலும் நல்லது அல்லது என பேச நிறைய விஷயங்கள் உள்ளன. மகள் அப்பா கட்டாயப்படுத்தி வைத்ததாக குற்றம்சாட்ட, அப்பா மகளின் காதல் எந்தளவு வலிமையானது என கேள்வி கேட்கிறார். மகளால் ஏதும் கூற முடிவதில்லை.

முன்னாள் காதலன், எப்சிபா, பிரசாத் என மூன்று பாத்திரங்களுமே நிறைய குறைகளைக் கொண்டவர்கள்தான். ஆனால், அடிப்படையான அற உணர்ச்சியைக் கொண்டவர்கள். பிரசாத்தின் வெகுளித்தனம் எப்சிபாவின் கோபத்தை தணிக்கிறது. தான் திருமண உறவில் இருந்து விடுவித்துக்கொண்டு போகவிருப்பதைக் கூட கோர்வையாக கூற முடியாமல் தடுக்கிறது. ஏதோ ஒரு மனிதரின் மூர்க்கமான யோசிக்காத செயல் இன்னொரு மனிதரின் வாழ்க்கையை பலி வாங்குகிறது. இது புனைவு. நிஜத்தில் பிரசாத், தனது மனைவியை முற்றாக இழப்பதே நடந்திருக்கும்.

இன்று எவருக்கும் மனதில் ஈரமே இருப்பதில்லை. கனிவும் சுரப்பதில்லை. இந்த நிலையில் பிரசாத் போன்ற அப்பாவியான ஆட்கள் வாழ்வதற்கு இடம் ஏது? பொது நலனுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் ஆட்களை, முழு சமூகமே இளப்பமாக பார்க்கிறது. அவதூறு செய்கிறது. உண்மையில் இப்படியான ஆட்களே இல்லாத நிலையில், நமது சமூக வாழ்க்கை நடக்குமா? யோசித்துப் பாருங்கள்.

பிரசாத்திற்கு சாதி பெருமிதம் இருக்கிறது. உடல் உறவு பற்றி அறியாமை இருக்கிறது. உடை உடுத்துவதும் கூட பெரிய நாகரிகம் என கூற முடியாது. ஆனால், அவர் தான் செய்யும் வேலையில் நேர்மையாக இருக்கிறார். அதில் லஞ்சம் பெறுவதில்லை. நண்பனோ, அவனது மனைவிக்கு உடல் நலமில்லை என்றாலோ அதற்கு உதவுகிற குணமுண்டு. முன்னாள் காதலனிடமிருந்து திரும்பி வந்த மனைவி எப்சிபா அவரை மாற்றக்கூடும். தனக்கு ஏற்ற கணவராக மேம்படுத்திவிடக்கூடும். அப்போது தில்பசந்தை இருவருமாக சேர்ந்து உண்பார்கள். அப்போது ருசி எதில் கூடுதலாக இருக்கும் உண்ணும் உணவிலா, அவர்கள் சேர்ந்திருக்கும் மகிழ்ச்சியிலா?

முக்கோண உறவு பாலம்

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்