பெல்ஜியத்தில் நேரும் போர் அவலக் காட்சிகள்!

 

 

 

 

 


 

 

 

எனது சிறிய யுத்தம்
லூயிஸ் பால் பூன்
ஆங்கிலத்தில் பால் வின்சென்ட்
தமிழில் பெர்னார்ட்சந்திரா
காலச்சுவடு

மொத்தம் 136 பக்கங்களைக் கொண்ட பிளெமிஷ் நாவல். பெல்ஜியத்தில் பேசப்படும் மொழி பிளெமிஷ். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜெர்மனி நாட்டு ராணுவம் பெல்ஜியம் நாட்டை போரிட்டு கைப்பற்றுகிறது. அந்த சமயத்தில் அங்குள்ள நகரத்தில் வாழும் எழுத்தாளர், அங்குள்ள வாழ்க்கை, மக்களின் மனநிலை, சுயநலம், ஆவேசம், கோபம், கையறுநிலை, வறுமை, அபத்தம்,பேராசை என பல்வேறு உணர்வு நிலைகளை காட்சிபடுத்தியது போல எழுதியிருக்கிறார். நூலை ஆழமாக புரிந்துகொள்ள பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்பு அரசியலை அறிந்துகொள்வது முக்கியம். இதன் வழியாக, எழுத்தாளர் கூற விரும்பும் விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

இந்த நாவலில் தொடர்ந்து வரும் பாத்திரங்கள் ஏதும் இல்லை. அத்தியாயங்கள் தோறும் புதிய பாத்திரங்கள் சிறுகதை போல தோன்றி மறைகிறார்கள். மரபான நூல்களைப் படித்தவர்களுக்கு நிறுத்தற்புள்ளியே இல்லாமல் விவரிப்புகள் செல்கிறதே என வாசிக்கையில் பதற்றம் கூடும். அதை தவிர்க்க முடியாது. நூல் முழுக்கவே இப்படித்தான் உள்ளது. இதுவரை படித்த முறைகளை மறந்து எழுத்தாளரின் அலைவரிசைக்கு மாறிவிட்டால் வாசிப்பதில் பிரச்னை இருக்காது. இல்லையெனில் குழப்பமாகிவிடும். யாரோ  சிலரின் பேராசையால், முடிவால், எளிய மக்களின் வாழ்க்கை எப்படி படுகுழிக்குள் சிக்கிக்கொள்கிறது என்பதுதான் நாவலின் மையப்பொருள். அதை எழுத்தாளர் வித்தியாசமான கதை சொல்லல் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாவலின் இறுதிப்பகுதியில் சூனியக்காரி ஒருத்தி பாத்திரம் வருகிறது. மக்களை வதைப்பது, தொந்தரவு செய்வது வசைபாடுவதுதான் வேலை. ஆனால் அவளின் இறுதி வார்த்தையைக் கேட்கும்போது, போரின் அவலத்தை வேறு எப்படி விவரிக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த நாவலில் எழுத்தாளர் தன்னைப் பற்றி கூறுவது போல கூட ஒரு அத்தியாயம் உண்டு அதில், இலக்கிய விமர்சனம், அரசின் சர்வாதிகாரம், மக்களின் வெகுஜனப் பார்வை என நிறைய விஷயங்களை பகடி செய்கிறார். இறுதியாக மக்களை உதைக்கவேண்டும். அவர்களுக்கு மனசாட்சி வரும்வரை என முடிக்கிறார். காலத்திற்கும் பொருந்துகிற அற்புதமான எழுத்து என கூறலாம்.

போர் பற்றிய பகடியான எழுத்தைக்கொண்ட நாவல். ஆனால் இதை வாசிக்கும்போது ஆழமான வலியை மனதால் உணரமுடிகிறது. மொழிபெயர்ப்பாளர் பெர்னார்ட்சந்திரா, நூலை சிறப்பாக மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். போர் பற்றிய அபத்தமான அவலமான நகைச்சுவை நாவலை படிக்கவேண்டுமென நினைப்பவர்கள், இந்த நூலை காலச்சுவடில் வாங்கி வாசிக்கலாம்.

கோமாளிமேடை டீம்

https://www.amazon.in/Enathu-Siriya-Yutham-Classic-Flemish-ebook/dp/B07Y66HWFG
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்