சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!
பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை.
தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த ஆட்கள்.
தொழில்துறைக்கு எதிரான, இனக்குழுவைச் சார்ந்திராத, அரசியல் சார்பு இல்லாத உதிரி ஆட்கள். இவர்கள் ஒருகட்டத்தில் சூழல் பாதுகாப்புக்காக ஒன்றாக சேர்ந்து பழங்குடிகள் போல போராடினர். இந்த இடத்தில் அரசியல் ரீதியான, தர்க்க ரீதியான பல்வேறு கருத்துகள் கூட சமரசம் செய்யப்பட்டுவிட்டன.
எர்த் ஃபர்ஸ்ட் என்ற சூழல் அமைப்பின் செயல்பாடுகளை இதற்கு உதாரணமாக காட்டலாம். அவர்களின் செயல்பாடு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடிவிட்டு பசித்தவுடன் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிடுவதல்ல. எங்கு பிரச்னை உள்ளதோ அந்த இடத்திற்கே நேரடியாக சென்று போராடி வந்தனர். இதனால், அஞ்சலி விளம்பரங்களுக்கு இடையில் இருந்த சூழல் போராட்ட செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பிடிக்கத் தொடங்கின.
சூழல் புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவான வலைத்தளங்களும் இருந்தன. அவை செய்திகளை வெளியிட்டு போராட்டக்காரர்களை ஒன்றிணைத்தன. சூழல் பிரச்னைகளைப் பொறுத்தவரை அது விலைவாசி போன்றதல்ல. மக்களுக்கு பாதிப்பின் விளைவு, வீரியம் தெரியாது. எதற்கு போராட்டம் என்றுதான் முதலில் நினைப்பார்கள், அவர்களுக்கு சூழல் போராட்டம் எதற்கு என்று கூறி விளக்கி, கவனம் பெறவைத்து போராட்டத்திற்கு அவர்களின் ஆதரவைக் கோருவதே அடிப்படையானது. இதற்கே அன்றைய காலத்தில் எர்த் ஃபர்ஸ்ட் அமைப்பு முயன்றது.
க்ரீன்பீஸ், ஃபிரண்ட்ஸ் ஆஃப் எர்த் ஆகிய அமைப்புகள் அரசு அமைப்பில் ஊடுருவி, அதன் செயல்பாட்டில் அழுத்தத்தை தர முயன்றன. அரசு என்பது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயல்வது. அதன் மையநோக்கம் மக்களுக்கு சேவை புரிவதல்ல. ஆனால், நாம் அப்படி செய்ய வைக்க முயல்கிறோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நேர்காணல் ஒன்றில் கருத்தைக் கூறியிருந்தார். அதேதான். அணுக்க முதலாளித்துவ அரசில், சூழல் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்கள். ஆதிவாசிகளுக்கு உதவியதால் ஸ்டேன்சாமி, ஒன்றிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் படுகொலை செய்யப்பட்டார். கேள்விகளுக்கு பதில் கூறுவதல்ல. கேள்விகளை எழுப்புவர்களை சிறுமைப்படுத்தி, ஏளனப்படுத்தி மௌனமாக்க முயல்வதே பாசிசவாதிகளின் தந்திரம்.
க்ரீன்பீஸ், ஃபிரண்ட்ஸ் ஆஃப் எர்த் ஆகிய இரு முக்கிய சூழல் அமைப்புகளுமே அதிகார மைய குவிப்பு முறையைக் கொண்டவை. எனவே, உடனடியான செயல்பாடு என்பதை எதிர்பார்த்தவர்கள் எளிதில் விரக்திக்கு உள்ளானார்கள். இவர்கள் தனியாக பிரிந்து வேறுபட்ட சூழல் அமைப்பைத் தொடங்கி நடத்தினார்கள். சூழலியம் என்பது அறிவியல் பூர்வமானது. ஆனால், இதை மத ஆர்வம் கொண்ட அரசியவாதிகள், எதிர்க்கிறார்கள். அவர்களின் அரசியலுக்கு கல்வி, பகுத்தறிவு, செயல்பாடு ஆகியவை எந்நாளும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத அம்சங்களாக இருக்கலாம். இத்தகைய சாணி வண்டுகள், அதிகாரத்தில் அமரும்போது அறிவியல் ஆய்வுகள் நிறுத்தப்படுகின்றன. காலனித்துவ நீக்கம் என்று சொல்லி, ஆங்கில வாசகங்கள், காலாவதியான ஏதோ ஒரு உள்ளூர்மொழியில் மாற்றப்படுகின்றன. இதுபோன்ற நாடுகளில் ஆய்வு என்பது பெட்ரோலிய, கரிம எரிபொருட்களை அகழ்ந்து எடுக்கும் நிறுவனங்கள் கொடுக்கும் மானியத்தில் நடைபெறுபவையாக மாறிவிடுகின்றன. இதில், எந்த உண்மையும் இருக்காது. ஆய்வில் சூழல் மையப்படுத்தாமல், தொழிலை மையப்படுத்தி செய்வார்கள்.
உலகளவில் பிரபலமான சூழல் அமைப்புகள் சிறந்த கட்டமைப்பு, பேரளவில் உறுப்பினர்களைக் கொண்டவை. ஆனால் முக்கிய முடிவுகளை மையத்தன்மையில் உள்ளவர்கள்தான் எடுக்கிறார்கள். கீழ்மட்ட உறுப்பினர்களின் கருத்துகள் பெரிதாக கேட்டுக்கொள்ளப்படுவதில்லை. மெல்ல இந்த அமைப்புகளும் கூட அரசு அமைப்புகள் போல செயல்பாட்டில் மங்கிப்போகின்றன. புதிய தீவிரமான சூழல் அமைப்புகள் தோன்றுகின்றன. இந்த அமைப்புகளில் ஜனநாயகம் உண்டா, இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. செயல்பாடுகள், அதில் கிடைக்கும் முடிவுகள் ஆகியவையே சூழல் அமைப்புகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. பொதுவாக சூழல்வாதிகள், கலாசார பன்மைத்தன்மை, ஜனநாயகத்தன்மையுடன்தான் செயல்படுகிறார்கள். சிலர் விதிவிலக்காக மாறுபட்டிருக்கலாம்.
தீரன் சகாயமுத்து - பிரதர்ஹூ்ட் சொசைட்டியிலிருந்து...
மூலநூல்
க்ரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர் டெமோகிரசி - ஜேம்ஸ் ராட்கிளிப்
கருத்துகள்
கருத்துரையிடுக