கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!
நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை
இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை.
தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன்றைத் தொடங்கினால் வென்றுவிடலாம் என ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் நினைக்கிறார்கள். கூகுள், மெட்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு, புதிய நிறுவனங்களை தொடங்கி நடத்திவிட்டு சரியாக போகவில்லையெனில் உடனே மூடிவிடுவார்கள். ஊழியர்கள், சம்பள வெட்டு என தயவு தாட்சண்யமே பார்க்க மாட்டார்கள். இந்த துணிச்சல் இந்தியர்களுக்கு எந்நாளும் வராது.
பன்னாட்டு டெக் நிறுவனங்கள், இந்தியாவை சிறந்த சந்தையாக அடையாளம் கண்டு உள்ளூர் மொழிகளில் சேவைகளை வழங்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால், உள்ளூரில் அதேபோல சேவை வழங்கி வந்தவர்கள் தடுமாறத் தொடங்கினார்கள். இதற்கு வெப்துனியா, குருஜி.காம் ஆகிய நிறுவனங்களை உதாரணம் காட்டலாம். 2008ஆம் ஆண்டு கூகுள், தனது தேடுதல் சேவையை குஜராத்தி, மராத்தியில் வழங்கத் தொடங்கியது. அதன் காரணமாக வெப்துனியா, குருஜி.காம் ஆகிய நிறுவனங்கள், செல்வாக்கை இழந்து செல்லாக்காசாகிவிட்டன. தொடக்கத்தில் இந்த நிறுவனங்கள், வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது உண்மை. ஆனால், நாளடைவில் பெரு நிறுவனங்களின் போட்டியை சமாளித்து சந்தையில் நிற்க முடியவில்லை. என்ன காரணம்? குறிப்பிடத்தகுந்த சிறப்பு அம்சம் ஏதுமில்லை.
2011ஆம் ஆண்டு மட்டும் குறுஞ்செய்தி சேவைக்காக குப்சுப், ஹூக்அப், இம்சி, பிளஸ் டெக்ஸ்ட், ஹைக் என ஏராளமான நிறுவனங்கள் சந்தையில் இருந்தன. ஆனால், மெட்டாவின் வாட்ஸ்அப்புடன் போட்டியிட முடியவில்லை. பிளஸ் டெக்ஸ் நிறுவனத்தை, பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 வாங்கிக் கொண்டு அதன் சேவையை அத்தோடு சரி என நிறுத்தி வைத்தது. சீனாவில் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களையொத்த சமூக வலைத்தளங்கள் உண்டு. அந்த நாடு, கண்காணிப்பு இயல்பைக் கொண்டுள்ளதால் அப்படி உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அதேபோல நகல் நிறுவனங்கள் எதற்கு?
சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சந்தை பெரியது. அந்நாடுகளோடு இந்தியாவோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்தியாவில் ஆங்கிலம் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுமொழியாக உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்பதை நண்பர்களுக்காகவும், ட்விட்டரை செய்திகளை அறிந்துகொள்ளவும், பிரபலங்களை பின்தொடரவும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். புதிய சேவைகளை மெட்டா அறிமுகப்படுத்தினால் கூட சிலநாட்கள் அதில் இருந்துவிட்டு மக்கள் பழையபடி தங்களுக்கு பிடித்த தளங்களுக்கு வந்துவிட்டார்கள். வாட்ஸ்அப் கூட மக்களுக்கு பழக்கமான குறுஞ்செய்தி தளம். அதை எளிதாக விட்டு விலகி இன்னொரு நிறுவனத்திற்கு வருவது கடினம். புதிய கண்டுபிடிப்புகள், தனித்தன்மை இல்லாத சேவைகளை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
இந்திய அரசு, கொண்டுவந்துள்ள டிஜிட்டல் ஊடக சட்டங்கள்படி பயனர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு சமூக வலைத்தள நிறுவனங்கள்தான் பொறுப்பு. இதனால் சமூக வலைத்தள சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. மக்களைக் கண்காணித்து கருத்துகளை தணிக்கை செய்வது என்பது அதிக செலவு பிடிக்க கூடிய செயல். இதனால்தான், கூ நிறுவனத்தை வாங்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை.
இந்தியாவில் தாக்குப்பிடித்து தொழில் நடத்தும் சில நிறுவனங்களைப் பார்ப்போம். இந்தியாமார்ட், மேக்மை ட்ரிப், ஈஸி மை ட்ரிப், இக்ஸிகோ, நாக்ரி.காம் ஆகிய நிறுவனங்கள் போட்டிகளை சமாளித்து தாக்குப்பிடித்து வருகின்றன. பொதுவாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு வளர்ந்த பிறகு அதை பெரு நிறுவனங்கள் வாங்கும். நிறுவனர்களை, இயக்குநர்களை வெளியே துரத்தும். அவர்கள் தங்கள் சேமிப்பில் உள்ள தொகையை வைத்து வேறு ஒரு ஸ்டார்ட்அப்பைத் தொடங்குவார்கள். வெற்றி பெறுவார்கள். அல்லது தோல்வியும் அடைவார்கள். மீண்டும் வேறு ஒரு சேவையைத் தொடங்குவார்கள். உதாரணத்திற்கு ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தின் நிறுவனரான குணால் ஷா, இருநூறுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். எனவே, கூ நிறுவனர்களுக்கும் வேறு தொழில் செய்து வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மூலக்கட்டுரை - நிகில் பாவா
டைம்ஸ் ஆஃப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக