பாகுபாடு இல்லாத பார்வையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்!

 

 

 

 

 


 

 


 

 



பெண்களுக்கு பணியில் சமத்துவம் வேண்டும்

சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம், திருமணமான பெண்களை பணியில் சேர்ப்பதற்கு எதிரான விதிகளை உருவாக்கி வருவதாக செய்தி வெளியானது. இதுபற்றி அரசு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பல லட்சம் பெண்கள் உள்ள வேலைவாய்ப்பு சந்தையில், இப்படியான செய்திகள் முக்கியமானவை. அரசியலமைப்பு ரீதியாக பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கு உறுதி உள்ளது. ஆனால் நடைமுறையில் சட்டங்கள் பெரிதாக பயன்தருவதாக இல்லை. நிறைய இடங்களில் பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக தொழில்துறை சார்ந்த பணிகளில்...வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதில், பெண்களின் குடும்ப வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிப்பதை கூறியாக வேண்டும்

2021-2022 காலகட்டத்தில் 32.8 சதவீத பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் பணியைத் தேடி வருகிறார்கள் என ஆய்வுத்தகவல் கூறுகிறது. பதினைந்து வயதுக்கு மேலுள்ள பெண்கள்  இதில் உள்ளடங்குவார்கள். உலகளவில்  47 சதவீதமாக உள்ளது. காலம்தோறும் பெண்களின் வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. பெண் கல்வி அதிகரிப்பு, கருவுறுதல் குறைவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் எனலாம். சமூகரீதியான கட்டுப்பாடுகள், நிறுவனங்களின் பாகுபாடான அணுகுமுறை வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களை நிராகரிக்கிற அம்சங்களாக மாறி உள்ளன. திறமை இருந்தாலும் கூட குடும்ப வேலைகள், குழந்தை வளர்ப்பு என்ற வகையில் 44.5 சதவீத பெண்கள் வேலைவாயப்பை பெற முடியாமல் உள்ளனர்.

வட இந்தியாவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் குடிநீரைத் தேடுவதற்காக  பெண்கள் செலவிடும் நாட்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு 150 நாட்கள் குடிநீரைத் தேடி தொலைதூரம் சென்று வருவதாக இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் என தன்னார்வ நிறுவனம் ஆய்வில் தகவல் அறிந்துள்ளது. இதற்கான தீர்வாக அரசு வீட்டுக்கு குழாய் வழியாக நீரை வழங்கலாம். இதனால் பெண்களின் உழைப்பு ஆக்கப்பூர்வமான தன்மையில் மாறும் .

பெற்றோர் பார்த்து நிச்சயித்து செய்யும் திருமணங்களில், மணமான பிறகு மணப்பெண், வேலைக்கு செல்லக்கூடாது.மணமகனின் குடும்பத்தாரை கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதனால் கல்வி கற்று வேலைக்கு சென்று வந்த பெண்கள், வேலையை விட்டு விலகி வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறார்கள்.
வீட்டுவேலை என்பதில் பலருக்கும் ஏளனம் இருக்கிறது. தொண்ணூறு சதவீத வேலைகளை மணமாகி கணவன் வீட்டுக்கு வரும் பெண்கள்தான் பொறுப்பேற்று செய்கிறார்கள். ஒருகட்டத்தில் இந்த உழைப்பு பலரது கண்களுக்கும் தெரியாமல் போகிறது. பெண்களும் குரலே இல்லாமல் மௌனமாகிவிடுகிறார்கள். வீட்டு வேலைகளில் நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த வளங்களை அவர்களால் அணுகவும் முடியாது. இதை அண்மையில் உச்சநீதிமன்றம் கூட சுட்டிக்காட்டி, இந்த நிலை மாறவேண்டும் என்று அறிவுறுத்தியது.

கணவன், மனைவி என இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நெருக்கடி உள்ள காலம் இது. வேலைக்கு சென்று வந்தாலும் கூட வீட்டு வேலைகளை பெண்களேதான் செய்கிறார்கள். சமூக பார்வை காரணமாக ஆண்கள் பெரிதாக உதவுவதில்லை. வீட்டு வேலைகளை பெண்கள் செய்யாமல், தங்களது தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தினால் அவர்களை சுயநலவாதிகள் என குடும்பம் தூற்றுகிறது. சமூகமும் அதை வழிமொழிகிறது. இதனால் பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப்போட்டு வேலைக்கு சென்று வருகிறார்கள். திருமணம் செய்துகொண்டால் கூட குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. இரண்டு பேரின் வருமானம் கிடைக்கிறது. வேலை செய்யும் சுதந்திரத்தை பெண்கள் அனுபவிக்க நினைக்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை தேவையின்றி அதிகரிக்க நினைப்பதில்லை. இதை டிஐஎன்கே என குறிப்பிடுகிறார்கள்.

உலகளவில் ஆண்களை விட பெண்களுக்கு இருபது சதவீதம் குறைவான சம்பளமே அளிக்கப்படுகிறது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. நீண்டநேர வேலை, குறைந்த ஊதியம் என பெண்களை நிறுவனங்கள் சுயநலமாக பேராசைக்கு பயன்படுத்தி வருகின்றன என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டின் கூறுகிறார். பெண்களுக்கு எதிரான பாகுபாடு நடைபெறுகிறதா என்பதை அறிய அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்துவது, குழந்தைகளை வளர்ப்போருக்கு ஏற்ற ஆதரவான வசதிகளை நிறுவனத்தில் செய்து தருவது ஆகியவை காலத்திற்கேற்ற அவசியத் தேவை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெறுமனே அம்மாவாக, மகளாக, மனைவியாக அழைக்கப்படுவதை விட நிறுவனத்தின் பணியாளராக இயங்கி பொருளாதார ரீதியாக வலுவானவராக பெண்கள் தனித்து இயங்குவது சமூகத்தையே வலிமை கொண்டதாக மாற்றும்.








கீதா ரவிச்சந்திரன்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழாக்க கட்டுரை


#geetha ravichandran #author #the spel of the rain tree #jobs #women #bias #married women #ilo #professional #labour #greedy jobs #employment #working women #dink #carrer #house work #opportunities #marriage #delay marriage #less paid #salary gap #house work #maternity leave #gender disparity #institutional bias #tnie #empower #wife #daughter #mother #domestic chores
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்