வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!
வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே!
சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது.
சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக 2004 - 2009, ஆட்சிக்கு வந்தபிறகு 2014 - 2023 ஆகிய காலகட்டங்களில் செய்தனர். பணக்காரர் ஆவதற்கான வழிகள் என பத்து காரணங்கள் இடம்பெற்றன. இதில் முந்தைய காலகட்டங்களில் பணக்காரர் ஆவதற்கான வழிகளில் கல்வி, திறன் என்று கூறியவர்கள் இப்போது தொடர்புகளே முக்கியம் என்று கூறத்தொடங்கியுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் முக்கியமாக இருந்த கல்வி, திறன் என்பதெல்லாம் பிந்தைய கட்டங்களில் நான்காவது, ஏழாவது இடங்களுக்கு சரிந்துவிட்டன.
மக்கள் ஏழையாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு உழைப்பின்மை, முயற்சியின்மை என்று 2004இல் கூறிய மக்கள், 2023ஆம் ஆண்டில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, நேர்மையாக போட்டியிட முடியாத தன்மை ஆகியவற்றைக் காரணங்களாக சுட்டிக்காட்டினர். 2023ஆம் ஆண்டு ஏழை மக்கள், ஆண்டுக்கு 6,900 டாலர்களை சம்பாதிப்பதாக கூறினர். இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சம்பாதித்த வருமானம் இதை விட பலமடங்கு அதிகம்.
2023ஆம் ஆண்டு, சீனாவில் தொழிலாளர்கள் 1,800 போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது 2022ஆம் ஆண்டைவிட இருமடங்கு அதிகமாகும். இப்போதைக்கு நாட்டில் போராட்ட பிரச்னை பெரிதாக வெடிக்காது என்றாலும் எதிர்காலம் ஷி ச்சின்பிங்கிற்கு எளிதாக இருக்கப்போவதில்லை. பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்ததை மட்டுமே காரணமாக கூறி மக்களை அமைதிபடுத்துவது கடினம். 1980ஆம் ஆண்டு சீனத் தலைவரான டெங் ஷியோபிங் முதலில் பணக்காரராவது முக்கியம். மற்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பதை, ஷி மனதில் கொள்ள வேண்டும்.
எகனாமிஸ்ட்
https://www.economist.com/china/2024/07/18/the-no1-reason-for-success-in-china-connections
கருத்துகள்
கருத்துரையிடுக