பாசிசத்திற்கு காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைவருமே ஆதரவாக உடந்தையாக நிற்கிறார்கள் - எழுத்தாளர் ஆல்பா ஷா

 









நேர்காணல்

எழுத்தாளர் ஆல்பா ஷா

மானுடவியல் பேராசிரியரான ஆல்பா ஷா, அண்மையில் தி இன்கார்செரேஷன்ஸ் - பீமா கோரேகன் அண்ட் தி சர்ச் ஃபார் டெமாக்ரசி இன் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் சுதந்திர சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பேசியும் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நூலை எழுதுவதற்கு தூண்டியது எது?

பீமா கோரேகன் வழக்கு, இந்தியாவில் ஜனநாயகம் சிதைந்துவிட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடிய சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட ஆட்களையும் சந்தித்து பேசினேன். அவர்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கானது என நம்புகிறேன். பொருளாதாரம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதற்கான போராட்டம் அவர்களுடையது. இப்படி செயல்படுபவர்களை அச்சுறுத்த ஜனநாயகத்தின் தூண்கள் என நம்பப்பட்ட ஊடகம், நீதித்துறை, காவல்துறை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது நீதான் என பட்டியலிடப்பட்டு செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். தெருவில் படுகொலை கும்பல்கள் சுற்றுகிறார்கள் என்றால், இணையத்தில் தனியாக சில குழுவினர் இயங்கி போராட்டக்காரர்களை  அவதூறு செய்வதோடு கேலிவதைக்கு உள்ளாக்குகிறார்கள். எனவே பீமா கோரேகானுக்கான நீதி மட்டுமல்ல, உலகில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும் நூலை எழுதவேண்டுமென முடிவெடுத்தேன்.

நூலை எழுதும் முன்னரே வழக்கு பற்றி அறிந்துகொண்டிருந்தீர்களா?

காவல்துறையினர் பீமா கோரேகான் வழக்கு தொடர்பான போராட்டக்காரர்கள் வீட்டில் சோதனையிடச் சென்ற செய்தியை பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய கல்வியாளர்கள் அறிந்திருந்தோம். அப்போதே நான் சிலரை சந்தித்து உரையாடியும், படைப்புகளை வாசித்தும் இருந்தேன்.  வழக்கில் தொடர்புடையதாக கைதான செயல்பாட்டாளர்கள் பலரும் சிந்தனையாளர்கள் என்பதுதான் அவர்களை அறிந்திருப்பதற்கான காரணம். பதினைந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக செயல்பாட்டாளர்களின் படைப்புகளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

நூலுக்கு செய்த ஆராய்ச்சிகள், தகவல்களைப் பெறுவதில் இருந்த சவால்களைப் பற்றி கூறுங்கள்.

இந்தியாவில் முதலாளித்துவம், பாகுபாடுகள் ஆதிவாசிகள், தலித் உரிமைகள், ஜனநாயகமற்ற நிலை ஆகியவற்றை பற்றி இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தேன். ஆதிவாசிகள் வாழும் இடங்களுக்குச் சென்று தங்கி கள ஆய்வுகளை செய்திருக்கிறேன். மூன்று கண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல்களை செய்து தொகுத்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பாக பீமா கோரேகன் வழக்கில் தொடர்புடைய செயல்பாட்டாளர்களின் குடும்பம், நண்பர்கள், சகாக்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் உரையாடினேன். இவை எல்லாமே முக்கியமானவைதான். உதாரணமாக தலித் போராளியான அனிதா சவாலே. இவர், கலவரக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தவர். செயல்பாட்டாளர்களிடமிருந்து புனே காவல்துறை கைப்பற்றிய எலக்ட்ரானிக் பொருட்களின் நகல் பதிவுகளை எடுத்தவர்கள் பற்றியும் தகவல் சேகரித்தேன்.

நூலில், நான் செய்த ஆய்வுகள் பற்றி எண்பத்து மூன்று பக்கங்களில் விவரித்திருக்கிறேன். நூல் முதலில் அச்சானபோது, ஆய்வுகள் பற்றிய எழுத்து இடம்பெறவில்லை. அதை க்யூஆர் கோட் வழியாக ஸ்கேன் செய்து பெற முடிந்தது. இப்போது கடந்த ஜூனில் வெளியான நூலில், ஆய்வுத்தகவலையும் சேர்த்து நூலாக்கியுள்ளனர். புனே காவல்துறையினரிடம் வழக்கு, கைதுகள் பற்றி பேச முயன்றேன். வாய்ப்பே கிடைக்கவில்லை. இறுதியாக முயன்றபோது, வழக்கை மேற்பார்வை செய்த சிவாஜி போட்கேயிடம் பேச முடிந்தது, ஒன்றரை மணி நேர நேர்காணலில் கைதுகள் பற்றி விளக்கி பேசினார். நான் அவரது கருத்துகளை மறுக்கிறேன். என்றாலும் அவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார் என்பதை உரையாடியபோது அறிந்துகொண்டேன். வெளியாகவிருக்கும் எனது நூல் அவருக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு வந்தேன். அவரது நேர்காணல் புதிய கோணமாக இருந்தது உண்மை.

இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நூலில் கூறியுள்ளதுபோல்தான் எனது எண்ணமும் உள்ளது. இந்தியாவில் ஜனநாயக வழியில் தேர்தல் நடப்பதாக கூறினாலும், ஜனநாயக நாடாக என்னால் உணர முடியவில்லை.  ஜனநாயகம் என்பது, பொருளாதாரம், அரசியல், கலாசார அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதுதான். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுபவர்கள், நாடு முழுக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான நாட்டை ஜனநாய நாடு என்று கூற முடியுமா?

தெருக்களில் கும்பல் படுகொலை நடக்கிறது. இணையத்தில் போராட்டக்காரர்கள் கேலிவதை செய்யப்பட்டு அமைதியாக இருக்க வற்புறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் காவல்துறை, ஊடகங்கள், நீதித்துறை ஆகிய அமைப்புகள், இப்படியான அநீதியை அனுமதிப்பதோடு, அதற்கு உடந்தையாகவும் உடன் நிற்கிறார்கள். உலகிலேயே பாகுபாடுகள், சமூக இடைவெளி அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு, உண்மையான ஜனநாயகத்தைக் கொண்டு வர போராடுபவர்கள், நாட்டின் எழுபது சதவீத வளத்தை வைத்திருக்கும் பத்து சதவீத மக்கள்தொகையை எதிர்த்து போராட வேண்டும். இந்த நிலைமையால் நாட்டில் சுயநலமான குழுக்களுக்கு மெல்ல அதிகாரம் கிடைத்து வருகிறது.

இந்திய அரசை பாசிஸ்ச அரசு என அழைக்கவேண்டும் என கூறுவது ஏன்?

அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டுடன் வணிகம் செய்ய மேற்கு நாடுகள் விரும்புகின்றன. சீனாவுக்கு மாற்றான நாடாக இந்தியாவைக் கருதுகின்றன. போராட்டங்கள் இன்றி கோணமோ, அரசியலோ, கொள்கையோ மாறாது. நான் எழுதிய நூலில் இடதுசாரிகள் அல்லாத நிறைய அமைப்புகள், இந்தியாவின் நடைமுறை நிலையைப் பற்றி கூறியுள்ள செய்திகள் உள்ளன. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வி டெம் இன்ஸ்டிடியூட், இந்தியா தேர்தல் சார்ந்த எதேச்சதிகாரத்தில் வீழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளது. எகனாமிஸ்ட் இதழ், இந்தியா உறக்கநடையில் சர்வாதிகாரத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது என குறிப்பிட்டது. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ், இந்தியாவில் ஜனநாயகத்தை குறைந்துவருவதாக கட்டுரையில் எழுதியது. இப்படி கூறியுள்ள அமைப்புகள் யாவும் இடதுசாரி கருத்தியலைக் கொண்டவை அல்ல.

ஜோதி புன்வானி
ஃபிரன்ட்லைன்

#alpa shah #bhima koregaon #activists #liberal thinkers #free think #democracy
#bk-16 #2018 #frontline #maoist #rebels #autocracy #abujmarh #chhattisgarh #bail #nia #pune police #adivasi #naxalism #guerrilla #revolution #mass incarcerations #fascism #financial times #the economist #v-dem institute #politics #china #rona wilson #street mob #cyberwarfare #police #media #court #inequality #frontline #hindu daily
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்