எல்லையை விட்டுக்கொடுத்து முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் பெறுவது தவறில்லை!

 

 

 

 

 

 

 எல்லையை விட்டுக்கொடுத்து முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் பெறுவது தவறில்லை!

2020ஆம் ஆண்டில், இந்திய அரசு சீனாவை சேர்ந்த 320 ஆப்களை தடை செய்தது. உடனே, அரசின் கூலிப்படை ஊடகங்கள் ஆஹா என பாராட்டின. ஆப்கள், தேசப்பாதுகாப்பிற்கு ஆபத்து என்பது அப்போதுதான் அதிகாரிகளுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. தடையோடு, சீன தொழில் நிறுவனங்களில் வரி சோதனைகளும் நடத்தப்பட்டன. சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டுமென விதி உருவாக்கப்பட்டது. அன்றோடு சரி. இருதரப்பு வணிகமும் குறைந்துபோனது. இந்திய அதிகாரிகள் மேற்கு நாடுகளின் வணிக உறவுகளை நாடினர்.

இதெல்லாம் பார்த்தால், இந்திய அரசு சீனாவை எதிர்த்து போராடி பொருளாதார வளர்ச்சி பெறுவது போல தோற்றம் எழும். ஆனால் அதெல்லாம் வெளிப்பார்வைக்குத்தான். உள்ளே சீன முதலீடுகளும், தொழில்நுட்பங்களும் இருந்தால்தான் இ்ந்தியா முன்னேற முடியும் என இந்திய ஆட்சித்தலைவர் நம்புகிறார். எனவே, சீன தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவுக்கு வர வைக்க விசாவைக் கூட விதிகளை விலக்கி வழங்கத் தொடங்கினர். இதற்கு செல்வாக்கு மிக்க இந்திய நிறுவனங்கள் கொடுத்த அழுத்தம் முக்கிய காரணம்.

வெளிப்படையாக பார்த்தால் இந்திய ஆட்சித்தலைவர், சீனாவின் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. அரசியலுக்கு அது சரி. ஆனால், வணிகத்தைப் பொறுத்தவரை தடையாவது ஒன்றாவது... சீனாவிலிருந்துதான் அடிப்படையான தொழில்துறைக்கு தேவையான பொருட்கள் இறக்குமதியாகின்றன. சீன நிறுவனங்களோடு இணைந்து இந்தியாவில் தொழில்களை கூட்டாக தொடங்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கு பெரும்பாலான பொருட்கள் சீனத்திலிருந்து இறக்குமதியாகின்றன. இங்கு மேக் இன் இந்தியா என்ற திட்டப்பெயர் ஞாபகம் வருகிறதா? அதை மறந்துவிடுங்கள். சில சமயங்களில் ஞாபகமறதி நல்லது. மின்வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தொழில்துறைகள் இப்படித்தான் இந்திய அரசின் மானிய உதவியுடன் இந்தியாவில் ஜாம் ஜாமென இயங்கி வருகின்றன.

எஸ்ஏஐசி என்ற சீனாவின் மோட்டார் நிறுவனத்தை பலரும் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. ஆனால், அதன் பிராண்டான எம்ஜி பிராண்டு கார்கள், எப்போதோ இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கிவிட்டன. கடந்த நவம்பரில், சீன நிறுவனம், குஜராத்தில் ஜேஎஸ் டபிள்யூ என்ற நிறுவனத்தோடு சேர்ந்து மின் வாகனங்கள் தயாரிக்கப்பட ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது. இதில் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையும் கூடுதலாக உண்டாம். குஜராத் என்பது இந்திய ஆட்சித்தலைவர் முதல்வராக இருந்த மாநிலம்.

ஆப்பிள் தனது போன்களில் பதினான்கு சதவீதத்தை இந்தியாவில் தயாரிக்கிறது. இதன் பாகங்களை சீனர்கள் இந்தியாவில் இருந்தே தயாரித்து வருகிறார்கள். இதற்கு என்ன பொருள் என்று புரியவில்லை. தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியா வந்துவிட்டன என்று பெருமையாக சிலர் கூறினார்கள்.

அடுத்தது, தொழில்நுட்பம். சீனாவைச் சேர்ந்த இசட்பிஎம்சி என்ற நிறுவனம், இருநூற்று ஐம்பது கிரேன்களை இந்தியாவின் துறைமுகங்களுக்கு விநியோகம் செய்யவிருக்கிறது. இதை வாங்கி நிறுவி இந்தியாவை வணிக நாடாக உலகம்போற்றும் வகையில் மாற்றப்போகிறவர் வேறு யாருமல்ல, இந்திய அரசின் ஆட்சித்தலைவருக்கு நெருக்கமான வணிகர் அதானி. அப்படியானால் தேசப் பாதுகாப்பு? அது கிடக்கிறது விடுங்க ப்ரோ?

மேற்கு நாடுகளின் தொழில்நுட்பங்கள் கொள்ளை விலையாக இருக்க, இந்தியா சீனாவே பெஸ்ட் என முடிவெடுத்துவிட்டது. அடுத்த விஷயம், நடந்த தேர்தலில் 240 இடங்களைப் பெற்ற மைனாரிட்டி அரசாக மாறியது வலதுசாரி மதவாத கட்சி. அதன் தலைவரான அரசின் ஆட்சித்தலைவர் வேறு வழியின்றி, ஒத்துக்க முடியலைன்னாலும் அதுதான் நெசம் என்று மீண்டும் சீனாவிடம் சென்று தஞ்சமடைந்துவிட்டார். கலவரம், வல்லுறவு, மசூதிகளை இடிப்பது, சிறுபான்மையினரை கொல்வது போன்ற அளவுக்கு தொழிற்சாலைகளை உருவாக்கி மக்களுக்கு வேலைகளை வழங்குவது எளிதாக இல்லை. வேறு என்னதான் செய்வது? பசுநேசர்களுக்கு பரிதாபமான நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.

சீனத்தின் நிலையைப் பார்ப்போம். அதன் அதிபர் ஷி ச்சின்பிங், தேர்தலில் வென்ற வலதுசாரி மதவாத தலைவருக்கு வாழ்த்துகளை சொல்லவில்லை. தைவான் அதிபராக தேர்வான லாய் சிங் டேவுக்கு இந்திய ஆட்சித்தலைவர் வாழ்த்துகளை சொன்னதற்கும் எதிர்முனையில் பேரமைதி. அமெரிக்க மக்களவை பிரதிநிதிகள் தலாய் லாமாவைச் சந்தித்து பேசியபோதும் சீன அதிகாரிகள் இந்தியாவைப் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கியே சீனா மீதான விசா தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்தியாவுக்கு வரத் தொடங்கிவிட்டனர்.
அண்மையில், நியூஸ் வீக் இதழுக்கு கொடுத்த நேர்காணலில், இந்தியாவுக்கு சீனாவுடனா உறவு முக்கியமானது, குறிப்பிடத்தக்கது என இந்திய ஆட்சித்தலைவர் கூறினார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையினரும் வரிசையாக வந்து ஆமாங்க ஆமாம் என அதை வழிமொழிந்தனர். அப்புறம் நடந்த மாற்றம் இந்தியாவுக்கான சீன தூதர் ஷூ ஃபெய்ஹாங், டெல்லி தூதரகத்திற்கு வந்து சேர்ந்தார். அரசியல் வட்டாரத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளை சந்தித்து உரையாடினார். பதினெட்டு மாதங்களுக்கு பிறகு நடந்த மாற்றம் இது. வணிக உறவு சுமூகமானவுடன் இந்தியா தொடர்பான விவகாரங்களில் சீனா, ஆக்ரோஷமான எந்த கருத்துகளையும் கூறவில்லை. வணிகம் அதில் கிடைக்கும் கமிஷன் இந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துமா? what an idea sirji?

தி எகனாமிஸ்ட்
தமிழாக்க கட்டுரை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்