ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!
ஸிசோபெரெனியா சாமியார்!
மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று.
இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச்னைகளை கேட்டு வந்தார். பக்தர்கள் பட்டாசு, மூங்கில் கம்பு, கோடரி ஆகியவற்றை வாங்கி அன்பளிப்பாக தருகிறார்கள். பக்தர்கள் காத்திருந்தால், அவராகவே பக்தர்களை அழைப்பாராம். யாரும் அவருடைய அனுமதியின்றி போய் பார்க்க முடியாது. அப்படி பார்க்க நினைத்த பெண்ணை அன்பளிப்பாக வழங்கப்பட்ட கோடரியை எடுத்து வீசி தாக்கியிருக்கிறார். கொலைவெறித் தாக்குதலில் கபாலம் உடைந்துவிட்டது. அந்தப்பெண் பிறகு புத்திதெளிந்து, சிகிச்சை செய்துகொண்டு இம்முறை காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். போலீசும் பாப்பை காவல்நிலையத்திற்கு கூட்டிச்சென்றிருக்கிறது. இப்போது முன்கதைக்கு செல்வோம்.
குலாம் ரசூல், தலைமுடியும், தாடியும் வெட்டப்படாமல் நீண்டு கிடக்க, ஆளே பார்க்க ஆன்மிக சொரூபமாக, பிச்சைக்காரனா என்று தெரியாதவாறு வாழ்ந்து வந்திருக்கிறார். சாமியார் நவீனமானவர் அல்ல. சற்று பழையவர். இவரது குடும்பத்தில் நான்கு சகோதரிகள். அவர்களுக்கு பிறகு பிறந்த ஆண் பிள்ளையே பாப். 1960ஆம்ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தவர், படிப்பாலா, குடும்பத்தில் சகோதரிகளுக்கு மணம் செய்து வைக்க வேண்டுமே என்ற பயத்தாலோ தெரியவில்லை. அருகிலிருந்த மலையில் ஏறி தியானத்திற்குச் சென்றுவிட்டார். சென்றவர் அத்தோடு சரி. பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் இறங்கி வந்தார். அப்போதும் மக்களிடம் அதிகம் பேசுபவராக இல்லை. மக்களே அவரை சிரமப்பட்டு அடையாளம் கண்டுகொண்டனர். மக்களின் குறைகளைக் கேட்கத் தொடங்கினார். காசு, பணம் என எதையும் வாங்கவில்லை என அவரது சுற்றுப்புற ஆட்கள் கதை கதையாக சொல்லுகிறார்கள்.
பாப்பின் கோடரியால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு வயது எழுபத்திரெண்டு. அவருக்கு அப்படியான அனுபவம் புதிது. ஆனால், அவரது நீண்டநாள் பக்தர்களுக்கு அடி உதையெல்லாம் பழகிப்போய்விட்டது. அதற்காகவே கம்பு, கோடரி, கத்தி என நிறைய பொருட்களை அறையில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் ஐபோன், மருந்துகள்,மருந்து சீட்டு, கரன்சி என பக்தர்கள் கொடுக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி கிழித்து எறிவது பாப்பின் விசேஷ குணம். இதை ஸிசோபெரெனியா என்று கூட யாரும் அறியவில்லை. குறிப்பாக நோயை அறியாவிட்டால் பரவாயில்லை. ஒரு மனிதனின் பித்தைக் கூட புரிந்துகொள்ளவில்லை. மக்கள் சரி. சாமியாரின் அக்கா கூட தம்பியை வைத்து சம்பாதிக்க நினைத்திருப்பார் போல. அவரும் கூட தலைமுடியை வெட்டாமல், தாடியை திருத்தாமல் இருந்தவரை அப்படியே விட்டிருக்கிறார்.
வயதான பெண்ணைத் தாக்கிய வழக்கில் காவல்துறை பாப்பை கைது செய்ய வர, சாமியார் அதற்கு இணங்காமல் ஆயுதங்களை எடுத்து போலீசாரை தாக்கியிருக்கிறார். தாக்குதலை முறியடித்து முரட்டு சாமியை தூக்கி லாக்கப்பில் அடைத்திருக்கிறார்கள். அவரைப் பார்க்க சோற்று மூட்டை கட்டிக்கொண்டு பலநூறு பக்தர்களும் அங்கே வந்துவிட்டனர். விசாரணையில் எந்த கேள்விக்கும் சாமி பதில் சொல்லவில்லை. இதுபற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட, நெருக்கடி அதிகரிக்க காவல்துறை சாமியை மனநல மருத்துவமனைக்கு மாற்றியது. ஶ்ரீநகரிலுள்ள அந்த மருத்துவமனையில்தான் பாப் என்ற சாமிக்கு ஸிசோபெரெனியா என்ற மனநல குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் பல்லாண்டுகளாக உடல், மனதளவில் சித்திரவதை செய்யப்பட்டு சுரண்டப்பட்டால் அவர் நோயாளி ஆகவே வாய்ப்பு அதிகம். அந்த காயம் எளிதாக ஆறாது. அதற்கு சிகிச்சை தேவை.
சாமிக்கு சிகிச்சை தேவை. மூடநம்பிக்கை கொண்ட மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.
கருத்துகள்
கருத்துரையிடுக