இரண்டு மனைவிகள் தேவை என்ற லட்சியத்தை நோக்கி நடக்கும் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல்கள்!
ஶ்ரீகிருஷ்ணா
வேணு, கௌரி முஞ்சால், ஶ்ரீகாந்த் மேகா, ரம்யா கிருஷ்ணன்
தெலுங்கு
இயக்கம் விஜயேந்திர பிரசாத்
நாயகனின் பாட்டி, அவர்களது குடும்பத்தில் ஆண்களுக்கு ஆயுள்காலம் குறைந்துகொண்டே வருகிறது என்பதால், பேரனாகிய நாயகன் இரு பெண்களை மணக்கவேண்டும் என்று கூறுகிறாள். அதை சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்துபோகிறாள். இதனால், நாயகன் அவனது மாமாவோடு இரு மணப்பெண்களை மணமுடிக்க பெண் பார்க்கச் செல்கிறான். அவனது வினோதமான லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.
படத்தின் கதையில் உள்ள முரண் நன்றாக இருந்தாலும், எடுக்கப்பட்ட விதம் டிவி சீரியல் ரகம். அந்த தரத்தை பெரிதாக தாண்டி வரவில்லை. நாயகனுக்கு பெற்றோர் கிடையாது. டீன் ஏஜில் ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்துவிடுகிறாள். அவன் வீட்டில், அவனும் வேலைக்காரனும் மட்டுமே இருக்கிறார்கள். வேலைக்காரன்தான ஒரே நண்பனும் கூட இதைக்கடந்த அவனது மாமா மண்டேலா பிரம்மானந்தம், வழிகாட்டுபவராக இருக்கிறார். மண்டேலா, வேலைக்கு செல்வதில்லை. மனைவி செல்வத்தைக் கொண்டவள் என்பதால், தின்று படுத்து தூங்கி எழுந்து நிம்மதியாக இருக்கிறார். அவரது காட்சிகளில் காமெடி சற்று பரவாயில்லை. மற்றபடி கதை, முக்கியமான முரணுக்குள் நுழைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
இஸ்லாமில் ஆண்கள், நான்கு பெண்களை மணந்துகொள்ளலாம் என்பதை ஒருகாலத்தில் பெண்களே மனதளவில் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்துக்களிலும் பலதார மணம் இருந்தது. காலம் மாறியது, பின்னாளில் அரசின் சட்டம் என்ற அடிப்படையில் ஒரு திருமணம் செல்லும். சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என பிரசாரம் செய்யப்பட்டு, அது ஏறத்தாழ ஏற்றுக்கொள்ளவும்பட்டது. படத்தில் உள்ள முரண், பாட்டிக்கு கொடுத்த வாக்கு சார்ந்ததுதான். இதில், நாயகனுக்கு உள்ள பலம், சாதகம் பற்றியெல்லாம் அந்த பாத்திரம் பெரிதாக யோசிக்கவில்லை. அதாவது, காட்சியில் காட்டப்படவில்லை. அவர் நாயகியை காதலிக்கிறார். நாயகிக்கும் நாயகனை பிடித்திருக்கிறது. ஆனால், திருமணம் என்று வரும்போது இரு பெண்கள் என அடம்பிடிக்கிறார். அதற்கென புடவை, நகை என அனைத்தையும் ரெடி செய்திருக்கிறார். இது நாயகிக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரையில் படம் சற்று சரியாக செல்கிறது.
ஶ்ரீகாந்த் மேகா, நாயகியின் கணவர் என அறிமுகமாவதில் இருந்து சீரியல் வாடை அடிக்கத் தொடங்கிவிடுகிறது. நாயகனுக்கு காதலித்து அல்லது பெண் பார்த்து மணமோ எதுவாயினும் தன்னுடைய நிலையை எடுத்துச்சொல்லித்தான் கல்யாணம் செய்ய நினைக்கிறார். ஆனால், பெண்வீட்டார், இரண்டு திருமண விதியைக் கேள்விப்பட்டு வெகுண்டு நாயகனையும், மாமா மண்டேலாவையும் அடித்து விரட்டிவிடுகிறார்கள். அப்போது கூட நாயகன், தனது இரண்டு திருமண லட்சியம் பற்றி யோசிப்பதில்லை. இத்தனைக்கும் அவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார். வசதி வாய்ப்புக்கு குறைவில்லை. மற்றவர்களின் வாழ்க்கையை அவரால் பார்க்கமுடியும். ஆனால் கூட பாட்டி விஷயத்தில் எந்த ஆய்வும் செய்யாமல் முட்டாள் போல நடந்துகொள்கிறார்.
தொடக்கத்தில் சுவாரசியம் கொண்டதாக தெரியும் படத்தின் இரு திருமண ஐடியா கூட காட்சிகள் நகர நகர ரொம்ப பழைய பட வாடை அடிக்குதே என தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
நாயகன் இரண்டு பெண்களை மணப்பது என்றால்.... காமத்தின் மீது ஆசை கொண்டவரா என்றால் இல்லை. அப்படியான காட்சிகள் ஏதும் இல்லை. பாட்டியின் கடைசி ஆசை என்ற அளவில் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். அவ்வளவேதான். குழப்பான நிலையிலுள்ள பாத்திரத்தின் கட்டமைப்பு குழப்பத்தையே தருகிறது. இயக்குநர் பெரிதாக அதற்கு மேல் நகரவில்லை. பொதுவாக தெலுங்கில் சமகாலம் வரை, நாயகன் இரு பெண்களை கக்கத்தில் தூக்கிவைத்து ஆண்மையை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டி குத்துப்பாடல்களை ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். தொப்புள், மார்பகம், பின்புறம் ஆகியவற்றுக்கு தனி ஷாட்கள். விஜயேந்திர பிரசாத் இதில் எங்கே மாறுபடுகிறார்?
மண்டேலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மானந்தம் மட்டுமே படத்தில் சற்று துடிப்பாக நடித்துள்ளார். இவருக்கு இரண்டாவது மனைவியோடு சம்போக ஆசை உள்ளது. ஆனால் அதற்கான உடல் பலம் இல்லை. மனதில் பெரிய ஆசை உள்ளது. நாயகனுக்கு பார்த்த பெண்ணையே தனது மனைவியாக ஏற்றுக்கொண்டு வாழ முனைகிறார். அதுதான் நகைச்சுவை காட்சிகளாக நீள்கிறது.
படத்தில் வரும் முரண்மட்டுமே ஈர்க்கிறது. அதை கூர்மையாக்கும் ஆழமான காட்சிகள் இல்லை. நாயகனின் பாத்திரத்தில் தெளிவு இல்லை. நாயகியை வீட்டை விட்டு ஓடிவருபவராக காட்டுகிறார்கள். அவர் சில சந்திப்புகளில் நாயகன் வெங்கடேஸ்வரன் மீது காதல் கொள்வதாக காட்டுகிறார்கள். எப்படி எதனால் என நமக்கு கேள்வி எழுகிறது. ஶ்ரீகாந்த் மேகா பாத்திரம் இருப்பதால், நாயகிக்கான முக்கியத்துவம் அவரது பாத்திரத்திற்கு மடைமாற்றமாகிறது. இதனால் நாயகியின் பாத்திரம் பலவீனமாகி, பாடல்களுக்கான கவர்ச்சிப்பொருளாக மாறுகிறது. தெலுங்கு சினிமாவின் வழக்கமான பாதைக்கு மாறி, இடுப்பை வளைத்து ஒடித்து ஆடி கௌரி முஞ்சால் தனது பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்.
சுவாரசியமில்லாத சீரியல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக