எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் வறுமையான ஏழை மக்கள் உருவாகிறார்கள்! - ஷி ச்சின்பிங்













1949ஆம் ஆண்டு சீனாவில் மக்கள் குடியரசு மலர்ந்தது. அந்த காலம்தொட்டே நாம் கல்வியில் நிறைய முன்னேற்றங்களைப் பெற்று வருகிறோம். வரலாற்று ரீதியாக கல்வி மேம்பாடு பற்றி பெருமை கொள்வதற்கான நிறைய விஷயங்கள் நம்மிடையே உண்டு.




1949ஆம் ஆண்டுக்கு முன்னர் நிங்டே பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று நாம் அங்கு பள்ளிகளைக் கட்டியுள்ளோம். விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இத்தோடு திருப்தி அடைந்துவிடலாமா?, இல்லை.




மாறிவரும் கல்வியில் வரும் புதிய மேம்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். கல்வி என்பது பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. கல்வியைப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.




மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையி்ல நிங்டேவில் உள்ள கல்வி நிலையைப் பார்ப்போம். அப்போதுதான் கல்வி பற்றிய கவனத்தைப் பெறமுடியும். நடைமுறை சூழலைப் பார்த்து வேகமாக முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டிய நிலையை புரிந்துகொள்ள லாம். நிங்டே பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் கல்வியிலும் மோசமாக உள்ளதா? அப்படி பார்ப்பது சரியா?




அப்படியான கோணத்தில் பிரச்னையை தீவிரமாக அணுகுவதில் எந்த தவறும் இல்லை. அப்போது அதன் சீரழிந்த நிலையை புரிந்துகொண்டு திட்டமிட்டு வேகமாக அதை சீர்செய்ய முடியும். சில கிராமங்களுக்கு சென்றபோது, அங்குள்ள எளிமையான பள்ளி கட்டிடங்களைப் பார்த்தேன். இங்குள்ள வேளாண்மையை அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு நவீனமாக மாற்ற வேண்டிய அவசியம் புரிந்தது. இப்பணியைச் செய்வதற்கென திறமையான நபர்கள் தேவைப்படுகிறார்கள்.




விவசாயிகள், வேளாண்மை மூலம் பணக்காரர்களாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், புத்திசாலித்தனம் ஆகியவை இல்லாத காரணத்தால் செல்வத்தை அடைய முடியவில்லை. விவசாயிகளை மேம்படுத்த, நகரங்களில் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தொழில்துறையினர் உருவாகி வளருவது அவசியமாகிறது. துரதிர்ஷ்டவசமாக இதற்கென ஏராளமான திறமைசாலிகள் தேவைப்படுகின்றனர்.




நிங்டேவில் பொருளாதார மேம்பாடுகளை நினைத்த வேகத்தில் செய்யமுடியவில்லை. இதற்கு காரணம், கல்வியை மேம்படுத்த போதிய நிதிவசதிகள் இல்லை என்பதேயாகும். கல்வியை முறையாக மேம்படுத்த நிதியை செலவழிக்காதபோது, நம்மால் பொருளாதார மேம்பாட்டை மேலெடுத்து செல்லக்கூடிய வல்லுநர்களை பெற முடியாமல் போகிறது. இதை நாம் கவனப்படுத்திப் பார்க்கவேண்டும்.




எங்கெல்லாம் கல்வி குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் வறுமையான விளிம்பு நிலையிலுள்ள மக்கள் உருவாகிறார்கள். வறுமையான பகுதிகளில்தான் கல்வியின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், இங்கு வளத்திற்கு அடிப்படையான கல்வியை பிரசாரம் செய்து பிள்ளைகளை படிக்கச் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதை மேத்யூ தாக்கம் என்று குறிப்பிடுவார்கள். வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள முடிவே இல்லாத சுழற்சி என இதைக் குறிப்பிடலாம்.




ஆசிரியர்களை மதிப்பது, அவர்களின் வழியாக கல்வியை கற்பது நாட்டின் அடித்தளத்தை கட்டமைக்கிறது. அறிவு, திறமை ஆகியவற்றை பிரசாரம் செய்வது அரசின் முதல்வேலை என நம் நாட்டின் சான்றோர் கூறுவதுண்டு. கல்வியின் அடிப்படையில்தான் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் வளர்ச்சி அடைகின்றன. இதிலிருந்துதான் திறன் கொண்ட வல்லுநர்கள் உருவாகிறார்கள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மேம்பாட்டிற்கு அறிவியல், தொழில்நுட்பம் அறிந்த ஏராளமான வல்லுநர்கள் அடிப்படைத் தேவை.




கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகிய விஷயங்கள் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை. நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருபவை. நம் முன்னே இப்போது இருக்கும் பெரிய பிரச்னை, கல்வியை முன்னேற்ற முடியாமல் உள்ள நிதிநிலைமை என சிலர் கூறுகிறார்கள். உண்மைதான். நிங்டேவின் பலவீனம், பொருளாதார பலவீனம். அதற்காக, அதைக் காரணம் காட்டி கல்வியை மேம்படுத்தாமல் இருந்துவிடமுடியாது. கையில் பணம் வந்தபிறகு கல்வியை மேம்படுத்தலாம் என அமைதியாக அமர்ந்துவிடக் கூடாது. அது தவறான அணுகுமுறை.




கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டெங் ஷியாபோபிங், ''கல்வியை தீவிர முயற்சி எடுத்து நாடு முழுக்க விரிவாக்க வேண்டும். அந்த செயலால் பிற துறைகளின் வளர்ச்சி குறைந்தால் கூட கவலைப்படக்கூடாது'’ என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட காலம் எடுத்து, ஆற்றலை சேமித்து, கல்வியைக் கற்றுக்கொடுக்க முயற்சிகளை செய்யவேண்டும். நிழல் தரும் மரங்களை சில ஆண்டுகள் சிரத்தையெடுத்து வளர்த்தெடுத்தால், பலநூறு ஆண்டுகளுக்கு அதன் பயன்களை மக்கள் அனுபவிக்க முடியும் என நம் முன்னோர் கூறியுள்ளனர். அதை நாம் மறந்துவிடக்கூடாது.




தவறான திசையில் இருந்து தொடங்கினால், பணிகள் சரியான இடத்திற்கு சென்றடையாது. நிங்டேவில் உள்ள நடைமுறை சூழல்களைப் புரிந்துகொண்டு இயங்குவது முக்கியம். இங்கு முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம். ஒன்று, நிங்டே வறுமையான பின்தங்கிய பகுதி. இங்கு கல்வியை மேம்படுத்த தடையாக இருப்பது நிதிசார்ந்த தடைகள்தான். கிராம்ப்பகுதி என்றால், கல்வி என்பது, கிராம பின்னணியில் உருவாக்கப்படவேண்டும். நிங்டேவில் உள்ள பெரும்பான்மை கிராம மக்கள் கல்வி அறிவற்றவர்கள். அதுவே அவர்கள் பொருளாதார நிலை பின்தங்கியிருக்க காரணம்.




தரம், எண்ணிக்கை ஆகிய அம்சங்களில் சரியான சமநிலை பேணி நிலைத்தன்மையோடு ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை கல்வியில் அடைய வேண்டும். தேசிய அளவிலான கொள்கையை உருவாக்கி அதைப் பின்பற்றத் தொடங்குவதோடு, கல்விக்கான சிறந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அர்த்தமுள்ள வடிவில் வேகம், முயற்சிகள் இணையவேண்டும்.




கல்வி வழங்குவதில் அடிப்படை கல்வி, தொழில்நுட்ப கல்வி, வயது வந்தோருக்கான கல்வி ஆகியவை முக்கியமானவை. அடிப்படை கல்வியில் பொதுவான கலாசார, அறிவியல் அறிவு உள்ளடங்கியிருக்கும். இதுவே கல்விக்கு அடித்தளமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி முன்னமே பேசியிருக்கிறோம். அதன் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். ''உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டுமெனில் ஊழியர்களுக்கு போதிய அளவில் தொழில்நுட்ப அறிவைக் கற்பிக்க வேண்டும்'’ என புரட்சியாளர் லெனின் கூறியுள்ளார். தொழில்நுட்ப கல்வி, நிங்டேவி் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும். அளிக்கப்படும் தொழில்நுட்ப கல்வி நடைமுறை சார்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகள் வறுமையிலிருந்து வெளியே வரமுடியும்.




வயது வந்தோருக்கான கல்வி அரசியல், கலாசாரம், தொழில்நுட்பம், நிர்வாகம் சார்ந்து அமையும். இதன்மூலம் மக்கள் அடிப்படை அறம், அறிவியல், கலாசாரம் சார்ந்து வளம் பெறலாம். நிங்டேவில் கல்வி மேம்பாட்டிற்கு தடையாக உள்ள நிதிப் பிரச்னையை குறுகிய கால கட்டத்தில் தீர்த்துவிட முடியாது. அரசின் கல்வியை, அரசல்லாத தனியார் நிறுவனங்களின் உதவியோடு கற்கலாம். இதன்மூலம், பல்வேறு வகையில் கல்விக்கான முதலீடுகள் கூடலாம். இப்படி செய்யப்படும் முதலீடு ஐந்து, பத்து அல்லது நூறு மடங்கு பயன்களைக் கொண்டதாக மாறும்.




நிங்டேவின் கிராமத்தில் கற்பிக்கப்படும் கல்வி, கிராமத்தின் பின்னணியில் அமைந்தால் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக அமையும். விவசாயிகள் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கற்று அதை தம் தொழிலில் பயன்படுத்தினால் எளிதாக வருமானம் கிடைக்கும். இதற்கான வழிகளை கல்வி கற்றுத் தரும். கல்வி மூலமே கிராமப்புற சோசலிசத்தை வளர்க்க முடியும்.




1985ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, நாட்டு மக்களில் 40.3 சதவீத கிராமப்புற தொழிலாளர்களுக்கு கல்வி அறிவு இல்லை என கண்டறியப்பட்டது. பல்லாண்டுகால உழைப்பின் அடிப்படையில் கல்வி அறிவற்றவர்களின் சதவீதம் குறையக்கூடும். ஆனால், முற்றாக அந்த எண்ணிக்கை குறையாது. அதே காலகட்டத்தில், புதிதாக கல்வியறிவு இல்லாத மக்களின் எண்ணிக்கை உருவாகி வருவார்கள். புரட்சியாளர் லெனின், ''கல்வியறிவற்ற நாட்டில் கம்யூனிஸ்ட் சமூகம் உருவாக முடியாது'’ என்று கூறினார்.




பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவற்ற விவசாயிகளாக உள்ள நிலையில், அவர்களுக்கு பொருத்தமான அறிவியல், தொழில்நுட்ப, நிர்வாக திறன்களை வழங்குவது கடினம். இதன் விளைவு, அவர்களை வளம் கொண்ட மக்களாக மாற்றுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

கிராம மக்கள் கல்வி கற்றாலும் கற்காவிட்டாலும் என்ன மாறிவிடப்போகிறது? அவர்களின் நிலைமை இப்படியேதான் இருக்கும் அல்லது நம்மிடையே சில கல்வி கற்றவர்கள்தான் இருக்கிறார்களே என்ற வாதங்கள் தவறானவை. அப்படியான மனநிலை, செயல் அணுகுமுறையை களப் பணியாளர்கள் தவிர்க்கவேண்டும்.




இந்த ஆண்டு கல்வி அறிவு ஆண்டை நாம் திடமான செயல்பாடுகளோடு, முக்கிய தீர்மானங்களோடு கொண்டாட வேண்டும். மக்களிடையே கல்வி அறிவை அதிகரிக்க ஆண்டுதோறும் உழைத்து வரவேண்டும். இப்படியான செயல் காரணமாக சில ஆண்டுகளிலேயே மாற்றம் தெரியும்.




கல்வி தொடர்பான கொள்கை, கல்வி கற்காதவர்களையும் கல்வியின் பக்கம் திருப்பி எழுத, படிக்க முன்வரும்படி இருக்கவேண்டும். அந்த வகையில்தான் கல்வியறிவு மக்களிடையே பரவி சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சீன அதிபர் ஷி ச்சின்பிங் உரை






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்