பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

 

 


 

 


 

 
வினோதரச மஞ்சரி
பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது  அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவேண்டும் என மேலிட அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுவனமும் அதற்கு பணிந்துவிட்டது. பயன்படுத்தும் சாதனங்களும் புதிது கிடையாது. உள்நாட்டில் சாதனங்களை வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஆட்சித்தலைவருக்கு நிதிகொடுத்து மனதை வென்றுதான் அம்பானி, பல்லாயிரம் கோடிகளை குவித்தார். இதோ இப்போதும் செல்போன் திட்டங்களை மாற்றி சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். அவரது தம்பி அனில், டெலிபோன் வணிகத்தில் பெரிதாக வெல்ல முடியவில்லை. அப்படி வெல்வதற்கான வாய்ப்புகளை சகோதரர் முகேஷ் தரவில்லை.

பிஎஸ்என்எல் போனைப் பொறுத்தவரை என்ன பிரச்னை என்றால் விதவிதமான குறுஞ்செய்திகள், பொருட்களை விற்பவர்களின் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். உண்மையில் பிஎஸ்என்எல்லை நஷ்டப்படுத்தி அதானிக்கு விற்பதாக கூறினார்கள். வாடிக்கையாளர்களின் எண்களை வணிகர்களுக்கு ஏற்கெனவே விற்றுவிட்டார்களோ என்று தோன்றும்படி சூழல் இருந்தது. கூகுள், மார்க்கெட்டிங் அழைப்புகளை தடுக்கும் வசதியதை ஓஎஸ்சில் கொண்டுவந்தபிறகு சற்று அமைதி கிடைத்தது. ஆனாலும் கூட குறுஞ்செய்திகளை அந்த நிறுவனத்தாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. ஏராளமான ஸ்பேம் செய்திகள் வந்தன. வந்துகொண்டும் உள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை அழைப்பு ஒருவருக்கு செல்வது என்பது ஜாதகத்தில் தசாபுத்தி, திசை, நல்ல நேரம் இருப்பதைப் பொறுத்ததுதான். அவையெல்லாம் சரியாக இருந்தால், அழைப்பு போகும். ஆனால், அழைப்பு செல்லும் ஒலி, அழைப்பவருக்கு காதில் கேட்காது. சில சமயங்களில் அழைப்பு செல்கிறதா இல்லையா போன் அணைந்துவிட்டதா என சோதிக்க வேண்டியிருக்கும். புயல், மழை, நிலச்சரிவு, வெள்ளம் காலங்களில் மட்டும் துடிப்பாக இயங்கும். 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை ரத்தத்தின் ரத்தங்கள் திறந்துவிட்டபோது, பிஎஸ்என்எல்லில் இடையறாது அழைப்பு வந்துகொண்டே இருந்தது. யாரென்று பார்த்தால் கொங்கு பகுதியில் இருந்த நண்பர் அழைத்தார். பெருநகரிலுள்ள தனது நண்பர்களுக்கு அழைப்புகள் போகவில்லை. பிஎஸ்என்எல் வைத்துள்ள உனக்கு மட்டும்தான் அழைப்பு போகிறது என்றார். அவருக்கு வெள்ளம் பற்றிய எனது சொந்த அனுபவங்களைச் சொன்னேன்.  பிற நிறுவனங்கள் எப்படியோ அந்த நெருக்கடியில் பிஎஸ்என்எல் அப்படியொரு புத்துயிர்ப்பு கொண்டிருந்தது. இயல்பான நேரங்களில் யாராவது அழைத்தால் பிசி என பிஎஸ்என்எல் தானியங்கி குரலே கூறிவிடுவதால், நிறைய அழைப்புகள் தவிர்க்கப்பட்டு டிஜிடல் டிடாக்ஸ் வாழ்க்கையை பழக முடியும்.

3ஜி இணையம் சீரானது என்று கூற முடியாது. சென்னை மண்டலம் தனி. பிற வட்டாரங்களில் சுமாராகவே இருக்கும். எப்போது வருவாக, போவாக என்று யாருக்கும் தெரியாது. பரமாத்மா உங்களை ஆசிர்வதிக்கவேண்டும்.

தற்போது பயன்படுத்தும் பிஎஸ்என்எல் சிம்மை, எனது கிராமத்திற்கு அருகில் உள்ள சிறு நகரத்தில் அமைந்திருந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையத்திற்குச் சென்று வாங்கினேன். அப்போதே அதை வாங்க ஏராளமான ஆவணங்களைக் கேட்டனர். அதே சிம்மை தனியார் கடையில் வாங்கியிருந்தால், சற்று எளிதாக இருந்திருக்கலாம். பிஎஸ்என்எல் சொந்த அலுவலகத்தில் சிம்மை வாங்கவேண்டும் என பிடிவாதம் கொண்டிருந்தேன். இன்று அதை யோசித்தால் ஏன் அப்படி என தோன்றுகிறது.
அண்மையில் அங்கு சென்று பார்த்தபோது, வாடிக்கைகயாளர் சேவை மையம் இயக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக அங்கு மூன்று பெண்கள் மட்டுமே இருந்தனர். ஒரு பெண் தன் குழந்தைக்கு சோறூட்டிக்கொண்டிருந்தார். ஒருவர் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுத்து வந்தார். இன்னொருவர், வந்த ஆட்களை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஆம்...மையம் இப்போது இ சேவையை வழங்கி வந்தது. தனியார் செல்போன் கடைக்கு, பிஎஸ்என்எல் சேவையை விற்றுவிட்டார்கள்.  இதில் வேடிக்கை என்னவென்றால், சிம்மை 4ஜியாக மாற்றவேண்டி ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தனர்.  பிறருக்கு பேச அழைத்தால், சீக்கிரம் சிம்மை மேம்படுத்துங்கள். இல்லையேல் சேவை துண்டுபடும் என செல்ல மிரட்டல், எச்சரிக்கை என வந்துகொண்டிருந்தது.

பொதுவாக தனியார் நிறுவனங்கள், இலவசமாக எந்த வேலையையும் செய்து கொடுக்கப்போவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் விடாப்பிடியாக தம்பிடி காசு கொடுக்கவேண்டியதில்லை. சிம்மை வாங்கிக்கொள்ளுங்கள் என ஒரே விதமான போலிச் செய்தியை ஆங்கிலம், தமிழில் அனுப்பியவாறு இருந்தனர். மதவாத கட்சியின் ஐடி செல்போல முயல்கிறார்களோ?

ஒருவழியாக சிறு நகரில் சென்று 4ஜி அல்ல, நேரடியாக 5ஜியே வாங்கியாயிற்று. இதற்கு ரூ.150 கட்டணம். ஆதார் நகல் பிரதி கூட வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். மாலையில் பழைய இணைப்பு துண்டிக்கப்படும் புதிய சிம்மை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால், இணைப்பை துண்டிப்பதில் அரசு நிறுவனம் கெட்டிக்காரர்கள். ஒரு மணிநேரம்தான்.
பழைய சிம்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு டவர் போனில் வரவில்லை. கொடுத்த ஐந்து ஜியில் தேசியக்கொடியின் மூவர்ணம் இருந்தது. எதை குறியீடாக காட்டுகிறார்கள் என புரியவில்லை.

3ஜி சேவையே பெரிதாக முன்னேற்றமாக இல்லை. இதில் 4ஜி என்கிறார்கள். அதற்கான எந்திரங்களைப் பெற, புதிதாக தொலைத்தொடர்பு தொழில் தொடங்கியுள்ள டாடாவுக்கு ஏலம் வழங்கியிருக்கிறார்கள். இன்று பிரிவினை, மதக்கலவரம், சிறுபான்மையினரைக் கொல்வது என அயராது சங்கத்திற்கு உழைக்கும் இந்திய ஆட்சித்தலைவர், மாநில அளவில் தன்னை இந்து தீவிரவாதி என நிரூபித்தபோது அவரை தொழிலுக்கு ஆதரவானவர் என பிராண்டிங் செய்தவர் ரத்தன் டாடா. இன்று அவரின் அறக்கட்டளை நிறுவனங்களே செயல்படமுடியாமல் ஒன்றிய அரசு சட்டங்களை போட்டு தடுத்து வைத்துள்ளது. பயப்படாதீர்கள். டாடா மட்டும் தனியாக இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுக்க நிதி பெற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. வணிகத்தில் நீர்போல வளைந்து செல்லவேண்டியதுதான்.... சுயமரியாதை, தன்மானம் பார்த்தால் இந்தியாவில் வணிகர்கள் பிழைக்க முடியுமா என்ன?

புதிய சிம்மைப் பெற்றது மூலம் அதிவேக சேவை, இணைய தொடர்பு என்ற பிஎஸ்என்எல்லின் அடையவேண்டிய லட்சியக்கனவு பற்றிய குறுஞ்செய்திகள் வராமல் சற்று நிம்மதியாக இருக்கமுடியும் என நம்புகிறேன். பிஎஸ்என்எல்லை பெரிதாக நம்ப ஏதுமில்லை. அந்த நிறுவனத்தின் செயல்பாடே சுமாராக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அதோடு எம்டிஎன்எல்லை வேறு இணைத்துவிட்டனர். நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதில் என்ன லாபம் என்று தெரியவில்லை. எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான், போய்ட்டு வாங்க நன்றி என ரஜினிபோல சொல்லி, மழையில் அழுதுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்