பான் கார்ட் திருத்தம் - சிறப்பு சித்திரவதை அனுபவம்

 

 

 

 

 

 

 

பான் கார்ட் திருத்தம் - சிறப்பு சித்திரவதை அனுபவம்

முன்னர் வேலை செய்த நாளிதழில் பிஎஃப் பணத்தைப் பெற்றுத்தர உதவுவதாக மனித வள மேலாளர்
*****ஜா என்பவர் கூறினார். இதெல்லாம் வேலை செய்யும்போதுதான். வேலையை விட்டு விலகியபிறகு, சொன்ன வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அவருக்கு எக்கச்சக்கமாக கோபம் வந்துவிட்டது. உதவி சரி, அதற்காக வேலை செய்யச்சொன்னால் கோபம் வருமா இல்லையா? பெயருக்கு ஒரு கேள்வியை கேட்டுவிட்டு உடனே போனை அணைத்துவிட்டார். பின்னாளில் மின்னஞ்சல் அனுப்பியபோதும் எந்த பதிலுமில்லை. எல்லோரும் இருக்குமிடத்தில் இருப்பதுதான் காரணம் வேறென்ன?

அப்போதுதான் பான் கார்டை கவனிக்க நேரிட்டது. அதில் எனது பெயரை இரண்டாக உடைத்து அச்சிட்டிருந்ததைக் கண்டேன். அதை கவனமாக பார்த்து திருத்த நினைக்கும்போது, கார்டை வாங்கி பத்தாண்டுகள் ஆகிவிட்டது நினைவுக்கு வந்தது. 2014ஆம் ஆண்டு, முன்னாள் பால்ய நண்பரை சந்திக்க நேரிட்டது. அவரது, வாடிக்கையாளர் சேவை மைய கணினியில் வேகமாக பான்கார்ட் அப்ளிகேஷனை நிரப்பினேன். பிறகு, வீட்டுக்கு வந்து வங்கி சென்று டிடி எடுத்து டெல்லி அனுப்பி பெற்ற அட்டை. பெயரை மூன்று கட்டங்களில் நிரப்புவதில் குழப்பம் வர ஒரே பெயரை இரண்டாக ஒடித்து நிரப்பினேன். மின்னஞ்சல் வழியாக பிறந்த நாள் பற்றிய ஒரேயொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அனுப்பியவுடன் அட்டை பதினைந்து நாட்களில் கைக்கு வந்துவிட்டது.

ஆனால் இந்த முறை பான் கார்டை பெறுவது எளிதாக இல்லை. பிஎப் பணத்தை பெறுவதற்கு ஏராளமான இணைப்பு வேலைகள் இருந்தன. சரி, தொடக்கமாக இப்போது அட்டையை திருத்துவோம். பிறகு இணைப்பு வேலைகளைப் பார்ப்போ் என ஆன்லைனில் பான் கார்ட் விவரங்களை எழுதி நிரப்பி, இணையம் வழியாக பணம் 107 ரூபாயும் கட்டியாயிற்று. அடுத்த நாள், கவரில் ஆதார், முகவரி சான்று, இரு புகைப்படங்களை இட்டு ஒட்டினேன். சாதாரண போஸ்டில் பத்து ரூபாய்க்கு ஸ்டாம்ப்புகள் ஒட்டி, அனுப்பி வைத்தேன். ஆன்லைனில் விவரங்களை பூர்த்தி செய்த நாள் 7.5.2024. சாதாரண தபாலை சென்னை பான்கார்ட் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பிய நாள் 8.5.2024.

இறுதியாக பான் கார்ட் கைக்கு வரும்போது தேதி 10.8.2024

மூன்று மாதம் எடுத்துக்கொண்டு ஆவணங்களை சரிபார்க்க காரணம் என்ன? பெயரைத் திருத்தினேன். தாயாரின் பெயரை சேர்த்திருந்தேன். வேறு ஒன்றும் மாற்றமில்லை. மின்னஞ்சலை தெரிவித்தபோதும், வீட்டு முகவரிக்கு அஞ்சலில் கையெழுத்தை வெள்ளைத்தாளில் கருப்பு மையில் எழுதி அனுப்பக்கோரி கடிதம் வந்தது. இக்கடிதம் வந்த தேதி 21.5.2024. எங்களுடைய ஊரின் தபால்காரர், நிதானமானவர். எந்த கடிதம் வந்தாலும்,  அதை சில நாட்கள் கழித்து தாமதமாக எடுத்துக் கொண்டு வந்து புன்னகை மிளிர கொடுப்பார். பொங்கல், தீபாவளிக்கு காசு கொடுத்திருந்தால் தாமத நாட்கள் குறையும். இல்லையெனில் அதிகரிக்கும்.  அப்போது நான் வெளியே நண்பரைக் காணச் சென்றிருந்தேன். சில நாட்கள் தாமதத்திற்கு பிறகு வந்து சென்னை பான்கார்ட் அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் கையெழுத்தை போட்டு அனுப்பி வைத்தேன். பிறகு பதினைந்து நாட்களானாலும் பதிலில்லை.

பான்கார்ட் ஆப்பில் சோதித்தபோது, அதிகாரிகள் எனது ஆவணங்களில் கையெழுத்து இல்லை என  ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். விண்ணப்ப கோப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் என்ன பிழையிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் கூறினால் அதை திருத்தி அனுப்பி வைக்கிறேன் என்று மற்றொரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கும் எந்த பதிலுமில்லை. பேரமைதி.

சில நாட்கள் கழித்து பான்கார்ட் பிரிவின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து ஆதார், முகவரிக்கான ஆதாரம், புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றைக் கேட்டனர். முதலில் இரண்டு ஆவணங்கள், அடுத்து இரண்டு என இரண்டு மின்னஞ்சலில் அனுப்பினேன்.  அதாவது, இதுவரை செய்த அத்தனை விஷயங்களையும் மீண்டும் செய்வதுதானே பொருள்? இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியந்தான் அல்லவா? காசை கட்டியாகிவிட்டது. தேவையான ஆவணங்களை தபாலில் அனுப்பியாகிவிட்டது. ஆனாலும் ஆட்சேபணை தீரவில்லை. கார்ட் கைக்கு வரவில்லை.

7.5.2024 தேதியன்று நீங்கள் கூறியதை சாதாரண தபாலில் அனுப்பி வைத்துவிட்டேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. பரவாயில்லை. மீண்டும் அனுப்புகிறேன் என மின்னஞ்சலில் கூறி ஸ்கேன் செய்து வைத்திருந்த ஆவணங்களை இணைத்து அனுப்பினேன். சில மணி நேரம் கழித்து, எனது கோப்பு நகரத்தொடங்கிவிட்டது என செய்தி வந்தது. பிறகு, மின்னஞ்சலில் இபான் கார்ட் அனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து பான்கார்ட் ஸ்பீட் போஸ்டில் வருவதாக செய்தி வரத்தொடங்கியது. வெள்ளி தொடங்கி சனி மதியம் வரை அந்த தபால் நிலையம் வந்துவிட்டது, இதோ இங்கு வந்துவிட்டது என லைவ் கமெண்ட்ரி மாதிரி செய்திகள் வேறு.

தபால்காரர், பண்டிகைக் காசு கொடுக்காதபோதும் பான் கார்ட் தபாலை கொண்டு வந்து கொடுத்துவிட்டார்.

அலுவலகத்தில் கணினி திறன் கொண்டதாக இருப்பதால் எந்த மாற்றமும் வராது. அதை இயக்குபவர் புத்திசாலியாக, பெறும் சம்பளத்திற்கு சற்றேனும் வேலை செய்யவேண்டும் என நினைத்தால்தான் நிலைமை மாறும். சென்னை அலுவலக பணியாளர் மின்னஞ்சலில் கேள்வி கேட்டிருந்தாலே, வேலையை வேகமாக முடித்திருக்கலாம். ஆனால் அவர் தபாலில் விவரங்களை எழுதிக்கேட்டார். இந்த லட்சணத்தில் மண்டல அலுவலகங்கள் வேறு. அனைவரது அனுபவங்களும் ஒன்றுபோல இருக்காது. எனது சிறப்பு சித்திரவதை அனுபவம் இது. அவ்வளவேதான்.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்