கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!
இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்!
சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம்.
இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நிர்வாகத்தினர் எழுதி தள்ளியிருப்பார்கள்.
மூடநம்பிக்கையைப் பொறுத்தவரை படித்தவர்கள் படிக்காதவர்கள் என எந்த வேறுபாடும் கிடையாது. தான் கற்ற கல்வியை கைவிட்டு, யோசிக்க, சிந்திக்க மறந்த தற்குறிகளாக மாறிய மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவருமே கிருபசனம் கோவிலுக்கு பக்தர்கள். இந்த கோவிலுக்கு வரும் பிரச்னைகளை இவர்களை முன்நின்று தடுத்து அதைக் காப்பாற்றி வருகிறார்கள்.
இடதுசாரி அமைப்பு, கிருபசனம் யூட்யூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து மூடநம்பிக்கையை பரப்புகிறார்கள் என காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு காசைக் கொடுத்து அமைப்பை களங்கப்படுத்தி வைத்திருக்கிறது கோவில் நிர்வாகம். மகாராஷ்டிராவில் உள்ளது போன்ற மூடநம்பிக்கை சட்டம் இயற்றப்படவேண்டும் என்ற இடதுசாரி இயக்கம் கூறியதோடு நிறுத்திக்கொண்டுவிட்டது. கோவிலின் அரசியல்பலம் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், இணையத்தில் கிருபசனம் ஆட்களை கேலி கிண்டல் செய்வதை மக்கள் நிறுத்துவதாயில்லை. கிருபசனம் நாளிதழை சிலர் அதிசயம் நடக்கும் என வெட்டி உணவு போல தின்ற வேடிக்கை வினோதங்கள் எல்லாம் நடந்தன. நம்ப முடிகிறதா?
கிறித்தவர்களுக்கு கூட அல்ல. பெருமளவில் இந்து மக்களுக்கே அதிக அதிசயத்தை கிருபசனம் கோவில் அதிசயத்தை நடத்தி உள்ளது. அவர்கள்தான் இக்கோவிலுக்கு அதிகம் வருகிறார்கள். காணிக்கையை அள்ளிக் கொடுக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை உள்ளது. அதையெல்லாம் கேட்டால் நெட்பிளிக்சில் தனி ஆவணப்படமே எடுக்கலாம். அம்புட்டு அதிசயங்களை கர்த்தர் மண்ணில் நடத்தியிருக்கிறார். அப்படி இருந்தும் கிருபசனம் கோவில் நிறுவனர் வலிய வீட்டில் நோயுற்றபோது கர்த்தர் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதை இணையத்தில் அதிசயங்களை காணப்பண்ணுகிறவர் உதவவில்லையா என நாத்திகர்கள் கேள்வி கேட்க, அதற்கு வலியவீட்டில் பதிலளித்து மாட்டிக்கொண்டார். இன்னும் கேலி, கிண்டல்கள் தீவிரமாகத் தொடங்கின. நிறைய மக்களின் புகார்களை கேட்டு எனது உடல் சக்தியை இழந்துவிட்டது. எனவே, மருத்துவ சிகிச்சையை எடுக்கிறேன். பிரார்த்தனை எனக்கு பயன் அளிக்காது என கூறிய அவரது கருத்துக்கு கெக்கே பிக்கே சிரிப்புகள்தான் அதிகம்.
அடிப்படையில் கிருபசனம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்து அழுது ஒப்பாரி வைத்து குறைகளை கூறி நிவாரணம் பெறுவது வாடிக்கை. அந்த பிரார்த்தனை என்பதே போலித்தனமானது என்பது கேரள நாத்திகர்களின் வாதம். இப்போது பிரச்னை நிறைய வருவதால், நாளிதழில் கூட பொறுப்பு துறப்பு போடத் தொடங்கிவிட்டனர். பின்னே, கம்பெனியை காப்பாற்ற வேண்டாமா?
உளவியல் அடிப்படையில் பார்த்தால், உதவிகளை சுயநலத்திற்காக பெற்றுக்கொள்ளும் உறவுகள் துன்பத்தின்போது அருகில் நிற்பதில்லை. அவர்களுக்கென அப்போது செய்யவேண்டிய சொந்த வேலைகள் இருக்கும். ஆனால், இதுபோல பணம் பறிக்கும் கோவில்கள், மடங்கள் மனிதர்களை ஆற்றுப்படுத்துகின்றன. அதற்கேற்ப இடங்களை அமைதியாக கட்டமைக்கிறார்கள். காசு பிடுங்கினாலும் மக்களின் கோபம், ரத்தம் கொதிப்பது சற்று கட்டுக்குள் வருகிறது. எனவே, அவர்கள் தம் செயலுக்கு வரும் எதிர்ப்புகளை, மூடநம்பிக்கை என பிறர் கூறுவதை கருத்தில் கொள்வதில்லை. ஏதோ ஒரு வகையில் ஆறுதல் கிடைக்கிறதே என வருபவர்களை கோவில் நிர்வாகம் காணிக்கை போடு, காசு குடு என பிடுங்கி எடுத்து பிழைக்கின்றன. கிருபசனம் கோவில் பக்தர்களின் அதிசயங்களை நாளிதழில் ஆவணப்படுத்தி வருகிறது. பின்னாளில் வரும் தலைமுறையினரை ஏய்த்து பிழைக்க ஏதாவது கதைகள் வேண்டும் அல்லவா?
மூலக்கட்டுரை
அவுட்லுக் வார இதழ்
pinterest
கருத்துகள்
கருத்துரையிடுக