உணவு விமர்சகர் தலையில் அடிபட்டு தொன்மைக்காலத்திற்கு சென்றால்.... ஃபுடி குயின் - சீன டிராமா
ஃபுடி குயின்
சீன டிராமா
நவீன காலத்தில் யூட்யூபில் சேனல் வைத்து ஹோட்டல்களில் போய் சாப்பிட்டு அதைப் பற்றி விமர்சனம் செய்யும் பெண்மணி, தொன்மைக் காலத்திற்கு செல்கிறார். அங்கு பேரரசரின் மனைவியாக இருக்கிறார். அவரின்றி, கணவருக்கு நான்கு துணைவிகள் உண்டு. இப்படியான சூழலில் அவர் அரண்மனையில் தனக்கு பிடித்த சமையல் ஐட்டங்களை செய்து அனைவருக்கும் கொடுக்கிறார். இதனால் என்னவானது, அரசியல் சதிகள், பேரரசரைக் கொல்லும் முயற்சிகள் என நிறைய விஷயங்களை நாடகம் பேசுகிறது.
அரசியல், சதி, பொறாமை, வஞ்சம், செக்ஸ் என இதையெல்லாம் விடுங்கள். இந்த டிராமா முழுக்க உணவுதான் பிரதானமானது. தொடர் முழுக்க பல்வேறு சீன கலாசார உணவுகளை வண்ணமாக சமைத்து தள்ளியிருக்கிறார்கள். அதை சாப்பிடவெனவே நாயகியின் தோழி இருக்கிறாள். அவளுக்கு முக்கிய வேலை ராணியை கருத்தரிக்க செய்வது, அடுத்து, ராணி செய்யும் உணவுகளை முதல் ஆளாக சாப்பிடுவது, முதல் வேலையை விட தொடர் முழுக்க இரண்டாவது வேலையைத்தான் சரியாக செய்கிறார். ஓகே உணவுகளை சாப்பிடும் பெண்ணை நேருக்கு நேராக பார்ப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.
பேரரசருக்கு திருமணமே கட்டாயத்தின் பேரில் நடைபெறுகிறது. தனது நாட்டின் ராணுவ தளபதியின் பெண்ணைத்தான் அவர் மணம் செய்துகொள்கிறார். வணிகர்கள், வணிகத்திற்காக ஒப்பந்தம்போட்டு பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுப்பார்களே அதேதான். அதுபோலவே நாயகியை அவரின் அப்பா மணம் செய்து கொடுத்திருக்கிறார். தொடரில் அவரை மன்னர் என்கிறார்கள். ஆனால் அவர் போட்டுவரும் உடையோ தளபதியின் உடை. சொல்வதற்கும் காட்சிக்கும் பொருத்தமே இல்லை.
பேரரசருக்கு வேறு ஒரு பெண் மீது ஆசை இருக்கிறது. அந்தப்பெண்ணை அரசியல் காரணமாக மணக்க முடியாமல் போக, அவரது தம்பி மணம் செய்துகொள்கிறார். பின்னாளில் அந்தப் பெண்ணின் மீது கொள்ளும் மோகமே பேரரசர் மரணப்படுக்கையில் சாகும்படி செய்கிறது. அதில் நாயகி தலையிட்டு சில விஷயங்களை மாற்றுகிறார். பதிலுக்கு அவர் பாதிக்கப்படுகிறார்.
நவீனகால நாயகி, உணவுகளை விரும்பி சாப்பிடுபவர். அதைப்பற்றி பிறருக்கும் கூறி சாப்பிட வைக்கும் அளவுக்கு பெரிய ஆள். அப்படியானவர், அவரது பிறந்தநாள் அன்று தனது காதலை கல்யாணமேடைக்கு கொண்டு வர முயல்கிறார். ஆனால் அவரது காதலனோ, இன்னொரு பெண்ணை கர்ப்பிணியாக்கி அவளை மருத்துவமனை கூட்டிச்செல்ல நினைக்கிறான். காதல் முறிந்துபோகிறது. பிறந்தநாளில் மனவருத்தம் மிகுதியாகி, உட்கார்ந்திருக்கும்போது, அவளது செல்லப்பிராணியான ஆமை கேக்கை சாப்பிட முயல்கிறது. அந்த நேரத்தில் கேக் கீழே, அதை எடுக்க நாயகி வர, அவளது தலை மீது ஆமை விழ.... மயங்கி விழுந்த நாயகி தொன்மை காலத்திற்கு செல்கிறாள்.
உணவு ராணி தொடர் முழுக்க நாயகிக்கான முக்கியத்துவம் அதிகம். ஏனெனில், அவர்தான் ஏராளமான உணவுகளை சமைக்கிறார். அரண்மனையிலுள்ள அனைவருக்கும் கொடுத்து நட்பாகிறார். அவருடைய மாமியாரே விஷம் கொடுத்து வயிற்றில் பிள்ளை உருவாகாமல் தடுக்க முனைகிறாள். அப்போதும் பெரிதாக கவலை கொள்ளாமல், புன்னகைத்தபடியே அரசியல் எதிரிகளை எதிர்கொள்கிறார். பேரரசர் முதலில் அந்த காலகட்ட மனநிலையில் பெண்தானே என பாலுறவு கொள்ள நினைக்கிறான். ஆனால் அது நடக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவனை அவமானப்படுத்துகிறார். பிறகு மெல்ல மனம் மாறி அவரையே சரணடைகிறான். ராணிக்கு தோழியாக சுயு என்ற பணிப்பெண் உள்ளாள். அவள்தான் ஒரே தோழி. ராணிக்காக உயிர்கொடுக்கவும் துணிந்து இறுதியில் இறந்துபோகிறாள்.
ராணியாக அந்தஸ்து தொடர மணமான பெண் மூன்று மாதத்தில் கர்ப்பிணியாகவேண்டும். அல்லாதபோது, அவளை அரண்மனையில் இருந்து விலக்குவது, பணிப்பெண்ணை பணியில் இருந்து அகற்றுவது என்ற செயல்களை ராஜாக்கள் செய்வதைக் காட்டியுள்ளனர். இதே தொடரில் திருமணம், குழந்தைகள் எல்லாவற்றையும் பெண்களே தீர்மானிக்கும் உலகம் உண்டு என நவீன காலத்தைப் பற்றி ராணி தனது பணிப்பெண் சுயுக்கு கூறுகிறாள். உண்மையிலேயே அழகான கற்பனை. அடையவேண்டிய லட்சியமாக அதைக் கொள்ளலாம்.
தொடரின் எபிசோடுகளை பெரும்பாலும் நாயகி, தன்னை அறிமுகப்படுத்தி தொடங்கி வைக்கிறார். பிறகு, மற்ற பாத்திரங்களும் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார்கள். இது ஒரு ஜாலியான உத்தி. உணவு சார்ந்து பார்க்கவேண்டிய வேடிக்கையான சீன தொடர்களில் ஒன்று.
கோமாளிமேடை டீம்
தமிழ்நாட்டில், உணவு சார்ந்து சுவாரசியமான தொடர்கள் முக்கியமான டிவிகளில் இன்றுவரையும் வரவில்லை. ஓடிடிகளில் உணவு பற்றிய தொடர்கள் மெல்ல வரத்தொடங்கியுள்ளன. அவற்றை வரவேற்கலாம். ஆயிரக்கணக்கான கதைகளைக் கூறலாம். ஒருவர் உண்பது என்பது அவரது வாழ்வின் முக்கியமான பகுதி. ஆனால், அதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள சீரியல் இயக்குநர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
அவர்கள் வஞ்சம், கள்ளக்காதல், துரோகம், குழு பலாத்காரம், வல்லுறவு என தனி டிஸ்டோப்பிய உலகில் சஞ்சரித்து வருகிறார்கள். கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏராளமான தொடர்கள், உணவை முக்கியமான அம்சமாக கொண்டு வெளியாகியுள்ளன. மக்களையும் கவர்ந்துள்ளன. அவற்றையெல்லாம் கூட தமிழ் சீரியல் இயக்குநர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. மொழி, நிலம், உணவு, உடை இவற்றையெல்லாம் கவனம் கொள்ளாமல் ஒரு கதையை எப்படி சொல்ல முடியும்?
கருத்துகள்
கருத்துரையிடுக