காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!

 

 

 

 

 

 





 

காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!

சத்தீஸ் மாநிலத்திலுள்ள ராய்பூர் விமானநிலையம். இங்கு ஆதிவாசிகளின் கலையை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் சிலைகள், ஓவியங்கள் உள்ளன. ஆனால், நிஜத்தில் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மீது மாநில, ஒன்றிய அரசுக்கு அக்கறை உள்ளதா என்றால் கிஞ்சித்தும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆதிவாசி மக்கள் காவல்துறை, மத்திய ரிசர்வ் படையினரால் தாக்கப்பட்டு, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கும், அரசுக்குமான போர் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல, பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள்தான்.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் பழங்குடி முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் பதவி ஏற்றார். அந்த நொடி முதலே நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல், ஆதிவாசி மக்களை கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் அமைதி பேச்சுவார்த்தை என்று வினோதமான சொல்லாடலை ஊடகங்களில் கூறிவருகிறார். அவர் சொல்வதற்கும், மாநில அரசு செயல்படுவதற்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. நிர்வாகமோ, பொருளாதார கொள்கையோ, செயல்பாடோ பெரிய மாறுதல்களை அடையவில்லை. பிராமண இந்துத்துவ பாசிச அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. அவ்வளவுதான்.

நக்சலைட்டுகளை ஒழிப்போடு, ஆதிவாசி மக்களுடைய உரிமைகளைக் கேட்டுப்பெற்றுத் தர போராடுபவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது மாநில அரசு. குற்றச்சாட்டாக அவர்களுக்கு மாவோயிஸ்டுகளின் தொடர்பு இருக்கிறது என மாறாத ஒற்றைவரி பதில் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரிலுள்ள நக்சலைட்டுகள் பிரச்னை தீர்க்கப்படும் என்று கூறினார்.
காவல்துறை, மத்திய ரிசர்வ்படை, இந்திய திபெத் எல்லைப்படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியோர் நக்சலைட்டுகள் ஒழிப்பு பணியில் உள்ளனர். ஆறு மாதங்களில் 130 நக்சலைட்டுகளை கொன்றுள்ளதாக கூறுகிறார்கள். 2022ஆம் ஆண்டில் 32, 2023ஆம் ஆண்டில் 25 ஆக இருந்த நக்சலைட்டுகளின் மரண எண்ணிக்கை இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது.

நக்சலைட்டுகளின் கைது பற்றி பார்ப்போம். 2022ஆம் ஆண்டு 76, 2023ஆம் ஆண்டு 134, 2024இல் 390 என நக்சலைட்டுகளின் கைது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மே 11 - ஜூலை 18 வரையிலான காலகட்டத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேலான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி கொல்லப்படுவதில் ஆதிவாசி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிநபர்களாக 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை காவல்துறையின், ராணுவத்தின் சாதனையாக மட்டுமே பார்க்க முடியும் என உள்ளூர் பத்திரிகையான சத்தீஸ்கர் தகவல் தெரிவிக்கிறது. சிறுமி, இளம்பெண்கள் என எதையும் ராணுவத்தினர் கவனிப்பதில்லை. இதில் கைக்குழந்தைகளை கூட சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பதுதான் பேரவலம்.

சிவப்பு காரிடார் என்ற அழைக்கப்படும் பகுதி, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ம.பி ஆகியவற்றை இணைத்துச் செல்கிறது. இங்கு எல்லாமே மக்கள் விடுதலை கெரில்லா படையின் அறிவிப்புகள் பல்வேறு இடங்களில் தென்படுகின்றன. அதில், நேரடியாக இந்துத்துவ பாசிச அரசு என பாஜக கட்சியை தாக்கி, பெருநிறுவனங்களுக்காக ஆதிவாசி மக்களைக் கொல்கிறது என குற்றம்சாட்டி நோட்டீசுகளும் உள்ளன. பிராமண இந்துத்துவ பாசிசம் என பாஜகவின் கொள்கையும் கூட சிலவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்பர் என்ற நக்சலைட்டுகளின் ஆதிக்கம் கொண்ட ஆதிவாசி கிராமத்தைப் பார்ப்போம். இங்கு  கடந்த ஏப்ரலில் அரசின் ரிசர்வ் படை நடத்திய தாக்குதலில் இருபத்தொன்பது பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பதினைந்து பேர் பெண்கள். ஜனேலா என்ற இளம்பெண் மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தை ராம்சாய் நூருதி 2015ஆம் ஆண்டு இறந்துபோனார். இவரது மரணம் கூட ரிசர்வ் படையின் ஆதாரமற்ற சித்திரவதைகளால் நேர்ந்ததுதான். கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவரை ராணுவம் விசாரணை என அழைத்து சென்று சித்திரவதை செய்து மூன்று ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது. பிறகு விடுவித்தபோது, அவருடைய உடல் ஊனமாகியிருந்தது. விடுதலையாகி சில மாதங்களிலேயே நோயுற்று இறந்துபோனார்.

நாராயண்பூர் மாவட்டத்தில் தினகுண்டா கிராமம் உள்ளது. இங்கு நடக்கும் பள்ளிக்கு ஆசிரியர் எவரும் வருவதில்லை. பள்ளி என்று யாரும் கூறினால் அதை நம்பவே முடியாது. சிமெண்ட்டில் கட்டப்பட்ட கூரை கொண்ட ஒற்றை ஹால். சுவரில் நேதாஜியின் புகைப்படம் உள்ளது. ஒற்றை ஹாலை சுற்றி வேலி ஒன்றுள்ளது. அவ்வளவேதான். இந்தப்பள்ளிக்கு ஆசிரியர், ஐந்தாவது வரையில் படித்த உள்ளூர்வாசி ஒருவர். இவருக்கு மாதம் 1,500 ரூபாயை தருவது மாநில அரசு கிடையாது. உள்ளூர் மக்களே காசு திரட்டி, தமது பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க மெனக்கெட்டுள்ளனர். இப்பள்ளிக்கு படிக்க வந்த மாணவி ஜனேலா, ராணுவத்தால் மாவோயிஸ்டு என கூறப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாள்.

மாவோயிஸ்டுகள் பிரிவு, ஏப்ரல் மாதம் நடந்த ராணுவ தாக்குதலில் பனிரெண்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பதினேழு பேர் கைது செய்தபிறகு கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. இதை மாநில அரசு, பொதுமக்களின் இரக்கத்தை சம்பாதிக்க மாவோயிஸ்டுகள் முயல்கின்றனர் என்று கூறி நிராகரித்தனர். கிராமங்களில் உள்ள ஆதிவாசி பெண்களை ராணுவத்தினர் வல்லுறவு செய்வதும், தட்டிக்கேட்கும் ஆண்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து சிறையில் வதைப்பதும் வரலாற்றில் மாறாத செயல்கள். குற்றம், ஆதாரம், விசாரணை, நீதிமன்றம் என்பதெல்லாம் சத்தீஸ்கர் மண்ணிற்கு அறிமுகமாகவில்லை. இந்தியாவில் அது தனியாக இயங்கிக்கொண்டிருக்கிற உலகமாக உள்ளது.

தேர்தல் லாபத்திற்காக பல பெண்களை வல்லுறவு செய்த சாமியாரை பிணையில் வெளியே விடப்படுகிறார். அதேநேரம், சுதந்திரதின உரையில் பெண்களின் பாதுகாப்பு பற்றி துணிச்சலாக இந்திய ஆட்சித்தலைவர் பேசுகிறார் அல்லவா? அதே நிலைதான் இங்கும் உள்ளது. பேசுவதற்கும் செயல்பாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசின் அனைத்து திட்டங்களும் சக்கிரமமாக தாளில் உள்ளது. ஆனால், நடைமுறையில் அரசின் ஆதரவு பெற்ற வணிகர்கள் கிடைக்கும் பணம் அனைத்தையும் சுருட்டிக்கொள்கிறார்கள்.

மனித உரிமைக்காக போராடிய பலரும் தேசதுரோக சட்டமான ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டுவருகிறார்கள். சர்வ ஆதிவாதி சமாஜத்தைச் சேர்ந்த சர்ஜு தேக்கம், மனித உரிமை, காட்டை வணிகமயமாக்குவதற்கு எதிராக போராடி வந்தவர். இவருக்கு பிணை கிடைக்க முடியாதபடி அரசு பார்த்துக்கொண்டது. பிலாஸ்பூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. அவரது வீட்டில் கிடைத்த ஏதோவொரு நூலை வைத்து மாவோயிஸ்ட் இணைப்பு என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக சர்ஜூ தேக்கமின் உறவினர்கள் தகவல் கூறுகிறார்கள்.

பியூசிஎல் என்ற அமைப்பைச் சேர்ந்த சுனீதா போட்டம் மீது டஜன் கணக்கிலான வழக்குகள் போடப்பட்டுள்ளன. 2020-2024 காலகட்டத்தில் கொலை, கொலை முயற்சி என எழுதப்பட்ட வழக்குகள் ஆச்சரியமூட்டுகின்றன. பழங்குடி முதலமைச்சரைக் கொண்ட இந்துத்துவ பாசிச அரசு, சுரங்கங்களை எதிர்த்துப் போராடும் போராட்டங்களைக் கூட சகித்துக்கொள்வதில்லை. அந்த வகையில் மகாதேவ் நேட்டம், லக்மு கொர்ரம், குட்டு சலாம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதைப்பற்றி ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அரவிந்த் நேட்டம், ஆதிவாசி மக்களின் கிராமங்களில் ஒன்றரை லட்சம் பாராமிலிட்டரி படை உள்ளது. நீண்டகால நோக்கில் ராணுவ எண்ணிக்கையை இரட்டை மடங்காக உயர்த்துவது பயன்தராது. மாவோயிஸ்டுகள் உருவாகியிருப்பது சமூக, பொருளாதார, கலாசாரம் சார்ந்தது. அதைப்புரிந்துகொள்ளாமல் ராணுவத்தை வைத்து பிரச்னையை தீர்க்கலாம் என அரசு நினைக்கிறது என்று கூறினார்.
 
மூலக்கட்டுரை பிரன்ட்லைன்
தீரன் சகாயமுத்து

#chhattisgarh #operation prahar # adivadi #arrest #activists #fake encounter #hindutuva #facism #draconian rule #mine #corporate #cpiml #people liberation guerilla army #war #maoist #human rights # guerilla war #crpf #misbehave #probaganda #cpimaoist #jal jangal jzameen #justice #PUCL #CDRO #surju tekam #UAPA act #NIA

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்