பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை மீட்க நகைகளை திருடும் நாயகன்!
ஊரு பேரு பைரவக்கோணா
இயக்கம் வீ ஆனந்த்
இசை சேகர் சந்திரா
சந்தீப் கிசான், வர்ஷா, காவ்யா
கல்யாண வீட்டில் நகைகளை திருடிக்கொண்டு திருடர்கள் இருவர் காட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில், ஸ்கூட்டியில் அடிபட்டுக்கிடக்கும் பெண்ணைப் பார்த்து இரக்கப்பட்டு காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். நகைத் திருடர்களை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த நேரம் திருடர்கள், மின்மினிப்பூச்சிகளால் ஈர்க்கப்பட்டு பைரவக்கோணா என்ற கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு ஒரே நேரத்தில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் ஊர் மக்கள் பார்க்க, நால்வரை கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிராமத்தின் வினோதம் என்ன, நகைகளை திருடிக்கொண்டு உயிரை பணயம் வைத்து நாயகன் செய்யும் சாகச சம்பவம் எதற்காக என்பதே படத்தின் மையக் கதை.
வீ ஆனந்த் தெலுங்கில் இதுவரை எடுத்த அனைத்து படங்களிலும் வினோதமான புனைவு மையமாக இருக்கும். இவர், தமிழில் அப்புச்சி கிராமம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க பழங்குடி மக்களை எப்படி காட்டிலிருந்து துரத்துகிறார்கள், அந்த மக்கள் நகரத்தில் வீடற்றவர்களாக குப்பைகளை பொறுக்கி பிழைப்பதை காட்சிபடுத்தியது புதியது. வணிக சினிமா எடுப்பவர்கள் இதுபோல மையப்பொருளை தொடுவதே இல்லை. அரசியல் சார்ந்து படம் மாறிவிடுமோ என பயமாக இருக்கலாம்.
பசவலிங்கம் ஒரு பார்ட் டைம் திருடன். மீதி நேரம், சினிமாவில் டூப்பாக இயங்கி வருகிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு வேலையை சித்தப்பா கூறுகிறார். ஒரு பெண்ணை கடத்தி வருவதுதான் அது. அந்த வேலையில்தான் பசவா, பழங்குடி இனப்பெண்ணான நாயகியை சந்திக்கிறான். அவள், தன்னுடைய ஒட்டுமொத்த பழங்குடி இனத்தை மீண்டும் காட்டுக்கு கொண்டு செல்வதற்காக சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள். படத்தில் வலுவாக எழுதப்பட்டுள்ள பாத்திரம் நாயகியுடையதுதான். மற்றபடி நாயகன் பாத்திரம் காதலுக்காக அவளை சுற்றி வந்து பிறகு அவளுடைய லட்சியத்தை தனதாக்கி கொள்கிறான். அவனுடைய காதலை விட நாயகியின் வாழ்வுரிமைப் போராட்டம் ஈர்ப்புடையதாக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு பழங்குடிகளுக்கு நிலத்தை கொடுப்பதாக படத்தில் காட்டப்படுகிறது. இதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. படத்தில் நேர்மறையாக பழங்குடிகள் காட்டுக்கு திரும்ப செல்வதாக காட்டப்படுகிறது. நிஜத்தில் அதற்கு கிஞ்சித்தும் வாய்ப்பே இல்லை. ஒகே சினிமாதானே? அதிலேனும் நமது கனவை நிறைவேற்றிக்கொள்வோமே?
சேகர் சந்திராவின் இசையில் பாடல்கள், பின்னணி இசை எல்லாமே படத்தை முடிந்தவரை மேலே தூக்க முயல்கிறது.
பிளாஷ்பேக், நிகழ்காலம், மீண்டும் பிளாஷ்பேக் என கதை சென்று வருவது கதையை சுவாரசியமாக்கவில்லை. மாறாக பலவீனப்படுத்துகிறது.
சந்தீப் கிஷன், அவரது நண்பன் ஹர்ஷா பாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். இதில பொருந்தாமல் தத்தளிப்பவர் காவ்யா தாப்பர்தான். இவர் நெடுஞ்சாலை திருடியாக நடித்து பைரவ கோணாவிற்குள் வருகிறார். படத்தில் இவருக்கென குத்துப்பாடல், காதல் பாடல்கள் என எதையும் வைக்கவில்லை. அதே பெரிய ஆறுதல். பெருங்கூட்டு உடல் கொண்ட பெண்ணான அவரைப் பார்த்தால் உடனே குத்துப்பாட்டை ஆட வைத்துவிட அதிக வாய்ப்புகள் உண்டு. இதை எழுதும்போது டபுள் இஸ்மார்ட் சங்கர் பாடத்தில் குத்துப்பாட்டில் காவ்யா ஆடி முடித்துவிட்டார்.
ஆஜானுபாகுவான பெரிய உடல், நெடுஞ்சாலை திருடி என்ற பாத்திரத்தில் காவ்யாவை பொருத்த முடியாமல் தடுக்கிறது. அவரைப் பார்த்தாலே சேட்டு வீட்டு பெண், தொழிலதிபர், விளம்பர மாடல் மாதிரி தோன்றுகிறது. ஆந்திரத்தின் தன்மை கொண்ட வேறு யாரையாவது நடிக்க வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். படத்தில் ஒரு இடத்தில் வெண்ணிலா கிஷோர், கொள்ளைக்காரனின் ஆன்மாவிடம், உனக்கும் உன் மகளுக்கும் எந்த சாயலுமே ஒன்றாகவே இல்லையே என கேட்கிறார். நமக்கும் அதே கேள்விதான்.
பைரவக்கோணா என்ற கிராமம் இறந்து போனவர்களுக்கான உலகம். கோபம், வன்மம், பழி, துரோகம் ஆகிய உணர்வுகளால் நிறைவுறாத ஆசைகளோடு இறந்தவர்கள் அங்கு இரவில் மட்டும் உயிர் பெற்று எழுகிறார்கள். பகலில் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் உணர்வு சமநிலையான பிறகு, மோட்சம் பெற்று விடுதலை பெறுகிறார்கள். அங்குள்ளவர்கள் வேறு எங்கும் தப்பித்து செல்ல முடியாது. அந்த கிராமத்தை பெத்தம்மா என்ற பெண்மணி பராமரிக்கிறார். தப்பிக்கும் ஆன்மாக்களை, தவறுதலாக வந்துவிட்ட தப்பிக்க நினைக்கும் மனிதர்களை அடித்து இழுத்து வர பாதுகாவலர்கள் காட்டின் எல்லையில் இருக்கிறார்கள். அங்கு உயிருள்ள மூவர் செல்கிறார்கள். காரணம், அங்குள்ள இறந்துபோன உயிர் பசுவாவை அங்கு வரவேண்டும் என விரும்புகிறது. அவனைக் கொல்ல நினைக்கிறது. அந்த ஆன்மா யார் என்பது இறுதியாக தெரிய வருகிறது.
பழங்குடி நாயகி, நாயகன் ஆகியோருக்கான காதலை நாமே உணர்ந்துவிட்டபிறகு, நாயகன் ஐயம் சாரி, ஐ லவ் யூ என்று சொல்லும வசனம் கூறியதைக் கூறல் போலவே உள்ளது. தெலுங்கில் அல்லது பழங்குடிகளின் மொழியில் கூறியிருக்கலாம். கூறுவது கூட தேவையில்லை. அவர்களின் காதலை காட்சிரீதியாக நாமே பார்த்துவிடுகிறோமே பிறகு எதற்கு வசனம்?
வினோத நம்பிக்கை கொண்ட கிராமம், அதை நிரூபிக்க கருட புராணத்தை வம்படியாக இழுத்து வருகிறார்கள். பேய்ப்படம் போல வெறித்துப் பார்க்கும் பாத்திரங்கள் கிளிஷேவாக இருக்கின்றன. அதெல்லாம் தேவையே இல்லை. பழங்குடி நாயகி, திருடனான நாயகன் என இரண்டுபேரின் காதல் எதிர்பார்த்த அளவில் அழுத்தமாக கூறப்படவில்லை. எனவே, படத்தைப் பார்க்கும்போது இதுக்காகவாடா இந்த பில்டப் என்று தோன்றுகிறது. முன்னர் நடித்த மைக்கேல் மாதிரியான படத்தை விட பைரவக்கோணாவில் சந்தீப் கிஷனைப் பார்க்க நன்றாக இருக்கிறது.
நாயகன் திருடனாக இருக்கிறான். அந்த வேலையைக்கூட தன்னை எடுத்து வளர்த்த சித்தப்பாவிற்காக செய்கிறான். அது தவறான வேலை என புரிந்துகொண்டு சினிமாவில் டூப்பாக மனதுக்கு பிடித்தது மாதிரி வேலை செய்து சம்பாதிக்கிறான். படத்தின் காட்சிகளில் நாயகன் டூப் வேலையை விட திருட்டு வேலையை மனப்பூர்வமாக செய்வதுபோல தெரிவது ஏன்? நாயகனின் மனநிலை சரியாக பதிவு செய்யப்படவில்லையோ?
வித்தியாசமான வினோதமான உலகை தரிசிக்க வேண்டுமா, அப்படியானால் பைரவக்கோணாவைப் பார்க்கலாம். வித்தியாசம் என்ற வார்த்தையில் மட்டுமே படம் நின்றுவிட்டது.
மாயலோகம்
கோமாளிமேடை டீம்
Director: Vi Anand
Language: Telugu
Music by: Shekar Chandra
Produced by: Razesh Danda
Production companies: AK Entertainments; Hasya Movies
கருத்துகள்
கருத்துரையிடுக