2024 trends இதுதானுங்கோவ்....

 

 

 

 


 

 



 

 

நாகரிகமோ, நாதாரித்தனமோ உலகம் அதையெல்லாம் கவனிப்பதில்லை. உங்கள் சட்டை பிராண்ட் ஏரோ, தலைக்கு எழுநூறு ரூபாய் கொண்ட இங்கிலாந்து தேங்காய் எண்ணெய் தேய்க்கிறீர்கள், கால்சட்டை இரண்டாயிரம் ரூபாயா, கையில் கட்டியுள்ள வாட்ச் ரோலக்ஸா, ஒமேகாவா, குடிப்பது பிஸ்லரியா, கண்ணில் ரேபான் குளிர் கண்ணாடி, ஓட்டுவது டெஸ்லா காரா என்றுதான் உற்று கவனிக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துதான் மனிதனை உலகம் அளவீடு செய்கிறது. இதுபோல சமகாலத்தில் உள்ள விஷயங்களைத்தான் பார்க்கப் போகிறோம்....

கடித்த ஆப்பிளின் நிர்வாணமே செக்சி


தலைப்பைப் பார்த்து உடனே நீங்கள் நினைப்பதை ஜாவ் குரு வலைத்தளத்தில் தேடி கண்டடையலாம். அதைக் கூறவரவில்லை. ஐபோனை வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? உலகையே ஜெயித்தவர்களைப் போல நடந்துகொள்வார்கள். பின்னே ஒரு லட்சத்திற்கும் பக்கத்தில் காசு கொடுத்து ஆப்பிள் மார்க் போனை வாங்கியுள்ளார்களே? அதை பிறருக்கு காட்டவே அதற்கு கவர் போடாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதைத்தான் அந்த ஆப்பிள் கம்பெனியும் விரும்புகிறது. அதைத் தாண்டி 240 மாட்டு நல அரசு செய்யும் உளவு வேலைகளை ஊருக்கு சொல்லும் ஒரே போன் கம்பெனி, கடித்த ஆப்பிள் போன் மட்டும்தான். எனவே, கவர் போடாமல் ஆப்பிள் போன் வாங்கியவர்கள் சுற்றலாம் தவறில்லை.

பாட்காஸ்ட்டைத் தொடங்கி பேசுவோம்
கோமாளிமேடையிலேயே பாட்காஸ்ட் தொடங்கிவிட்டார்கள். அப்புறம் என்ன? முழு உலகமும் பாட்காஸ்டை ஆடியோவாக தொடங்கி இப்போது வீடியோவுக்கு நகர்ந்துவிட்டது. ஆளாளுக்கு முன்னே நீட்டிய மைக்குகளுடன்தான் வீடியோக்களில் தோன்றுகிறார்கள். கண்ணில் பார்த்த கண்டதையும் பேசித்தள்ளுகிறார்கள். சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்து விஷயங்களையும் குழுவாக உட்கார்ந்து பேசித் தள்ளுகிறார்கள். இந்தியாவில் மாட்டு நல அரசு புதிய இணைய தணிக்கை மசோதாவைக் கொண்டுவரவிருக்கிறது. அதற்குள் எவ்வளவு முடியுமோ அந்தளவு பேசிக்கொள்ளலாம். அப்புறம் வலைத்தளம், பாட்காஸ்ட் ஆட்கள் எல்லாம் சிறையில்தான் ஹாய் சொல்லும் நிலை இருக்கும். அது கிடக்கட்டும். தணிக்கை மசோதா பற்றி பேசுவோமா?

தூக்கத்திற்கான மதிப்பெண்

முழுக்க இணையத்தில் பலரும் இருப்பதால் மூளை கொதிப்பிலேயே இருக்கிறார்கள். எனவே, அதை அமைதிபடுத்தி தூங்க ஃபிட்பிட், ஆரா ரிங், மெக்னீசிய மாத்திரை, அமுல் பால் என நிறைய அம்சங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மனிதர்கள் உறங்கினாலும் கூட எலக்ட்ரானிக் கருவிகள் விழித்தெழுந்து அவர்களைக் கண்காணித்தபடியே உள்ளது.

ஒயினாகும் தண்ணீர்

இந்திய மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதே லட்சியக்கனவாக உள்ளது. இதெல்லாம் தாண்டி சில பிரபலங்கள் உலகின் பல்வேறு மலைத்தொடர்களில் கிடைக்கும் குடிநீரை வாங்கிக் குடித்து வருகிறார்கள். 45 லட்சம் விலை கொண்ட 750 மில்லி குடிநீர் பிராண்டின் பெயர் அக்குவா டி கிரிஸ்டாலோ. இதை பெரும் பணக்காரர்கள் வாங்கி ஸ்டாக் வைத்து குடித்து வருகிறார்கள். எதற்கு எல்லாம் அந்தஸ்துக்காகத்தான். கிம் கதர்ஷியன், பாரிஸ் ஹில்டன் ஆகிய பணக்கார பிரபலங்கள், மேற்சொன்ன பிராண்ட் குடிநீரை அடிக்கடி சிப் அடித்து மக்களை பிரியமாக பார்த்து புன்னகைத்து வருகிறார்கள். கேமராக்கள் இருக்கும்போது அதிக தாகம் எடுத்து குடிநீரை குடிக்கிறார்கள் என்பதுதான் அறிய வேண்டிய சங்கதி.

உள்நாட்டில் கிரிக்கெட் வீரர் விராட்கோலி லிட்டர் 4 ஆயிரம் விலையுள்ள கன்னங்கரேலென்ற குடிநீரை வாங்கி குடித்து வருகிறார். ஆரோக்கியத்திற்கு என்று கூறப்படும் இதைப் பார்த்தால் இந்திய மக்கள் குடிக்கும் குடிநீர் என்பதற்கெல்லாம் அர்த்தமே இல்லை.

மின்னஞ்சல் அனுப்புவோமே?

இப்போது மின்னஞ்சல்,காலண்டர் வசதியெல்லாம் பெரிதாக மக்கள் பயன்படுத்துவதில்லை. அதையெல்லாம் ஏஐக்கு மடை மாற்றிவிட்டனர். அதுதான், மின்னஞ்சலின் சுருக்கத்தை கூறுகிறது. பதிலையும் எப்படி எழுதலாம் என்று ஐடியா கொடுக்கிறது. இதனால், மனிதர்கள் முன்னேறி விட்டார்களா, புத்திசாலித்தனம் காரணமாக, மக்களுக்கு பயன் கிடைத்துவிட்டதா என்று கூறமுடியாது. அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட், சிரி ஆகியவைதான் மின்னஞ்சலை படிக்கின்றன. எதிர்காலத்திலும் படிக்கும். இப்போது சாட்ஜிபிடி அந்த இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் நேர்காணல்களை ஏஐதான் எடுக்கிறது. எனவே எதுவும் நடக்கலாம்.

ஆஹா கல்யாணம்

ஊரை அடித்து உலையில் போட்டாலும் பதற்றம் கூடாது. மக்கள் நோய்த்தொற்றால் சாகும்போது காசு சம்பாதித்து பெரும் பணக்காரர்கள் ஆனாலும் குற்றவுணர்வு கொள்ள வேண்டியதில்லை. அதை ஒரே ஒரு கல்யாணம் மாற்றிவிடும். நீங்கள் யார் என்பதை உங்களைப் பார்க்க யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்பதை வைத்துத்தான் கூற வேண்டும். எனவே, பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி கல்யாணத்தை நடத்த வேண்டும். அதற்கு காசு கொடுத்து பிரபலங்களை அழைத்து அவர்களை கோமாளிபோல ஆட வைக்கவேண்டும். முக்கியமாக கல்யாண விருந்து. அதில், சாப்பிடுகிறார்களோ இல்லையோ என்னால் முடியும் என்று சொல்லும்படியான ஆயிரக்கணக்கான உணவு வகைகளை தயாரித்து பரிமாற வேண்டும். இது ஆணவம் போல தெரிகிறதா? இல்லை இதனால் நாட்டின் பொருளாதாரமே பலமடங்கு உயர்ந்துவிட்டது. யார் சொன்னார்கள்? யாரும் சொல்ல மாட்டார்கள். அதை நாம் வாங்கி வைத்துள்ள டிவி சேனல்கள், பத்திரிகைகள் மூலம் திரும்ப திரும்ப சொல்லவேண்டும். இணையத்தில் உள்ள ஆட்களுக்கு காசு கொடுத்து கட்டுரைகளை எழுத வேண்டும். மக்களை நம்ப வைக்கவேண்டும். எத்தனையோ விஷயங்களை நம்புபவர்களுக்கு இதை நம்புவதற்கென்ன கேடு?  

வயிற்றுக்கான சந்தை

வயிறுதான் அனைத்துக்கும் காரணம். அதிலுள்ள நுண்ணுயிரிகளுக்கென ஏராளமான நிறுவனங்கள் தயிர், மோர், பால் என ஏராளமான பொருட்களைத் தயாரித்து தள்ளுகின்றன. அவற்றை பேரங்காடிகளில் வாங்கிக்கொள்ளலாம். முக்கியமாக ஜிஎஸ்டி கட்டி வாங்குவது அவசியம். வயிற்று நலத்திற்காக பிரசாரம் செய்யும் மருத்துவர்கள், அவர்களுக்கு பின்னே ஒளிந்துள்ள நிறுவனங்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். வயிற்றை சரி செய்யும் மருந்துகள், உணவுகள் என பெரிய சந்தையே இயங்குகிறது.

தங்க விசா

இதை வளைகுடா நாடுகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கியதை இணையத்தில் பார்த்திருப்பீர்கள். 240 மாட்டுநல அரசு விதிக்கும் வரிகளால் அந்த கட்சியின் தாயான இந்து தீவிரவாத குழுக்களே விழி பிதுங்கி வருகின்றன. வழிப்பறிக் கொள்ளை போல வரி பிடுங்கப்படுவதால், இந்திய மக்கள் எங்காவது தப்பித்து சென்றால் பிழைத்துக்கொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். இதை பயன்படுத்த வெளிநாடுகளும் ஆர்வத்துடன் உள்ளன. நடப்பு ஆண்டில் 4 ஆயிரம் பணக்காரர்கள், அரபு அமீரகத்திற்கு செல்வார்கள் என ஹெண்ட்லி அண்ட் பார்ட்னர்ஸ் அமைப்பின் ஆராய்ச்சி கூறுகிறது.

மால்டா, பனாமா, செயின்ட் லூசியா ஆகிய நாடுகளில் முதலீடு செய்துவிட்டு அங்கேயே தங்கிக்கொள்ள முடியும். அப்புறம் என்ன, காலில் மாட்டுச்சாணியை மிதித்துவிடாமல் பொட்டியைக் கட்ட வேண்டியதுதான். விமானம் பிடித்து வேறுநாடுகளுக்கு தப்பித்துப்போய் சுதந்திரமாக வாழத் தொடங்கவேண்டியதுதானே?

ஆடம்பரம் வேண்டாமே

ஆமாங்க! பென்ஸ், போர்ச் கார்களில் வேகமாக போய் நாலைந்து பேர்களைக் கொன்றால் கூட சாகச அனுபவம் கிடைக்கமாட்டேன்கிறது. நூறு கோடிக்கும் அதிகம் பேர் வாழும் நாட்டில் இரண்டு கோடிப்பேர்தான் வரி கட்டுகிறார்கள். இதுபோன்ற நாட்டில் பணக்காரர்களாக இருப்பது, எத்தனை மனங்களை புண்படுத்தும்? எனவேதான், ஆடம்பரம் இல்லாத உடைகளை பெரிய பணக்காரர்கள் அணிந்து எளிமையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அணிந்துள்ள ஆடையின் விலையை இணையத்தில் தட்டச்சு செய்து பார்த்தாலே அது, டாடா நானோவை விட, மாருதி ஸ்விப்டை விட அதிக விலை கொண்டதாக இருக்கும். மெல்லிய வண்ணங்களைக் கொண்ட கண்களை உறுத்தாத கோடுகள் வரிகளைக் கொண்ட சட்டை பேண்டுகள் இப்படியான எளிமையை அடிப்படையைக் கொண்டவை. உலகமெங்கும் உள்ள பணக்காரர்கள், இதுபோல அணிந்து எளிமையே அழகு என்பதை உலகிற்கு அறிவிக்க முனைகிறார்கள். அவர்கள் நோக்கம் நிறைவேறட்டும். ஆமென்.

படிப்பு முக்கியம்ப்பா!

சில சினிமா பிரபலங்கள் நிறைய நூல்களை படிப்பதாக சொல்லுவார்கள். படத்தில் ஏதோ பொருள் போல கையாளப்படுவார்கள். லூசு பாத்திரங்களில் நடித்து பேட்டிகளில் ஜோக் சொல்லி நவ்வுவார்கள். அத்தனைக்கும் எது காரணம் என நினைக்கிறீர்கள்? புத்தகங்கள்தான். கிண்டிலில் நூல் படிக்கும் காலத்தில் நூல்களை தலைப்பு என்னவென்றே தெரியாமல் விமானநிலையத்தில் வாங்கி வைத்துக்கொண்டு அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், டிக்டாக்கில் போட்டு இமேஜை ஏற்றுவதுதான் இப்போதைக்கு டிரெண்டு. நூல்களை வாசிக்கும்போது உடலில் பிகினி இருப்பது கட்டாய விதி. அப்போதுதான் புத்தக கருத்துகள் தடையின்றி ஜிவ்வென மூளைக்கு ஏறும். இதெல்லாம் எதற்கு மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தத்தான்.

ஸ்மார்ட் டூ அனலாக் வாட்ச்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கையில் கருப்பாக ஆபரணத்தை அணியத்தொடங்கினர். ஆம், வாட்சுகளை கட்டத் தொடங்கினார்கள். அதில் மணி சாதாரணமாக பார்த்தால் தெரியாது. பட்டனை அழுத்தினால்தான் திரை தெரியும். அதில் நேரம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகிய பல்வேறு உறுப்புகளின் நலத்தை ஒரே பார்வையில் அறியலாம். ஸ்மார்ட் வாட்சை கொழுத்த பன்றி போல, இரை விழுங்கிய மலைபாம்பு போல உள்ள பிரபலங்கள்தான் அதிகம் அணிந்தனர். இப்போது என்னடாவென்றால், மீண்டும் அனலாக் வாட்சிற்கு வந்திருக்கிறார்கள். கட்டியவர்கள் முட்டாள்கள் என்றால் மணிக்கட்டிலாவது ஸ்மார்ட் என்ற வார்த்தையை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போது அந்த வசதியும் இல்லை.

டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையை அடிப்படையாக கொண்டது.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்