திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!

 

 

 



 

 

 

திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!

ஒன் இந்தியா, எஸ்எஸ் மியூசிக், பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளங்கள் போல சல்லித்தனமாக தலைப்பு அமைந்துவிட்டது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டெலிகிராமின் நிறுவனர், இயக்குநர் பாவெல் துரோவ், பிரான்சில் கைதாகி விடுவிக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராமில் பாலுறவு வீடியோக்கள் பகிரப்படுவது, தவறான சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை கைதுக்கான காரணம் என கூறப்படுகிறது. உண்மையில் ஒரு ஆப்பை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவர் தொடங்குகிறார். ஆனால், அதன் பயன்பாடு நாளடைவில் கட்டற்றதாக கட்டுப்படுத்த முடியாததாக மாறுகிறது. இந்த செயல்பாடு, அதைப் பயன்படுத்தும் மக்களின் கைகளில் உள்ளது. இதற்காக எதற்காக ஆப் தொடங்கினாய், உன்னால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என ஆப் உரிமையாளரை கைது செய்வது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது அல்லவா? அப்படி பார்த்தால் கோடிங் எழுதுகிறவர்கள் அனைவரும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுவும் சாத்தியம்தான்.

1984ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்தவர் துரோவ். இன்றைக்கு அவரது டெலிகிராம் நிறுவனம், துபாயில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் என இரு நாடுகளின் குடியுரிமையைக் கையில் வைத்திருக்கிறார். இப்போதும் கூட ரஷ்யா தனது நாட்டில் பிறந்த துரோவ்வை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவில்லை. அவருக்காக சட்டப்போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளது. இதற்கு பாவெல் துரோவ், முந்தைய காலகட்டங்களில் ரஷ்ய அதிபர் புதினுக்கு கொடுத்த ஒத்துழைப்பும் முக்கியமானது.

டெலிகிராம் வழியாக ரஷ்ய புலனாய்வுத்துறை, அரசியல் எதிரிகளை எளிதாக களையெடுத்து வருகிறது. இதைப்பற்றி வயர்ட் இதழில் விரிவான கட்டுரை எழுதப்பட்டுவிட்டது. அதில் டெலிகிராமின் கோடிங்குகள் எப்படி பலவீனமானவையாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. முன்னர் விகே என்ற சமூக வலைதள விவகாரத்தில் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய துரோவ், வணிகத்திற்காக டெலிகிராம் விவகாரத்தில் சமரசமாகிவிட்டார். எனவே, ரஷ்யா விகே நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி நடத்தி வருகிறது. கூடுதலாக, டெலிகிராம் வழியாக புதின் தனது அரசியல் எதிரிகளை அடையாளம் கண்டு சிறைப்படுத்தி வருகிறார். சிலரை தீர்த்துக் கட்டியும் வருகிறார். இதற்கு உதவிய துரோவ்வை விட்டுக்கொடுக்க ரஷ்யா விரும்பவில்லை. குரோவே ரஷ்ய அரசுக்கு கோரிக்கை விடுக்காதபோதும், அந்த நாடு கோதாவில் குதித்திருக்கிறது. நாட்டு குடிமகன் மீது இப்படியல்லவா, கட்டற்ற அன்பு இருக்கவேண்டும் ஒரு அரசுக்கு....ரஷ்யாவுக்கு துரோவ் மாதிரியான ஒரு டெக் ஆளுமையின் தேவை எப்போதும் உள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு வருவோம். துரோவிற்கு இன்றுவரை மணமாகவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக விந்தணு தானம் செய்துவருகிறார். இதன் வழியாக நூறு குழந்தைகளுக்கு தந்தையாகிவிட்டார். ராணி போன்ற பத்திரிகையில் இதுபோல செய்திகளை துணுக்காக எழுதலாம். தான் செய்த விந்தணு தானம் பற்றி அவரே வெளிப்படையாக பேசியதால் தெரிய வந்த சமாச்சாரம் இது. விகே நிறுவன விவகாரத்தின்போது, உக்ரைனில் ஆட்சியில் இருந்த ரஷ்ய ஆதரவு அதிபருக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கான போராட்ட செய்திகள் டெலிகிராமில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. உடனே ரஷ்ய அரசு, துரோவ்வை தொடர்பு கொண்டு ஆப்பில் உள்ள உக்ரைன் பயனர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டது. அப்போது அத்தகவல்களைத் தர அவர் மறுத்துவிட்டார். அதனால், துரோவ் விகே நிறுவன பங்குகளை விற்றுவிட்டு நாட்டை விட்டே வெளியேற நேர்ந்தது. நிறுவன பங்குதாரர்களை மிரட்டல், இயக்குநர் பதவியிலிருந்து துரோவை விலக வைத்தது என ஏராளமான நெருக்கடிகளை ரஷ்ய அரசு கொடுத்தது. பின்னர் தொடங்கப்பட்டதுதான் டெலிகிராம் ஆப்.

டெலிகிராம் ஆப், கிளவுட் முறையில் இயங்குகிறது. பாவெல் துரோவ் தொடக்கத்தில் எதிர்த்தாலும் பின்னாளி் வணிகத்திற்காக சமரசம் செய்துகொண்டு ரஷ்ய அரசுக்கு, டெலிகிராமின் செய்திகளை படிக்க அனுமதி வழங்கிவிட்டார்தான். ஆனால், அனைத்து நாடுகளுக்கும் அதை வழங்கவில்லை. அப்படி வழங்கவேண்டும் என பல்வேறு நாடுகள் மறைமுகமாக கூறிவருகின்றன. பாதுகாப்பு என்ற பெயரைக் கூறி மக்களை கண்காணிப்பதே அரசுகளின் நோக்கம். நாளை எப்படியோ, இன்றுவரை துரோவ் அரசின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை. இந்தியா, பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் டெலிகிராம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்த ஆப்பிற்கு அதிக வாடிக்கையாளர்கள் உண்டு. நீட் தேர்வு வினாத்தாள்கள் டெலிகிராம் வழியாக கசிந்தது, காப்புரிமையற்ற நூல்கள் வெளியீடு என டெலிகிராம் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் இன்றுவரை தடையின்றி டெலிகிராம் இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதில் டெலிகிராம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என பிபிசி செய்தி அறிக்கை ஒன்று கூறுகிறது.

டெலிகிராமைப் பயன்படுத்த பயனர் தனது போன் நம்பரை வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் போன், கணினி, டேப்லட் என கணக்கைப் பராமரித்துக்கொள்ளலாம். ஆடியோ, வீடியோ, கோப்புகள் என எதையும் அனுப்பி பெறலாம். இரண்டு ஜிபி அளவு வரை கோப்புகளை அனுப்ப முடியும். குரல் பதிவுகளை அனுப்ப காசு கட்டவேண்டும். தனியாக சேனல் தொடங்கி அதை பொது, தனி என பிரித்து வைத்து பராமரிக்கலாம். உறுப்பினர்களாக இரண்டு லட்சம் பேர்களை சேர்க்கலாம்.பிரிட்டனில் அண்மையில் நடந்த வலதுசாரி வன்முறை போராட்டங்களுக்கு டெலிகிராம் பயன்பாடு இருந்ததாக கூறுகிறார்கள். அனைத்து நாடுகளிலும் ஒரு ஆப் இயங்கவேண்டுமென்றால், அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விதிகளை அனுசரிக்க வேண்டும். அப்படி இயங்கவில்லையெனில் ஆப்பை தடை செய்வார்கள். நெருக்கடி கொடுப்பார்கள். சீனாவைச் சேர்ந்த டிக்டாக்கிற்கு இதே நிலைதான் அமெரிக்காவில் ஏற்பட்டது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் டெலிகிராம் ஆப் பல்வேறு தடை, அபராதம், நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொண்டு முன்னேறி வந்துள்ளது. 2018ஆம்ஆண்டு ரஷ்யா, டெலிகிராம் ஆப்பிற்கு தடை விதித்து, 2020ஆம் ஆண்டில் தடையை விலக்கிக்கொண்டது. ஒரு ஆப்பை தவறான வழியில் பயன்படுத்துபவர்களை அரசு புலனாய்வு அமைப்புகள் பிடிக்க முயலவேண்டும். குற்றவாளியை பிடிப்பதை விட ஆப்பின் உரிமையாளர் அலுவலகத்தில் இருப்பார். எளிதாக கைது செய்துவிடலாம் என நினைப்பது புத்திசாலித்தனமல்ல. இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கவேண்டுமே?  ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆப்கள் காரணமாக உலக நாடுகளில் உருவாகாத போராட்டங்கள், கொலைகள், வல்லுறவுகள், பதற்றம் உண்டா என்ன?

ஒருவேளை டெலிகிராம் ஆப் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தோன்றுகிறதா? எஃப்ட்ராய்டில்  telegram foss ஆப்பைத் தரவிறக்கி பயன்படுத்தலாம். பாதுகாப்பு சிக்கல்கள் அதிகம் வராது. அப்படியும் நம்பிக்கை இல்லையா, மெட்டா தவிர்த்து வேறு குறுஞ்செய்தி ஆப்களுக்கு நகரலாம்.

படங்கள் 

பிக்சாபே
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்