பாகிஸ்தானில் கல்வி கற்க போராடிய முஸ்லீம் எழுத்தாளரின் சுயசரிதை!

 

 

 

 

 

 

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை
இஸ்மத் சுக்தாய்
மொழிபெயர்ப்பு சசிகலா பாபு
எதிர் வெளியீடு

பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் சுயசரிதைதான் வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது. இஸ்லாம் மதத்தை தழுவியவராக இருந்து கல்விக்காக பெருமுயற்சி செய்து படித்து பள்ளிகளில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி பிறகு எழுத்தாளராக மாறியவர் இஸ்மத் சுக்தாய்.

இஸ்மத்தின் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். ஆறு ஆண்கள், நான்கு பெண்கள். அப்பா, ஆங்கிலேய அரசில் நீதிபதியாக இருந்தவர். இதனால், செல்வாக்காக வளர்ந்தவர். நூலில் முஸ்லீம் பெண்ணாக வளர்வது, கல்வி சார்ந்த முக்கியத்துவம் எப்படியுள்ளது, திருமணம், அதன் சடங்குகள், ஆண்களுக்கான சுதந்திரம், பெண்களுக்கான தடைகள், பெண்களை முடக்கும் மூடநம்பிக்கைகள், இந்துக்களின் தீட்டு, புராண பெருமைகள், போலியான புனித நடவடிக்கைகள் என அனைத்தையும் போட்டு உடைத்திருக்கிறார்.

இஸ்மத்தின் இயல்பே மனதில் பட்டதை பேசுவது என இருந்ததால், குடும்பம் உறவினர்கள், கதைகளை வாசித்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், பிற்போக்கான இஸ்லாமியர்கள், நாளிதழ் ஆசிரியர்கள் என அனைவருடனும் அவருக்கு முரண்பாடு, சண்டை நடந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அவர் எழுதிய பெண்களின் உரிமை பற்றிய சிறுகதையை இஸ்லாம் நம்பிக்கை கொண்ட பத்திரிகை ஆசிரியர் பிரசுரிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவத்தை விவரிக்கிறார்.

நவாப்பிடம் சகோதரர் நன்ஹே பாய் வேலை செய்யும்போது அங்குள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். அங்குள்ள நவாப்பின் பழக்க வழக்கங்கள், மக்களின் வரிப்பணத்தை சுரண்டிக்கொண்டு அவர்களுக்கு வசதியே செய்யாமல் இருப்பது, ரயில்களை நின்று செல்லுமாறு செய்வது, குறிப்பாக எச்சில் துப்ப பொற்கிண்ணம் பற்றியெல்லாம் படிக்க படிக்க புன்னகையும், அடுத்தநொடி கோபமும் தோன்றுகிறது. இஸ்மத் சுக்தாய், தனது போராட்டங்கள் பற்றி உள்மனதில் பயம் இருந்தாலும் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவரது கணவர் தீவிர இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர். ஆனால், மனைவி சிறுகதை எழுதுவதை அவர் தடுக்கவில்லை. இருவருக்குமான மனப்பொருத்தம் சிறப்பாக உள்ளது என புரிந்துகொள்ளலாம்.

இஸ்மத், தனது சுதந்திரத்தை பறிப்பவராக யார் பேசினாலும் தயங்குவதேயில்லை. அ்ங்கேயே அவர்களை கேலி செய்து உடைத்து பேசிவிடுகிறார். இதற்கு அவரது சுயசரிதை முழுக்க நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆணாதிக்கம், மதவெறி கொண்ட நாட்டில் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் பற்றி எழுதுவதெல்லாம் யோசித்துப் பாருங்கள். என்னவாகும்? இப்போது, இந்தியாவில் இந்து தீவிரவாதிகள் எழுத்தாளர்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று சுட்டுக்கொன்று வருகிறார்கள். அல்லது அரசே அவர்களை கைது செய்து வெளியே வரமுடியாதபடி, குற்ற அறிக்கை தயாரிக்காமல் சிறையில் அடைக்க முடியும். அதேபோல ஒரு சிறுகதைக்கு ஆபாசம் என புகார் கூறி வழக்கு தொடரப்படுகிறது.
அதையும் கூட இஸ்மத் ஜாலியாக எடுத்துக்கொள்கிறார். லாகூருக்கு சென்று நீதிமன்றத்தில் வழக்கு வரும்வரை பல்வேறு உணவுகளை சாப்பிடுகிறார். இலக்கியம் பேசுகிறார். நண்பர்களோடு உரையாடிக்கொண்டு இருக்கிறார். அவரின் சுதந்திரமான மனம், சிந்தனை எப்படி உருவாகியிருக்கும் என்று பார்த்தால், அதற்கு கல்லூரி, பல்கலைக்கழக படிப்பு காரணமாக உள்ளது. அங்கு சந்தித்த ஆங்கில ஆசிரியர்கள், நூலகத்தில் இருந்த பல்லாயிரக் கணக்கான நூல்கள், ஆசிரியர்களுடனான திறந்த மனது கொண்ட உரையாடல்கள் என எல்லாவற்றையும் கூறலாம்.

அவரது வாழ்க்கை வழியாக இந்துக்களின் விரோத மனப்பான்மை, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, இஸ்லாமில் உள்ள ஆண்களுக்கு ஆதரவான விதிகள், மூடநம்பிக்கைகள் என பலதையும் கூறியபடியே சொல்கிறார். இந்த நூல் கூட அவரின் வாழ்க்கை, சாதனை என்றவாறு வடிவமைக்கப்படவில்லை. இயல்பான அப்படியே நகர்கிறது. மொத்தம் 380 பக்கங்களை மிக எளிதாக நாம் வாசித்துவிட முடியும். இஸ்மத் சுக்தாய், பார்சி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை எழுத, வாசிக்க, பேச கற்றவர்.

இந்திய மக்கள், மதவாத அரசு சிறுபான்மை இன மக்களுக்கு செய்யும் அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்கத் தொடங்கிவிட்டனர் என ராஜ்மோகன் காந்தி கூறுகிறார். இந்த சூழல் எப்படியானது என்பதை இஸ்மத்தின் அனுபவங்களை ஒப்பிட்டு அறியலாம். நூலில் அவர் படித்த கல்லூரியில் பல்வேறு விஷயங்கள், விவகாரங்கள் பற்றி ஆதரவு, எதிர்ப்பு என இரு துருவங்களிலும் நின்று விவாதித்து வந்திருக்கிறார்கள். இனி இதுபோல நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து ஏக்கம் கொள்வது மட்டுமே சாத்தியம். அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்து தீவிரவாத குழுக்களால் நிரப்பப்பட்டு வருகிறது. விவாதம், தர்க்கத்திற்கு வாய்ப்பே இல்லை.

பாகிஸ்தான், இந்தியா ஆகிய  இரு நாடுகளும் சுதந்திரத்திற்கு முன்பாக எப்படி இருந்தன. இப்போது எப்படியுள்ளன என்பதை நாமே மனதிற்குள் பல்வேறு விஷயங்களை யோசித்து ஒப்பிட்டுப் பார்க்க உதவுகிற நூல் இது.  

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்