சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்!
சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்!
இந்தியாவில் வலதுசாரி மதவாத கட்சி ஆட்சிக்கு வந்தது தொடங்கி அடக்குமுறை சட்டங்களில் மனித உரிமை போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்படுவதுஅதிகரித்தது. கைதானாலும் விசாரணை முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் சிறையில் தள்ளி சட்ட உரிமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை எழுதும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான மனிஷ் சிசோடியாவுக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருக்கிறார். அவரை அமலாக்கத்துறை, பல்வேறு போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் வெற்றியை, விமர்சனங்களை பொறுக்கமுடியாத மதவாத கட்சி, அரசு அமைப்புகளை பயன்படுத்தி தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு ஏதுவாக புதிய குற்றவியல் சட்டங்கள் வடமொழியில் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவரின் அடிப்படை சட்ட, மனித உரிமைகளை பறிக்கும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன.
இந்திய குற்றவியல் சட்டம் 1860 இன்படி, 32 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டில் மட்டும், 21.6 லட்சம் பேர் சிறப்பு சட்டங்களின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். 1973ஆம் ஆண்டு குற்றச்சட்டப்படி, 80 லட்சம் பேர் கைதாகியுள்ளனர். மீதியுள்ளவர்கள் மாநில அரசு சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் குற்றம் செய்தவர்களை விட ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறையில் உள்ளனர். காவல்துறையினர், புகாரின்பேரில், ஆதாரமே இல்லாமல் ஒருவரை கைது செய்தபிறகு நிதானமாக உட்கார்ந்து குற்றச்சாட்டுகளை எழுதுவதால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நீதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அரசியல் தலைவர்களாக இருந்தால், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்படுவார்கள். பிணையில் வெளியே வருகிறார்களா, புதிதாக ஐம்பது வழக்குகள் பதியப்படும்.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு நிலைப்படி, விசாரணைக் கைதியாக உள்ளவர்களின் எண்ணிக்கை 4.3 லட்சம். அதாவது கைதிகளில் இவர்களின் அளவு 76 சதவீதம் பேர். விசாரணைக்குள்ளான கைதிகள் மூன்று மாதம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படும் அவல நிலை உள்ளது. நீண்டகாலமாக விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் காத்திருக்கும் நிலை, நீதித்துறையின் கையாலாகாத்தனத்திற்கு சான்று. ஒரு கைதி பிணை கேட்டால், அதை வழங்குவதற்கு ஒரு மாத காலம் உயர்நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. அதிலும் இப்போதுள்ள நீதிபதிகள் 28 நாட்கள் தொடங்கி 156 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். இதன் காரணமாக, குற்றம் செய்யாதவர்கள்/ செய்தவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சட்டப்படியான உரிமைகூட கிடைப்பதில்லை. தேவையின்றி சிறையில் நீதி வேண்டி மன உளைச்சலோடு காத்திருக்க வேண்டியதாகவுள்ளது.
தற்போது அரசாளும் வலதுசாரி மதவாத கட்சியின் தாய் அமைப்பு, தீவிரவாத செயல்களை இந்தியாவில் ஆங்கிலேயர் காலம்தொட்டே செய்துவருகிறது. இதில் இணைந்தவர்கள், ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள் நீதித்துறையில் நுழைந்து, சட்டத்தின் மாண்பைக் குலைத்து சட்டப்படி ஒருவருக்கு கிடைக்கவேண்டியவற்றை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள். அவர்களின் உத்தரவுகளைப் பார்த்தாலே தெரியும். வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் என்னென்னவோ உளறிக்கொட்டியிருப்பார்கள்.
காவல்துறைக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை, புதிய வடமொழி குற்றவியல் சட்டங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன. இப்போது நிரம்பியுள்ள சிறைகளை விட புதிதாக சிறை நகரமே தொடங்கும் அளவுக்கு எதிர்காலத்தில் நிலைமை மாறும் நிலை உள்ளது. விசாரணைக் கைதிகள் நீதிக்காக காத்திருக்கும் அவலநிலை இன்னும் கூடும். இது, இடக்கை - எஸ்.ரா எழுதிய நாவலில் வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்துகிறது. அதில், சிற்றரசன் பிஷாடன் ஆளும் நாட்டில் சாதிக்கு ஏற்றபடி நீதி வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் சிறை நகரமாக காலாவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்குதான் நாட்டின் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தலித்துகள் அடைக்கப்பட்டிருப்பார்கள். நீதிக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். இந்தியா போகும் திசையைப் பார்த்தால் எஸ் ராவின் நாவலை உண்மையாக்காமல் விடமாட்டார்கள் போல...
டைம்ஸ் ஆப் இந்தியா - நவ்நீத் மெக்மூத் அகமது
தமிழாக்க கட்டுரை
கருத்துகள்
கருத்துரையிடுக