அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!
செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.
ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வந்தது. இஎம் ரீசர்ஜென்ட் பண்ட்ஸ், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, மாதபி சிங்கப்பூரில் உள்ள ஆலோசனை நிறுவனம் அகோரா பார்ட்னர்ஸ் நிறுவனம் வழியாக நூறு சதவீத வட்டியைப் பெற்றுள்ளார். இதேகாலத்தில் அவர் செபியின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டு பிறகு அதன் தலைவரானார். 2022ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று மாதபி, செபியின் தலைவராக நியமிக்கப்பட்டு இரு வாரங்கள் கடந்திருந்தது. அப்போது, அவர் தனது பங்குகளை கணவர் பெயருக்கு அமைதியான முறையில் மாற்றினார்.
2013ஆம்ஆண்டு மார்ச் 27ஆம் தேதி, அகோரா பார்ட்னர்ஸ் பி.லிட் நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம், வணிகம் மற்றும் நிர்வாக ஆலோசனை தருவதாக தனது வணிகம் பற்றி குறிப்பிட்டிருந்தது. அப்போது, மாதபி அந்த நிறுவனத்தின் நூறு சதவீத பங்குதாரராக இருந்தார் என்பதை அந்த நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை தகவல் கூறுகிறது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாதபி செபியில் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என அவரது லிங்க்டு இன் கணக்கு தகவல் தருகிறது. 2022ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி செபியின் தலைவரானார். 2022ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் தேதி, மாதபி அகோரா பார்ட்னர்ஸ் நிறுவனத்தில் நூறு சதவீத பங்குதாராக இருந்தார் என சிங்கப்பூர் நிறுவன ஆவணம் தகவல் கூறுகிறது. மாதபி தனது பங்கு முதலீடு பற்றிய உண்மைகள் வெளியாகிவிடக்கூடும் என பயந்து, அவரது பங்குகளை கணவர் தாவல் பெயருக்கு அவசரமாக மாற்றியிருக்கிறார்.
சிங்கப்பூரிலுள்ள ஆலோசனை நிறுவனம், நிதிசார்ந்த அறிக்கைகளை வெளியிடவில்லை என்பதால் அதன் வருமானம் பற்றிய தகவல்களை பெற முடியவில்லை. யார் இதை இயக்கியது, எந்தெந்த நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கினர் என்பது போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
மாதபி தனது தனிப்பட்ட மின்னஞ்சலில், கணவர் பெயர் வழியாக வெளிநாட்டு நிறுவனங்களில் வணிகம் செய்து வந்துள்ளார். அவர் செபியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, கணவர் தாவல் 2019ஆம் ஆண்டு பிளாக்ஸ்டோன் நிறுவனத்தில் ஆலோசகராக பதவி பெறுகிறார். நிலம், முதலீட்டு சந்தை சார்ந்த நிதி முதலீடுகளில் அவர் பணியாற்றியதில்லை என அவரது லிங்க்டுஇன் கணக்கு மூலம் தகவல் கிடைக்கிறது. யுனிலீவரில் விநியோகம் சார்ந்த பிரிவில் பணியாற்றியவர் தாவல் புச். இருபது ஆண்டுகளில் அவர் நிதிசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியதில்லை. இப்படி அனுபவம் இல்லாதவர், பிளாக்ஸ்டோன் என்ற தனியார் ஈக்குவிட்டி நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக இணைகிறார். இந்த தனியார் நிறுவனம், இந்தியாவில் அதிகம் முதலீடு செய்துள்ளது.
மாதபி செபியில் அதிகாரியாக இருக்கிறார். தாவல் மூத்த ஆலோசகராக உள்ள நிலையில் பிளாக்ஸ்டோன் நிறுவனம், மைண்ட்ஸ்பேஸஃ, நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்கியது. பிளாக்ஸ்டோன் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கான ஒப்புதலை செபியிடமிருந்து வெற்றிகரமாக பெறத் தொடங்கியது. பிளாக்ஸ்டோன் நிறுவனம், அதானியின் கட்டுமானங்களை விலைக்கு வாங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இப்படி வாங்கும் அலுவலக இடத்தின் விற்பனை விலை 215 மில்லியன் தொடங்கி 240 மில்லியன் டாலர்கள் வரை வருகிறது.
நன்றி
ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம்,அமெரிக்கா.
கருத்துகள்
கருத்துரையிடுக