நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!

 

 

 

 


 

 

 

நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!

கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உடனே களமிறங்கிய கூலிப்படை ஊடகங்கள் அதை வைத்து கல்லா கட்டா தொடங்கிவிட்டன. மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக வல்லுறவு படுகொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற மாநில அரசும் கூட நீதி வேண்டி பேரணி நடத்தியது. 

அதிகாரத்தில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, யாரிடம் நீதியை வேண்டுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து மாநில ஆட்சியை பிடிக்க மதவாத கட்சியின் சார்பு கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் விரைந்தார். இதெல்லாம் படிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி அவல நகைச்சுவை நாடகம் நடப்பது போல தோன்றுகிறதா? 


இந்து பார்ப்பன பாசிச தத்துவத்தில் புழங்கிய புதிய இந்தியா இப்படித்தான் இயங்குகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அவரவர் தங்களால் முடிந்த பிரயத்தனத்தை செய்கிறார்கள்.

இறந்துபோன மருத்துவரின் பெயரை வெளியிடக்கூடாது என்பது பத்திரிகை விதி. அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்ட ஊடகங்களால், அவரின் பெயர் இணையத்தில் கசிந்தது. மருத்துவர் இறந்துபோனதற்கு வருத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர், உடனே மனம் தேறி செத்தவள் செத்துவிட்டாள். அவளை வல்லுறவு செய்த வீடியோவாவது கிடைக்குமா, பார்த்து இன்புறுவோமே என இணையத்தில் தேடத் தொடங்கினர். டெலிகிராமில் சுடச்சுட சேனல்களைத் தொடங்கி வீடியோக்களை விற்கத் தொடங்கினர். வீடியோக்கள் அசலோ, நகலோ வியாபாரம் வென்றது உண்மை. 


ஆகஸ்ட் பதினைந்து தொடங்கி, பதினேழாம் தேதி வரை இணையத்தில் இருந்த மனச்சிதைவு கொண்ட மக்கள் பிரிவினர், பயிற்சி மருத்துவரின் பெயரை தேடுபொறியில் உள்ளிட்டு ஆபாச வீடியோவை தேடி உலகளவில் டிரெண்டிங் ஆனார்கள். வெட்கப்படத்தக்க சாதனை. எழுபத்தெட்டாவது சுதந்திர தினத்தை நம் நாட்டு மக்களே அனுசரிக்க மறந்துவிட்டனர். வல்லுறவு  வீடியோவா, சுதந்திரதினமா என தேர்வு முன்வைக்கப்பட்டபோது, இந்தியர்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் வீடியோவைத் தேர்ந்தெடுத்தனர்.  ஊடகங்களைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட பெண்கள் வல்லுறவு செய்யப்படலாம் என புதிய விதிகளை, கலாசாரத்தை அவர்களே உருவாக்குகிறார்கள். அவர்கள் உருவாக்கியதை அரசியல்வாதிகள் வழிமொழிகிறார்கள். அதாவது, குற்றவாளிகளை தண்டிப்பது, குற்றம் அதிகரிக்கிறது என்பதை வெளியே சொன்னால் நிர்வாக கையாலாகத்தனம் வெளிப்பட்டுவிடும். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழியைத் தூக்கிப்போட்டுவிடுகிறார்கள்.

பெண்களின் பாதுகாப்பு தண்டனை பற்றி ஆட்சித்தலைவர் சுதந்திர தின உரையை ஆற்றிய சில நாட்களிலேயே டெல்லியின் ஆக்ராவில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் நான்கிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. பலராலும் பகிரப்பட்டது. அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கும், நடைமுறைக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு பிரச்னை என்றால் உடனே ஆட்சித்தலைவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தன்னைத்தானே வாழ்த்திப் பேசி ஆறுதல் தேடுகிறார். ஆனால், அனைத்து இந்தியர்களும் அப்படி தப்பி ஓட முடியாத சூழலில் வறுமையில் நிறைய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆளுங்கட்சியான மதவாத கட்சி உறுப்பினர்களே, வல்லுறவு, பாலியல் சீண்டல்களில் பட்டம் பெற்ற ஆட்கள். இதில் எங்கே போய் மற்றவர்களைத் தடுப்பது?

பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டும் இணைய டிரெண்டுகளை பெரிதாக மாற்றமுடியவில்லை. ஆபாச வீடியோக்களின் வரத்து தடுக்கப்பட்டும் முற்றாக குறையவில்லை. அரசு எந்திரமும் மருத்துவர்களின் போராட்டங்களை ஒடுக்கவே முயன்றதால் எதிலும் கவனமும் செலுத்தவில்லை. கர்நாடகத்தில் ஏப்ரல் 28 தொடங்கி மே 4 வரை, நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணா, வல்லுறவு செய்த விவகாரம் பற்றி இணையத்தில் பதிவுகள் அதிகரித்தன. அப்போதும் மனச்சிதைவு கொண்ட இந்திய மக்கள் கூட்டம் இணையத்தில் பிரஜ்வாலின் பெயரை உள்ளிட்டு வீடியோக்களை தேடி வந்தது. இதுபோல நிறைய விவகாரங்களைக் கூறலாம். சிலரின் சாதி, மதம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போராட்டம் நடத்தப்படும். தலித், ஆதிவாசி இனமென்றால் ஊடகங்களே அதைப் புறக்கணிப்பார்கள். 


வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை வெளியே சொன்னால் வீட்டுக்கு, குடும்பத்திற்கு அவமானம் என்பார்கள். விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த வல்லுறவு சீண்டல்களை வெளியே சொன்னால் நாட்டிற்கு அவமானம் என்பார்கள். இப்படியாக பெண்களை உடல்ரீதியாக ஒடுக்கி வருகிறார்கள். இதற்கு ஒட்டுமொத்த அரசு எந்திரமும் உறுதுணையாக உள்ளது. கட்சி பேதமில்லாமல் அரசு என்பது பொருளாதார சக்தி கொண்டவர்களின் கையில் அடிமை நாயாக உள்ளது. பங்குச்சந்தை லாபத்தை தவிர அவர்கள் வேறு எதையும் கவனிப்பதில்லை.

குழந்தைகள் கடத்தலை தடுக்கும் தன்னார்வ அமைப்பான பிரஜ்வாலா, வல்லுறவாளர்கள் ஆறுமாத குழந்தை, ஒருவயது குழந்தை என எவரையும் விடுவதில்லை என தகவல் தருகிறது. இந்த அமைப்பின் துணைநிறுவனரான சுனிதா கிருஷ்ணன், இணையத்தில் குழந்தைகளை வல்லுறவு செய்து, சீண்டல் பலாத்காரம் செய்வது தொடர்பான வீடியோக்களை காசு கொடுத்து வாங்கியுள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல இதுபோல ஒன்பதாயிரம் வீடியோக்களை வாங்கியுள்ளார். இணையத்தில் இப்படி நடக்கிறது ஐயா என தெலுங்கானா காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். அரசு உறுப்பான காவல்துறை, இந்த விவகாரத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொடுத்த உச்சநீதிமன்ற வழக்கும் அப்படியே தொங்கலில் உள்ளது. நீதிமன்றம் அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கலாம். ஆனால், அதை செயல்படுத்தும் அரசு அமைதியாக இருக்கும்போது என்ன செய்யமுடியும்?


அளவுக்கு அதிகமாக இணையத்தை சார்ந்து இயங்கி வருபவர்களுக்கு, நடக்கும் சம்பவங்களில் உணர்ச்சி ஒருமை இல்லாமல் போகிறது எனவே, நீரில் முழ்கிக்கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றுவதை விட அந்த கணத்தை வீடியோ எடுத்துவருகிறார்கள். அனைத்து விஷயங்களுமே செய்தி, பொழுதுபோக்கு என்ற உணர்ச்சியற்ற நிலையை மக்கள் எட்டி வருகிறார்கள் என உளவியலாளர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். பெண்ணின் உடை, இரவு நேரம், மது அருந்தும் பழக்கம் என்று கருத்துகளைக் கூறும் பலரும் மூளை அழுகிப்போன ஆட்கள். வெளிப்படையாக பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க இத்தகைய பேச்சுகள் உதவக்கூடும். வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வ முன்னேற்றத்தையும் தராது.

டெல்லி, ஜார்க்கண்ட், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. இங்கு பெண்கள் மீதான வன்முறை அதிகம் நடைபெறுகிறது என தகவலை வெளியிட்டுள்ளது பிரேக்த்ரோ தன்னார்வ தொண்டுநிறுவனம். வலதுசாரி மதவாத சக்திகள், மெட்டா நிறுவனத்தின் அனைத்து செயலிகளிலும் ஊடுருவி உள்ளதால், எளிதாக போலிச்செய்திகளை உருவாக்கி நாடெங்கும் கலவரங்களை உருவாக்க முடிகிறது.

தேர்தல் வெற்றியை மையமாக வைத்து மக்களை பயமும், வெறுப்பும் கொள்ளவைக்கிறார்கள். மற்றபடி அரசின் தவறுகளை மெனக்கெட்டு மறைக்க தலைப்படுகிறார்களே ஒழிய, நீதி கிடைக்க யாரும் உதவுவதில்லை. அப்படி ஒரு சிலர் இயங்கினாலும் அவரின் சாதி, மதம், இனம் வைத்து அவதூறு சேறு பூசப்படுகிறது. தேசதுரோக சட்டம் பாய்கிறது. மக்களின் உரிமைகளைக் கேட்டவர்கள் பலரும் பல்லாண்டுகளாக நீதி கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலையாளிகளுக்கு தண்டனை என்பதெல்லாம் எப்போதும் பேசப்படுகிற ஒன்றுதான். ஒரு சமூகமே மனச்சிதைவை நோக்கி நகர்வது நல்லதல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசனை மையங்கள், இப்படியான பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கென தனி சிகிச்சை மையங்களை நிறுவுவது அவசியம். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை செய்யவேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசோ, அதை செய்ய விரும்பவில்லை. பொருளாதார வலிமை கொண்ட சக்திகளுக்கு அமைதியாக உதவிவருகிறது.  எனவே, மாறுதல்களை மக்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.

எப்படிப்பட்ட வல்லுறவை இந்துத்துவ அரசு ஏற்கும், இழப்பீடு வழங்கும், குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் தண்டனை வழங்கும் என்பதை தெளிவாக கூறிவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு அலையும் மன உளைச்சல், பொருளாதார இழப்பு குறையும்.

 டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையாளர் ஹிமான்சி தவானின் கட்டுரையை அடிப்படையாக கொண்ட தமிழாக்க கட்டுரை
நன்றி
யூட்யூபர் துருவ் ரத்தி

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்