தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர்! - இந்தியா - சீனா அரசியல் கொள்கைகள் ஒப்பீடு
சீனா, அமெரிக்காவை விலக்கி முதலிடத்தை அடையும் முயற்சியில் உள்ளது. அதன் ஒழுக்கம், கட்சி கட்டுப்பாடு, அர்ப்பணிப்பான உழைப்பு குலையாத பட்சத்தில் அதை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த மேற்கு நாடுகள் முயல்கின்றன. அவர்களின் உள்மன ஆசை அப்படி இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இருநாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம்.
சீனாவில் மக்கள் குடியரசு ஆட்சியில் உள்ளது. இதிலுள்ள அதிகாரிகள், பிரதமர், அதிபர் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கு ஒரே கட்சிதான் உள்ளது. அந்த கட்சிதான் அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கான நிர்வாக கமிட்டியில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு இடம் இல்லை.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கூறவேண்டுமெனில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக உள்ளது. இதன் தாய் சங்கமாக இந்து தீவிரவாத அமைப்பு, ஆர்எஸ்எஸ் உள்ளது. கலாசார அமைப்பு என பிரசாரம் செய்துகொள்ளும் இந்த அமைப்பே, இந்தியாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவரான மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. உறுப்பினர்கள் அடிப்படையில் தாய்சங்கம் ஆர்எஸ்எஸ், அதன் அரசியல் பிரிவான பாஜக ஆகிய அமைப்புகளை சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒப்பிடமுடியும். கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிச கருத்தியலை அடிப்படையாக கொண்டது. பாஜக, இந்துமத நாடு, சாதி அடிப்படையிலான சமூகம் என்பதை பின்பற்றுகிறது. சீனத்தில் முதலில் கட்சி அடுத்து அரசு, பிறகே ராணுவம் என படிநிலை முன்னுரிமை உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிக்கான விசுவாசம் என்பது அங்குள்ள மக்களின் ரத்தத்தில் கலந்தது.
சீனா, இந்தியா என இருநாடுகளுக்கும் இடையே தொன்மைக்காலம் தொட்டு வணிக உறவு உண்டு. 2020ஆம் ஆண்டு தொடங்கி எல்லைக்கோட்டில் பூசல்கள் எழுந்தாலும் வணிகம் அப்படியே மறைமுகமாக தொடர்கிறது. ஜனநாயகம், சுதந்திரம் என சீனாவில் கூறப்பட்டாலும் அங்கு ஒரு கட்சி சர்வாதிகாரம் உள்ளது. அதே நிலையை இந்தியாவில் உருவாக்க வலதுசாரி மதவாத கட்சியான பாஜக, முயன்று பல்வேறு சட்டங்களை உருவாக்கி வருகிறது.
சீனாவில் பெண்கள் பொதுப்போக்குவரத்துறை வாகன ஓட்டுநர்களாக, பன்னாட்டு பெருநிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் சாதிக்கட்டுப்பாடு தீவிரப்பட்டு வருவதால், பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் கிடையாது. குறிப்பிட்ட சாதியில் பெண்கள் திருமணம் செய்யவேண்டுமென்ற கட்டாயத்தை சட்டம் மூலமாக இந்திய அரசு உருவாக்கி வருகிறது. அரசின் பாதுகாப்பு, நிர்வாக துறைகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தன்பாலின திருமணங்களை சீனா, இந்தியா என இரு நாடுகளும் ஏற்கவில்லை. பால்புதுமையினரை அங்கீகரித்து அவர்களுக்கு அரசு ஆவணங்களில் இடமளித்துள்ளது இந்தியா. குறிப்பாக பாஸ்போர்ட்.
சீனா, இந்தியா என இரு சமூகங்களுமே ஆணாதிக்க தன்மை கொண்டவைதான். தன்பாலின ஈர்ப்பை குற்றம் கிடையாது என சீன அரசு அறிவித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. சீனா, சில விஷயங்களில் பழைமையானதாக, சில விஷயங்களில் சுதந்திரமானதாக உள்ளது.
சீனா, நாற்பதாயிரம் கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக இருப்புபாதைகளை உருவாக்கியுள்ளது. உலகின் நீளமான வேகமான ரயில்வே அமைப்பைக் கொண்டுள்ளது. விமானங்களில் செல்ல முடியாத இடர்ப்பாடு ஏற்பட்டால், ரயில் ஒருவருக்கு உதவும். வேளாண்மை நவீனமாக மாற்றப்பட்டுவிட்டது. ஏற்றுமதியை நம்பியுள்ள பொருளாதாரம் என்பதிலிருந்து சேவைகளை வழங்கும் நாடாக மாறத் தொடங்கியுள்ளது. இரும்பு, ஸ்டீல் ஆகிய வணிகத்தில் வலிமையாக உள்ளது. இந்தியாவைப் போலவே நிலக்கரியை அதிகம் பயன்படுத்துகிறது. அதேநேரம் எதிர்காலத்தை உத்தேசித்து, தூய ஆற்றல் ஆதாரங்களில் ஏராளமான முதலீடுகளை செய்து வருகிறது.
கண்காணிப்பு அரசியல், சர்வாதிகாரம் இருந்தாலும் இணைய வேகம் சிறப்பாக உள்ளது, பெரும்பான்மையான மக்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 2021ஆம் ஆண்டு எண்பதாயிரம் திரையரங்குகள் இருந்தன. சீனாவில் உள்ளூர் நிர்வாகம் சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில், வலதுசாரி மதவாத கட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு கூட்டாட்சி முறை விரிசல் விடத் தொடங்கியுள்ளது.
மாநில அதிகாரங்கள் மெல்ல சட்டங்கள் மூலம் குறைக்கப்பட்டு வருகின்றன. அரசு அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதன் நம்பகத்தன்மை உடைந்து வருகிறது. தலித், ஆதிவாசி, பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான வெறுப்பை இந்தியாவின் ஆட்சித்தலைவர் தனது பேச்சில் பரப்புகிறார். அவரது தாய்ச்சங்கமும்,அதன் உறுப்பினர்கள் மூலம் சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத்தலங்களில் கலவரங்களை செய்து வருகின்றனர். பெரு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வணிக வரி குறைக்கப்பட்டு, தனிநபர்களுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு பழக்கப்பட்டு வருகிறார்கள். சீர்கேடுகள் புனிதமாக்கப்பட்டு வருகின்றன. இன அழிப்பு கலவரங்களை கலாசாரமாக பிரசாரம் செய்யும் இந்து தீவிரவாத அமைப்பில் அரசு பணியாளர்கள் சேர்வதற்கான 58 ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 2009-2015 காலகட்டத்தில் உள்ளூர் நிர்வாகங்கள் அடிப்படை கட்டமைப்பிற்காக பெற்ற கடன்கள் அதிகமாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி அளவில் 90-110 சதவீதமாக கடன் உள்ளது. இது எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. 2023படி கடன் அளவு 40 ட்ரில்லியன் யுவானாக, 5.5 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. பொருளாதார மேம்பாடு, ஜனநாயகம் என்பதில் பொருளாதாரமே முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் சாதனைக்கு ஈடாக மக்கள் இழந்த உரிமைகள், மனித உரிமை மீறல்களை முன் வைக்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.
நிர்வாக செயலின்மை, ஊழல், பணவீக்கம் ஆகியவற்றை மறைப்பதற்கான கருவியாக இந்துமதத்தை, கலாசாரத்தை பாஜக பயன்படுத்துகிறது. சுதந்திரகால நாட்டின் ஆட்சித்தலைவர்களை இழிவுபடுத்துவது, தற்போதைய பிரச்னைகளைப் பற்றி பேசினால் எதிர்க்கட்சிகள் அன்றைக்கு ஏதும் செய்யவில்லை என கடந்த காலத்தில் நின்றுகொண்டே பதில் கூறுவது என மதவாத கட்சி பாஜக இயங்கிவருகிறது. தொடர்ந்து அரசு அமைப்புகளை பலவீனப்படுத்துவதோடு, குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு ஆதரவாக அணுக்க முதலாளித்துவ கருத்தில் வெளிப்படையாக இயங்கி வருகிறது இந்திய அரசு.
சீனாவின் வலிமையைப் புரிந்துகொண்டாலே, இந்தியா தன்னை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சோசலிச கருத்தியலுக்கு முழுமையாக எதிர்மறையானது, இந்துத்துவ கருத்தியல். எதிரியாக இருந்தாலும் அவர்களிடமும் கற்றுக்கொள்வதற்கான நல்ல விஷயங்கள் உண்டு என்பதை உணரவேண்டும்.
தமிழாக்க கட்டுரை
மூலம் சடரூபா பட்டாசார்ஜ்யா
தி வீக்
கருத்துகள்
கருத்துரையிடுக