நிறம், உருவம் என பேதமற்ற கல்யாண வரன்கள்! - கனவா, லட்சியமா? பெய்டு நியூஸ் பரிதாபங்கள்

 

 

 

 

 

 




 

 

மதர்மோனியல் - பாசாங்கு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவில் சில நாட்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. இதில், தாய்மார்கள் தங்களுடைய உருவம் சார்ந்த கேலி கிண்டல், திருமணத்தின்போது நிறத்தால், உருவத்தால் வரன்கள் தட்டிக்கழிந்த கதைகளை கூறியிருந்தனர். இப்போது அவர்களுக்கும் திருமணமாகி, பெண் பிள்ளைகள் உள்ளனர். தாய்மார்கள் தாங்கள் சந்தித்த உருவகேலி சார்ந்து அல்லது அக்கருத்துகளை புறக்கணித்து பெண்களுக்கு வரன்களைத் தேடுவார்களா என்று உண்மையாகவே யோசிப்போம். அவர்கள், எங்கள் பெண்களுக்கு நாங்கள் நிறம், உருவம், அழகு என்பதைத் தாண்டி அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றிகரமாக உள்ளார்கள். அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மணம் செய்து கொடுப்போம் என்று கூறியிருந்தனர். கேட்கவே புதுயுகப் புரட்சி போல தோன்றலாம். அவ்வளவு வேகமாக இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா என்ன?

ஆனால் உண்மை என்னவென்றால், அழகு மட்டுமே முக்கியம். அது இருந்தால் வாழ்க்கையில், தொழிலில், காதலில், சமூகத்தில் ஜெயித்து விடலாம் என விளம்பரம் செய்த பன்னாட்டு நிறுவனத்தின் விளம்பரச் செய்தி இது. புறாமார்க் சோப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். சின்ன வெள்ளை நிற குளியல் சோப்புக்கு கொள்ளை விலை வைத்து விற்பார்கள். விளம்பர வேகத்தில், ஊரிலுள்ள ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைகள் புறாமார்க் சோப்பை வாங்கி கரகரவென தேய்த்துக்கொண்டிருந்தார்கள். சோப்பு வெள்ளைநிறம் சரி. தேய்த்தால் தேய்ந்துவிடும். ஆனால், ஒருவரின் அடிப்படை தோல் நிறம் மாறாது என்பதைப்புரிந்துகொள்ளவில்லை.
புறாமார்க் சோப்பை விற்கும் பன்னாட்டு நிறுவனம், முன்னர் முக அழகு களிம்பை விற்றது. அதில்தான், அந்த களிப்பை பூசாவிட்டால் பெண்களுக்கு தைரியம் வராது, கல்யாணம் அமையாது. வேலை கிடைக்காது என பொய் பிரசாரத்தை பரப்பியது. இப்போது, அதே அழகை அப்படியே மாற்றி வேறுவிதமாக கூறி புறாமார்க் சோப்பை விற்க முனைகிறது.

இப்போது மாட்டுகொட்டகையாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியா, தொடக்கத்திலிருந்தே தீவிரமான சாதி படிநிலைகளைக் கொண்ட சமூகம். இதில், விதிகளை வகுத்தவர்கள் மேல்நிலை சாதியாக தங்களை கூறிக்கொண்ட பிராமணர்கள். அவர்களைப் பார்த்தே இடைநிலை சாதிகள் அத்தனை அநீதிகளையும், பாகுபாடுகளையும் கற்றார்கள். தொடக்கத்தில் இனக்குழுவின் மூத்த சம்சாரியை வைத்து திருமணம் செய்தவர்கள், இன்று நெருப்பு குண்டம் வைத்து மணம் செய்து அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுகிறார்கள். இப்படி வளர்வதற்கு காரணம், பிராமணர்களை நகல் செய்து போல செய்தல்தான். வேறு ஒன்றுமில்லை. இப்படியான சூழலில்தான் அழகு களிம்புகள் விற்பனைக்கு வந்தன. வெப்பமண்டலமான இந்தியாவில் களிம்பை விற்பதால் எந்த பயனும் கிடையாது. எனவே, பெண்களை குறிவைத்து அழகில்லை என்றால் வாழ்க்கை இல்லை என பிரசாரம் செய்தனர்.

இது பயனளிக்கவும் செய்தது. அதற்கேற்ப, உலக அழகிகளை இந்தியாவில் தேர்வு செய்து காய்களை நகர்த்தினர். அழகு களிம்பு விளம்பரத்தில் கருப்பு என்றால் குரூரம், வெள்ளை என்றால் அழகு என காட்டப்பட்டது. இது சமூகத்தில் கூட எதிரொலித்தது. அப்படித்தான் மணமாலை விளம்பரங்களில் அழகான குடும்பத்திற்கேற்ப என்ற சொற்கள் இடம்பெறத் தொடங்கின. இன்று, அமெரிக்க, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சாதி பார்க்காத பெருந்தன்மையுடையோருக்கு கூட அழகான வெள்ளைத்தோல் கொண்ட பெண் தேவைப்படுகிறாள்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பெண்களைப் பெற்ற தாய்கள் தங்கள் அனுபவத்தை கூறுகிறார்கள். திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் ஏதும் பேசவில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் மனதைத் திறந்து பேசினால் சரியாக இருந்திருக்கும். மணமாவது அவர்களுக்குத்தானே?மதர்மோனியல் தளம் ஒன்றை புறாமார்க் சோப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. அதில், மணமாகாத பெண்கள் தங்களைப் பற்றி அல்லது மணமாகாத ஆண்கள் தங்களைப் பற்றி தகவல்களை பதிந்துகொண்டு வரன்களைத் தேடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மணப்பெண்களின் குடும்பம், மணமகனின் குடும்பம் ஆகியோரும் தகவல் பதிந்துகொண்டு பெண்/ஆண் தேடலாம்.

இந்தியா சாதி சார்ந்த சமூகம். பாலின பாகுபாடு உண்டு. ஆண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பானங்களை அளிக்கும் தாய், தனது மூத்த பெண்பிள்ளைக்கு எதையும் தராமல் விரட்டியடிப்பது சாதாரண காட்சி. ஆண் பிள்ளை வீட்டுக்கு. பெண் பிள்ளை ஊருக்கு என்பதுதான் இங்குள்ள மக்கள், குடும்ப அமைப்பு நம்புகிற கருத்து. இப்போது குடும்பங்கள் அறிவியலைக் கூட பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட ஜாதக நேரம் பார்த்து, அறிவியல் முறையில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். குழந்தை ஓகோவென்று வரவேண்டாமா? ஏதோ நம்முடைய பிரயத்தனத்தை செய்வோம், மற்றதை வெங்கட ரமணா பார்த்துக்கொள்வான் அல்லவா?

கல்வி மட்டுமல்ல அதன் வழியாக சிந்திப்பது எப்படி என கற்காத சமூகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் வம்படியாக நுழையும்போது நல்ல விஷயங்களை விட முட்டாள்தனங்கள்தான் அதிகம் விளையும். திருமணங்கள் பெரும்பாலும் ஆணின்/பெண்ணின் உடல், மனம் சார்ந்த தேவைகளைப் பூர்த்திசெய்ய நடப்பதில்லை. தன்னிடம் உள்ள பணபலத்தைக் காட்ட, ஆணவத்தை வெளிப்படுத்த நடைபெறுகிறது. அழகு என்பது ஒருவர் தீர்மானிப்பதல்ல. பிறக்கும்போதே அவரின் தோல் நிறம், உருவம், பெற்றோர், சாதி என தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இதில் ஏதோன்றையும் நாம் மாற்றிவிடமுடியாது.

வணிக நிறுவனங்களுக்கு வணிகம் முக்கியம். திடீரென கருப்பாக உள்ள பெண்கள் மீது புறாமார்க் சோப்பு நிறுவனத்திற்கு ஆதுரம் பொங்குகிறது? கல்யாணம் நடந்தால் அதை விளம்பரப்படுத்தி சோப்பு விற்பார்கள். கல்யாணம் நடக்கவில்லையா? அழகு களிம்பை பூசிக்கொள்ளுங்கள். விரைவில் கல்யாணம் நடக்கும் என கூறுவார்கள். எதனாலும் நஷ்டமில்லை. புறாமார்க் சோப்பு நிறுவனம், இருநூறுக்கும் மேற்பட்ட பொருட்களை வணிகம் செய்கிறது. எனவே பெரிதாக நஷ்டம் ஏதுமில்லை.

இதற்கு முன்னர், இதுபோல விளம்பரச் செய்தியை தவறுதலாக எழுதிவிட்டோம். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. அப்போது சலவைத்தூள் நிறுவனம், ஆண்கள், பெண்களுக்கு துணிதுவைப்பதில் உதவுவதை விளம்பரமாக எடுத்து ஓராண்டு ஒளிபரப்பியது. என்ன விளைவு? சலவைத்தூள் விற்பனை கூடியிருக்கும். அம்புட்டுத்தான். இங்கே மாற்றம் என்பது அந்தளவில்தான்.

ஆணுக்கான வேலை, பெண்ணுக்கான வேலை என பிரித்து வைத்து இயங்கி, தோற்றுப்போனால் பெண், வளையல் போட்டுக்கோ, சேலை கட்டிக்கோ என கூறிக்கொண்டிருக்கிற இடத்தில் சலவைத்தூள் விளம்பரம் என்ன செய்துவிடும்? அவரவர் குடும்பத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்தினால் கூட நம்பலாம். இணையத்தில் சலவைத்தூள் விளம்பரத்தை பார்க்கும்போடு அடையவேண்டிய கனவு என்று தோன்றியது. குளிர்பான நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவரிடம், செய்தியாளர் கேட்கிறார். வீட்டில் என்ன சமைப்பீர்கள், வீட்டு வேலைகள் செய்வீர்களா? இதுதான் நம்முடைய சீரிய பாலின பேதம் கொண்ட புத்தி. இதை வைத்துக்கொண்டு என்ன மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்?

மனதில், புத்தியில் மாற்றம் வந்தால் வரவேற்கலாம். பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களில் வரும் மாற்றம் எதையும் செய்யாது. அதிலுள்ள வினோத தன்மைக்காக பார்த்து ரசிக்கலாம். அவ்வளவுதான். ஒரு சமூகம் கற்ற கல்வியைப் பயன்படுத்தி சரியான திசையில் சிந்திக்க கற்கவேண்டும். அரசு, தனது மக்களின் கலாசாரத்தை முன்னேற்றத்தை நோக்கி திசை திருப்பவேண்டும். அதைவிடுத்து கலவரம், பிரிவினை, தேர்தல் வெற்றி, விமர்சனங்களை முடக்குவது என இயங்கினால், அந்த நாடே மனநிலை பிறழ்ந்த சிறைக்கூடமாக மாறிவிடும். இந்த லட்சணத்தில் சோப்போ, சலவைத்தூளை என்ன மாற்றத்தை விளைவித்துவிடும்? 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்