தாய்நாட்டிற்கு வாழ்வதற்காக திரும்பும் கோகோ ஆராய்ச்சியாளன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்!
வேர் தி ரோட் ரன்ஸ் அவுட்
ஆங்கிலம்
ஈக்வடோரியா கினியா நாட்டைச் சேர்ந்த நாயகன், ஆராய்ச்சியாளராக வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார். அங்கு கிடைக்கும் பணத்தை தனது தாய்நாட்டுக்கு ஆங்கில நண்பர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கிறார். ஆதரவற்றோர் காப்பகம், ஆராய்ச்சி நிலையம் இரண்டுக்குமான பணத்தை சம்பாதித்து அனுப்புபவர், ஒருநாள் கானாவுக்கு வருகிறார். அங்கு வந்து பார்த்தால் ஆதரவற்றோர் காப்பகம் புதுப்பிக்கப்படாமல் பழையது போலவே இருக்கிறது. ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்படவில்லை. அவரது ஆங்கில நண்பர் பணத்தை சுருட்டிக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என உணர்ந்துகொள்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாழடைந்த வீட்டை சீர் செய்து, வசிக்கத் தொடங்குகிறார். நேரம் கிடைக்கும்போது காப்பக பள்ளியில் சென்று கோகோ பற்றிய பாடம் எடுக்கிறார். அப்பள்ளியில் ஆங்கிலேய பெண்ணான கரினாவைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அந்த உறவு மெல்ல காதலாக கனிகிறது. கரினா,ஜார்ஜ் என்ற நாயகி, நாயகன் சந்திக்கும் இடர்ப்பாடுகள், அதிலிருந்து மீளுதலே படத்தின் இறுதிப்பகுதி.
ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமை, பிரச்னைகள், அம்மக்களின் கொண்டாட்டம் பற்றி பேசுகிற படம். ஜார்ஜ் ஒரு ஆராய்ச்சியாளர். அவர் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி வெளிநாடு சென்று படித்து ஆராய்ச்சியாளராகிறார். கோகோ பயிர் தொடர்பான அறிவியலாளர் அவர். திரும்ப ஒருகட்டத்தில் தாய் நாடு திரும்பி, தனது பால்யத்தில் தவறவிட்ட வாழ்வை வாழ நினைக்கிறார். அப்படி வரும்போது அவருக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
காட்டுக்குள் அவரது ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இடிந்துபோன பாழடைந்த வீடு. அதை நேர்த்தி செய்து வசிக்கத் தொடங்குகிறார். அங்கு அவரைப் பார்க்க வரும் சிறுவன், ஜேமி. கால் ஊனமான காப்பக சிறுவன். ஜார்ஜ், வெளிநாட்டில் அறிவியலாளராக வேலை செய்து கிடைத்த பணத்தை சேமித்து கானாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்தப்பணம் காப்பகத்திற்கு வந்து சேரவில்லை. அதை அறிந்து வெள்ளை இன நண்பனை நம்பி மோசம் போனதை அறிகிறார். மனதிற்குள் கோபம் கொப்பளிக்கிறது. ஆனால் செய்வதற்கு ஏதுமில்லை போன பணம் போனதுதான்.
காப்பகத்தை ஜார்ஜின் பால்ய கால நண்பன் நடத்திக்கொண்டிருந்துவிட்டு மரணமடைகிறான். அவனது சமாதியை ஜார்ஜ் சென்று பார்த்து மரியாதை செலுத்துகிறான். கினியாவுக்கு வந்தவனிடம் பெரிதாக பணமெல்லாம் இல்லை. அவன் வாழும் வீட்டிலிருந்து நகருக்கு செல்ல வண்டி கூட கிடையாது. இந்த நிலையில் அங்குள்ள காப்பகத்தில் ஆசிரியராக உள்ள கரினாவுடன் நட்பு ஏற்படுகிறது. அது நட்பிலிருந்து காதலாக மாறுகிறது. இருவருமே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டிருக்கிறார்கள்.
கரினா மூலமே ஆங்கில நண்பன் செய்த மோசடி தெரியவருகிறது. பிறகு அந்த நண்பனும் ஜார்ஜின் அயல்நாட்டு வீட்டை விற்ற பணத்தைக் கொடுக்க கானாவிற்கு வருகிறான். மோசடி பற்றி ஜார்ஜ் கேட்பதும், அதற்கு நண்பன் பதில் சொல்வதுமான காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜேமி என்ற சிறுவனின் குறும்பான நடத்தையால் ஜார்ஜின் பழுதுபார்க்கப்பட்ட வீடு நெருப்புக்கு இரையாகிறது. ஜேமி, ஆங்கில நண்பன் ஆகியோரை மன்னித்துவிடும் ஜார்ஜ், வீடு பற்றியெரிவதைப் பார்த்து சிரிக்கத் தொடங்குகிறான். சில நொடிகளில் மூவருமே சிரிக்கிறார்கள்.
படத்தில் நாயகனுக்கு செய்வதற்கென திட்டமிட்ட பணி ஏதும் கிடையாது. தாய்நாட்டில் இனி வாழவேண்டும் என அயல்நாட்டில் இருந்து வந்து சேர்கிறான். அப்பாவின் நினைவு,இறந்துபோன நண்பனின் நினைவு அவனுக்கு உள்ளது. மலைத்தொடர் பின்னணியில் உள்ள காடு, அதில் அமைந்துள்ள மரவீடு, காப்பகம், அங்கு சேவைசெய்யும் ஆங்கிலப் பெண் கரினா, மருத்துவ வசதிக்கு பல கி.மீ செல்லவேண்டியுள்ள நிலை என சற்று எதார்த்தமாக எடுக்கப்பட்ட படம். தேவையில்லாத நாயகத்துவ காட்சிகள் ஏதும் கிடையாது. படத்தில் ஆப்பிரிக்க பாடல்கள், ஜாஸ் இசைக்கு முக்கியத்துவம் உள்ளது. வறுமையான சூழலிலும் கூட அங்குள்ள மக்கள் கொண்டாட்டமான மனநிலையை உருவாக்கி நடனமாடுகிறார்கள், சர்க்கரையில் இருந்த தயாரிக்கும் மதுபானத்தை அருந்துகிறார்கள்.
கரினா ஜார்ஜ் முத்தமிடும் காட்சி, பிறகு அதை நினைவுபடுத்தி ஜார்ஜ் சங்கடம் கொள்வது, அவனைத் தேற்றி கரினா பேசுவது என காதல் காட்சிகள் சற்று மேம்பட்டவையாக எழுதப்பட்டுள்ளன. இறுதியாக ஜார்ஜ் தனது நகர வீட்டை விற்று வந்த பணத்தை காப்பகத்தின் மேம்பாட்டிற்கு செலவிடுகிறான். நடக்கும் விருந்தில் கரினாவுடன் நடனமாடுகிறான். அவள் அவனை காதலுடன் முத்தமிடுகிறாள். மோசடி செய்த நண்பனை ஜார்ஜ் மன்னித்துவிடுகிறான். அவனும் கூட விருந்தில்,கருப்பின பெண்ணோடு உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருக்கிறான். படம் இந்தப்புள்ளியில் நிறைவு பெறுகிறது.
கதை, கதைக்கு ஏற்றபடி கேமரா நகர்வுகள், மெல்லிய இசை என தொகுக்கப்பட்ட படம். கிராமங்கள், காடு, அதன் பரப்பு, காப்பகம், பள்ளி என காட்சிகளும் வழக்கமான படத்தை விட வேறுபட்டதாக உள்ளது. பரபரப்பு, தீவிர முரண்பாடுகள் என ஏதும் கிடையாது. நிதானமாக ஆறு போல படத்தின் காட்சிகள் கண்களிலிருந்து நகர்கின்றன. நேரமிருப்பின் படத்தை பாருங்கள். யூட்யூபில் கிடைக்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக