பத்திரிகையாளராக ஊடகவியலாளராக கரண் தாப்பர் எதிர்கொண்ட சுவாரசிய அனுபவங்களின் தொகுப்பு - சண்டே சென்டிமென்ட்ஸ்
சண்டே சென்டிமென்ட்ஸ்
கரண் தாப்பர்
கட்டுரை நூல்
பத்திரிகையாளர் கரண் தாப்பர், இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். தற்போது தி வயர் இணைய பத்திரிகையில் நேர்காணல்களை எடுத்து வருகிறார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே சென்டிமென்ட் பத்தியை எழுதி வருகிறார்.
படித்து பட்டம் பெற்றபிறகு, இங்கிலாந்தின் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியவர். பிபிசியில் ஹார்ட் டாக் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். இந்தியாவில் டெவில்ஸ் அட்வகேட் என்ற நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர். குறிப்பாக, இன்றைய இந்தியாவின் ஆட்சித்தலைவர், குஜராத் முதல்வராக இருக்கும்போது அவரிடமே, அவரும் கட்சியினரும் உருவாக்கிய கோத்ரா கலவரம் பற்றி கேள்விகேட்ட தைரியசாலி. அதனால் அந்த பேட்டி ஏழு நிமிடங்களில் முடிந்துபோனது. அந்த பேட்டிக்கு பிறகு பாஜகவினர் எவரும் கரண் தாப்பருக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.
விமர்சனங்களை பொறுக்க முடியாத தரம் தாழ்ந்த கீழ்த்தரமான பாசிச சுயமோக அரசியல்வாதி காரணமாக கரண் தாப்பர், நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. ஆனால் அவர் தனது வேலையில் நேர்மையாக இருந்தார். எந்த இடத்திலும் பத்திரிகையாளராக சோரம் போகவில்லை. காசு வாங்கிக்கொண்டு தோளில் குறுகலோடு இளித்துக்கொண்டு நிற்கவில்லை. அதுதான் இன்றுவரை அவரை தனித்துக்காட்டுகிறது. கலவரம், பிரிவினையைத் தூண்டிவிட்ட மாநில முதல்வர், கரணின் பேட்டியில் இருந்து தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என எழுந்து ஓடினார் என்று கூறிவிட்டோம். அடுத்து தமிழ்நாட்டில் சர்வாதிகார இயல்பில் முதல்வராக இருந்த தங்கத் தாரகையும் கூட கேள்வியின் சூடு தாங்காமல் பேட்டி கொடுக்காமல் எழுந்து சென்றார். இதெல்லாம். கரண் தாப்பரின் பேட்டி எப்படி இருக்கும் என்று சொல்லும். இனி நூலைப் பற்றி பார்ப்போம்.
கரண் எழுதிய சண்டே சென்டிமென்ட்ஸ் நூல், மொத்தம் அறுபது கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளும் அங்கத தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. இதில் அவர் பேட்டி எடுத்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வெளிநாடுகளுக்கு சென்ற அனுபவங்கள், நேர்காணலில் செய்த குளறுபடிகள், விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் அணுகிய தன்மை, ஆப்கன் போர் என அனைத்தையும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தானின் ஆட்சித்தலைவர் முஷாரபின் அலுவலகத்தில் கரண் தாப்பர் எடுத்த நேர்காணல் என்பது சற்று அழுத்தம் கொண்டதுதான். கடினமான கேள்விகளை கேட்டார். பிறகு, அந்த நேர்காணல் முடிந்தபிறகு கரண், முஷாரப்பின் டை குறித்து கேட்பது சற்று வினோதமான கேள்விதான். ஆனால், நேர்காணல் கேள்விகள் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தான் கட்டியிருந்த டையை அவர் கழற்றி கொடுப்பது யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இதேபோல பெனாசிர் பூட்டோவுடனும் கரணுக்கு நல்ல நட்பிருந்தது. அதை டெவில்ஸ் அட்வகேட் நூலில் விவரித்திருப்பார்.
கரண் கேள்வி கேட்பது ஒருவரின் பொதுவெளியில் உள்ள செயல்பாடுகள் பற்றித்தான். சொந்த விவகாரங்கள் குறித்து அல்ல. அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலர் சொந்த விஷயங்களை அவர்களாகவே கூறி, அதற்காக கரணிடம் கோபம் கொண்ட சம்பவங்கள் உள்ளன
பாகிஸ்தான் அரசியல்வாதிகள், தூதர அதிகாரிகள் ஆகியோருடனான தொடர்பு காரணமாக பாகிஸ்தானிய ஆதரவாளர் என்று கூட குற்றம் சாட்டப்பட்டவர் கரண். அதுபற்றிய மொண்ணையான ஆதாரங்கள், இந்திய அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைப்பற்றிய கட்டுரை வாசிக்கும்போது, கண்மூடித்தனமான தேசப்பற்று என்பது எந்தளவு வன்மமாக, பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்பதாக மாறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அரசியல் ரீதியாக அனுபவம் கொண்டவர் என்றாலும் சினிமா சார்ந்த பெரிய அறிவு கரணுக்கு இருந்ததில்லை. அதையே எஸ்ஆர்கே என்ற குறுஞ்செய்தி அவரது போனுக்கு வரும்போது அதைப்பற்றி போன் செய்து யார் என விசாரிக்கும் அனுபவம் விவரிக்கிறது. இது சற்று வேடிக்கையானது. பொதுவாக சினிமா பிரபலங்களுக்கு தான் என்ற அகந்தை அதிகம். அதை கரண், போன் விசாரிப்பு மூலம் தூண்டிவிட ஷாரூக்கான் கரணை முட்டாள் என பொருள்படும்படி சாடை மாடையாக பேசுகிறார். கரண், அதையும் கூட தனது நூலில் பிரசுரித்துவிட்டார். சுய பகடி என்பது கரணுடைய எழுத்தில் எப்போதும் காணப்படுகிற ஒன்று என்பதற்கு இதுவே சாட்சி.
சினிமா பிரபலங்கள் பொதுவாக நேர்மையாக இருப்பது அரிது. இந்த வகையில் ஐஸ்வர்யாராய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரும் சம்பவத்தை கரண் குறிப்பிடுகிறார். அதைவிட போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஃபர்தீன்கான் பேசும் உண்மை நேர்மையாக உள்ளது என கூறலாம். கரண், அவரது செயலைக்கூட தவறாக கைது செய்துவிட்டார்களோ எனும்படியாக கேள்வி கேட்கிறார். ஆனால், அந்த நடிகர் உறுதியாக அப்படியெல்லாம் இல்லை. நான் சட்டத்தை மீறி போதைப்பொருட்களை பயன்படுத்தினேன். அதற்காக போலீஸ் என்னை கைது செய்தது என வெளிப்படையாக கூறும் இடம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இதைப்போலவே நடிகர் சஞ்சய் தத்தை பேட்டி எடுத்த அனுபவமும் வெளிப்படையான இயல்பில் அமைகிறது. கரண், அவரை மறக்க முடியாத மனிதர் என குறிப்பிடுகிறார். எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்தான் கரணுக்கு டெல்லியின் வரலாறு பற்றி விளக்கி பூரணமாக பேசியிருக்கிறார். டெல்லியைப் பற்றி தெரிந்துகொள்ள விமானத்தில் சந்தித்த பெண் ஒருவர் காரணமாக அமைகிறார் என்பதை யோசிக்க முடிகிறதா? கரணுடைய வாழ்க்கை அப்படித்தான்.
இந்த கட்டுரை நூலை வாசிக்கும்போது அன்றைய இந்தியாவின் சமூக அரசியல் பொருளாதார சூழலை புரிந்துகொள்ளமுடியும். நாடாளுமன்றத்தில் பாக் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதும், அன்றைய பாஜக அரசியல்வாதி அத்வானி, விருந்துக்கு வந்த பாக் ஹை கமிஷனரை பகைமையோடு அணுகவில்லை. இன்று அந்த சூழ்நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா? உயர் சாதியாக இருந்தால்தான் எதிர்க்கட்சித்தலைவர், மக்களவையில் அரசைக் கேள்வி கேட்க முடியும் என்ற தரம் தாழ்ந்த இடத்திற்கு இந்தியா நகர்ந்திருக்கிறது.
நாட்டின் ஆட்சித்தலைவரே எளிய மக்களுக்கு எதிரான கீழ்த்தரமான செயல்களை முகத்தில் புன்னகையோடு செய்து வருகிறார். நூலை வாசிக்கும்போது உங்கள் மனம் பழைய இந்தியாவைக் காண பின்னோக்கிச் செல்வதை தவிர்க்கவே முடியாது.
பத்திரிகையாளராக ஊடகவியலாளராக செயல்பட, நடந்துகொள்ள ஊக்கம் தருகிற கட்டுரைகளைக் கொண்ட நூல். கட்டுரைகள் கச்சிதமான எளிய புரிந்துகொள்ளும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எனவே, வாசிப்பதில் பெரிய பிரச்னை இருக்காது.
கரண் தாப்பர், ஐடிவி என்ற நிறுவனம் மூலம் நேர்காணல், அரசியல் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். யூட்யூபில் அவர் எடுத்த நிறைய நேர்காணல்கள் உள்ளன. வளரும் பத்திரிகையாளர்கள் நேர்காணல்களைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. வாசிக்கவும் சில நூல்களை எழுதியுள்ளார். அவற்றை அமேசான் வலைத்தளத்தில் தேடிப் பார்த்து வாங்கி வாசிக்கலாம்.
கோமாளிமேடை டீம்
https://www.amazon.in/Sunday-Sentiments-KARAN-THAPAR/dp/8183282938
கருத்துகள்
கருத்துரையிடுக