ஏழை நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து நன்மதிப்பை பெறும் சீனாவின் உத்தி!

 

 



 

 

வரவேற்பு கிடைக்குமிடத்தில் வணிகத்தை நடத்தி வெற்றி பெறும் சீனா!

சீனாவுக்கு அமெரிக்காவை அசைத்துப் பார்த்து முதலிடத்தை பெறும் லட்சியம் உண்டு. தென்சீனக்கடலை அதன் ராணுவக்கப்பல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இதெல்லாம் கடந்து, உள்நாட்டில் வணிகம் வளர்ச்சியில் சுணக்கம் கண்டவுடன், இரண்டாயிரத்திலேயே அயல்நாடுகளை நோக்கி சீன நிறுவனங்களை செல்லுமாறு அந்த நாட்டு அரசு கூறிவிட்டது. அரசு கூறியதை அரசு, தனியார் நிறுவனங்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சவுதி அரேபியா, மலேசியா, வியட்நாம், எகிப்து, மொராகோ, கஜகஸ்தான், இந்தோனேசியா, அர்ஜென்டினா, செர்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வணிகம் செய்யத் தொடங்கியுள்ளது.

டிக்டாக்கை அமெரிக்கா தடை செய்தாலும் கூட அதைப்பயன்படுத்தி சீனா பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தை கொண்டு சென்றுள்ளது. அந்த நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் வறுமையாக உள்ள நாடுகளில் தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன. இப்படி செய்வதால் சீனாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளால் வரி பிரச்னை குறைகிறது. வறுமையான நாடுகளில் தொழில் தொடங்கி அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுப்பதால் சீனா மீது நன்மதிப்பு கூடுகிறது. வணிக நிறுவனமும் அதன் சாதகமான பயனாக பெரும் லாபத்தை அடைகிறது.

மெக்சிகோ, பிரேசில் நாட்டில் செய்ன் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தின் மலிவு விலை உடைகள் வெகு பிரபலமாக உள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில், டிரான்சியன் என்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் டெக்னோ, இன்பினிக்ஸ், ஐடெல் என்ற பிராண்டுகளில் நூறு டாலர்களுக்கும் குறைவான விலையில் செல்போன்களை தயாரித்து வழங்குகிறது. இங்கு விற்பனையாகும் பாதி ஸ்மார்ட்போன்களின் விற்பனை, டிரான்சியனுடையதுதான். சீன பொருட்கள் என்றால் மலிவு என அவதூறு செய்பவர்கள் முன்பு உண்டு. இன்று நிலைமை மாறியுள்ளது. வீட்டு பயன்பாட்டு பொருட்களில் ஹையர், மிடியா ஆகிய நிறுவனங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் புகழ்பெற்றவையாக உள்ளன.

தாய்லாந்தில் சாய் மோட்டார்ஸ், பைடு நிறுவனங்களின் கார்கள் பதினெட்டு சதவீத சந்தையைப் பிடித்துள்ளன. 2020ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களின் விற்பனை அளவு ஆறு சதவீதமாக மட்டுமே இருந்தது. ரஷ்யாவை மேற்கு நாடுகள் முற்றாக புறக்கணித்தன. ஆனால், சீனா அப்படி செய்யவில்லை. கையை குலுக்கி காரியம் சாதித்துவிட்டது. அங்கு சீன நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மருத்துவ உபகரணங்களை மைண்ட் ரே என்ற சீன நிறுவனம் விற்று வருகிறது. காற்றாலை வேண்டுமா, கோல்ட்விண்ட், என்விஷன் ஆகிய சீன நிறுவனங்கள் நாங்க இருக்கோம் என முன்வருகின்றனர்.

காட்டி காபி என்ற சீன காபி நிறுவனம், 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் ஏழாயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? டிக்டாக் என்ற சீன செயலி வெற்றிகரமாக பலகோடி பார்வையாளர்களை கொண்ட நாடுகள் என பார்த்தால் பத்தில் ஒன்பது நாடுகள் வளரும் நிலையிலுள்ளவை. இங்கு சீன நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். ஏழை, வளரும் நாடுகளில் முன்பு ஜப்பான் நாடு பிடித்திருந்த வலுவான இடத்திற்கு இன்று சீன நிறுவனங்கள் வந்துவிட்டன.

இருப்புப்பாதை, துறைமுகம், மின்சார கட்டமைப்பு ஆகியவற்றை செய்யவும் சீன நிறுவனங்கள் உள்ளன. ஸ்டேட் கிரிட் என்ற நிறுவனம் மின்சார கட்டமைப்பைச் செய்து கொடுக்கிறது. சிஆர்ஆர்சி என்ற நிறுவனம், ரயில்களை வடிவமைத்துக் கொடுக்கிறது. சூரிய சக்தி வேண்டுமா, ஜின்க்கோ சோலார், டிரினா சோலார், லாங்கி ஆகிய சீன நிறுவனங்கள் உள்ளன. இவை மூன்றுமே உலகளவில் புகழ்பெற்ற பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள். 2023ஆம் ஆண்டில் சீன நிறுவனங்கள், வெளிநாடுகளில் ஈட்டிய வருமானம் 1.5 ட்ரில்லியன் டாலர்கள். இன்று அமெரிக்கா வெளிநாட்டு முதலீட்டு வழியாக வரும் வருமானத்தில் கோலோச்சினாலும், வருங்காலம் அப்படியே இருக்காது. சீனா, தன்னை வரவேற்கும் வளர்ந்து வரும் நாடுகளில், ஏழை நாடுகளில் நிறைய முதலீடுகளை செய்து வருகிறது.

இந்தியா, வணிகத்தில் பாகுபாடாக சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தனித்த சலுகை காட்டிவருகிறது. சாதி, இன, மத வெறுப்பு கொண்ட வெற்று பேச்சுகளால், நாட்டை உருவாக்க முடியாது. கைக்கூலி ஊடகங்கள் மூலம் காட்டும் போலியான தேசப்பற்று நாட்டையோ, மக்களையோ காப்பாற்றவும் செய்யாது. உயரமான சிலை என புகழப்படும் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்துக்கொடுத்தது சீன நிறுவனம்தான். அவ்வளவு ஏன், கதர்துணியில் இருக்கவேண்டிய இந்தியக் கொடிகள் பிளாஸ்டிக்கில் மாறிவிட்டன. அதை பேரளவில் தயாரித்து வழங்குவது இந்திய தொழிலாளர்கள் அல்ல. சீனர்கள். கொடிகள் அனைத்துமே சீனநாட்டுத் தயாரிப்பு.  

பரவாயில்லை விடுதலை நாளை சீனத் தயாரிப்பு கொடியுடன்தான் கொண்டாடுவோமே? இந்தியாவை உலக அரங்கில் அந்நிய சக்திகள் அவமானப்படுத்த முடியாது. பதிலாக, உள்நாட்டில் உள்ள நாமே அதைச் செய்வோம்.   



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்