மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

 

 

 

 



 

 


எழுத்தாளர் ஷீலா டாமி

உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா?

எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன்.

காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா?

நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிகள் தீர்க்கமாக இருக்காது. நான் எழுதிய வள்ளி என்ற புனைவு நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். அது சூழலியல் சார்ந்த புனைவுக்கதை. வயநாடு இயற்கை வளங்கள் நிறைந்த பழங்குடிகளின் நிலம்.

அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள், பன்னாட்டு நிறுவனங்களும் அபகரித்துக்கொண்டன. அதனால்தான் இயற்கைக்கு பிரச்னைகள் எழுந்துள்ளன. வள்ளி என்ற எனது நாவல் 2018ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வெள்ளப்பாதிப்பைக் கூறி நிறைவடையும். நாவலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மனிதனின் பேராசை, நிலத்தின் மீது எப்படி மாறி வந்துள்ளது என்பதை பதிவு செய்கிறது.

டுநாட் ஆஸ்க் தி ரிவர் ஹெர் நேம் என்ற நாவலை எழுதியிருக்கிறீர்கள். மலையாள நர்ஸ்கள் மத்திய கிழக்கில் வேலை தேடிச்செல்வதைப்பற்றிய கதை. இதை எழுத வேண்டுமென எப்படி தோன்றியது?

நான் கேரளத்தில் இருந்து மத்திய கிழக்கிற்கு இடம்பெயர்ந்து இருபதாண்டுகள் ஆகிவிட்டது. நாவலில் வரும் ரூத், கேரளத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நர்ஸ்களைப் பற்றி கூறுகிற பாத்திரம். இங்கு வந்து வேலை செய்பவர்கள், குடும்பத்தின் வறுமை நிலைக்காகவே வருகிறார்கள். இப்படியான நர்ஸ்களால்தான் கேரளத்திலுள்ள ஏராளமான குடும்பங்கள் தலைநிமிர்ந்துள்ளன. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் கேரளப்பெண்கள் நர்ஸ்களாக பணியாற்றி வருகிறார்கள். கடல்கடந்து சென்ற ஆண்களைப் பற்றிய நிறைய கதைகள் எழுதப்பட்டுவிட்டன. நான் பெண்களின் கதையைக் கூற விரும்பினேன்.

இதில் நாயகி பாத்திரம் போலி முகவர்கள், இனவெறி, மோசமான வாழ்நிலை, தாயகம் செல்வதற்கான விருப்பம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறது. இதற்காக நீங்கள் பலரிடமும் உரையாடினீர்களா?

ஆமாம். இப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு வந்தவர்கள் பலரும் தங்களின் வாழ்க்கை கதையை வெளிப்படையாக, முக்கியமான விஷயங்களைக் கூட தவிர்க்காமல் கூறினார்கள். வெளிநாட்டில் நான் இருந்தபோது, இதுபோன்ற பெண்களின் போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன்.


மக்மூத் தார்விஷின் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் எதற்காக?

முடிவுக்கு வராத போராட்டம், வலியை பாலஸ்தீன கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் ஆழமாக கூறியிருக்கிறார்கள். திறமையான பாலஸ்தீன கவிஞர்கள், தங்கள் குரலை வெளிப்படுத்தமுடியாதவாறு அமைதிபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தங்கள் கருத்தை வெளிப்படுத்துபவர்களின் மீது விசாரணை தொடங்கப்படுகிறது. போர் சிலரின் உயிரைக்கூட எடுத்துக்கொண்டுவிட்டது. நாவலில் வரும் சகால் பாத்திரம், மக்மூத் தார்விஷின் கவிதைகளை விரும்புகிற பாத்திரம். இந்த நாவலின் தலைப்பு கூட தார்விஷின் தி பாஸ்போர்ட் என்ற கவிதையிலிருந்து தாக்கம் பெற்று உருவானதுதான்.





டைம்ஸ் ஆப் இந்தியா
ஷ்ருதி சோனல்




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்