சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை!

 


 

 

 

 
சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை!
அரிது அரிது
இயக்குநர் மதிவாணன்
இசை தமன்

இந்த படத்தின் இயக்குநர், ஒரு பெரிய இயக்குநரின் உதவியாளராக வேலை செய்தவர். அந்த பெரிய இயக்குநர் போலியான சமூக கருத்துகளை அவரது சாதிக்கு ஏற்றபடி கூறுபவர். தமிழர்களின் கருப்பு நிறத்தை அவமதிப்பவர். மூன்று சதவீத உயர்சாதியை போற்றுபவர்.அவரிடமிருந்து வந்தேன் என விளம்பரம் வேறு. இந்த படத்தின் வீடியோக்கு கீழே உள்ள குறிப்புகளில் இயக்குநர் பற்றி அப்படியே பதிவாகியுள்ளது.

படத்தில் ஒரு நரம்பியல் மருத்துவர் இருக்கிறார். கடற்கரையில் வாக்கிங் வந்தவருக்கு அங்குள்ள இரைச்சலான சூழ்நிலை பிடிக்கவில்லை. அங்கேயே அவரை மடக்கி பிடித்த மனித உரிமைக்குழு  போலீஸ் போல விசாரணைக்கு இழுத்து செல்கிறது. எதற்கு? அவரது மகன் பேச முடியாமல் நடைபிணம் போல மாறிவிட்டார். எதற்கு அப்படி மாறினார், அதில் அப்பாவான மருத்துவரின் பங்கு என்னவென கேட்கிறார்கள். கதை உடனே மருத்துவரின் நினைவுகளில் ஓடுகிறது.

படத்தைப் பார்க்கும் நமக்கு பெரும்பாலான கதை, வசனமாகவே ஒலிக்குறிப்பாகவே கூறப்படுகிறது. காட்சியாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. நகர்வதே இல்லை. மருத்துவர் இரைச்சல் பிடிக்காத மனிதர். தான் தங்கியுள்ள அபார்ட்மென்டில் செல்போன் வழியாக கூச்சலிட்ட பெண்ணை சுத்தியால் தலையில் அடித்து கொல்கிறார். பிறகு அவரை கேள்வி கேட்கும், அவரது மனைவியைக் கொல்கிறார். மகன் தன்னை எதிர்த்து காவல்துறையில் காட்டிக்கொடுக்க முயன்றான் என்பதற்காக அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் உள்ள நினைவுகள், சுய அறிவு பதிவுகளை அகற்றுகிறார்.
ஆனாலும் நினைவில் கொள்ளுங்கள், மருத்துவரான அப்பாவுக்கு மகன் என்றால் கொள்ளைப் பிரியம், அதனால்தான் மகன் கொல்லப்படவில்லையாம்.இதை மருத்துவரே சொல்லுகிறார். கூடவே தான் ஒரு சைக்கோ என கூறுகிறார். உண்மையில் மனநிலை பிறழ்ந்தவர்கள், தங்களை அப்படியான சிக்கல் கொண்டவர்கள் என யாரிடமும் கூற மாட்டார்கள். முடிந்தவரை இயல்பானவர்களாகவே நடிப்பார்கள்.

மருத்துவரான அப்பா, மகனை ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிப்போகிறார். அங்கு மகன் தொலைந்து போகிறான். அப்படியாவது கதை வேகம் பிடிக்கிறதா என்றால் இல்லை. நாயகன் பாத்திரத்திற்கு நடிக்க எந்த வாய்ப்பும் இல்லை. சுயமாக சிந்திக்க தெரியாத ஒருவர். சாப்பிடவோ, மலம் கழிக்கவோ, பாலியல் உணர்வு கூட வெளிப்படுத்த தெரியாத நிலை. அவரை அயல்நாட்டு இந்தியப் பெண் ஒருவர் பராமரிக்கிறார். அவரது பாத்திரமும் தெளிவாக இல்லை. காட்சி நகர நகர இறுதியாக லூசு நாயகியாக மாறிப்போகிறார். இதில் காதல் கண்றாவி வேறு. படத்தில் போக்கில் நாமும் நாயகன் போலவே எந்தவித உணர்வுமற்று மாறிப்போகிறோம்.

படத்தில் உண்மையாக உழைத்திருப்பது இசை அமைப்பாளர் தமன் மட்டுமே. சிறு பாடல்களை பின்னணியில் பாடிக்கொண்டு சற்றே உற்சாகம் ஊட்ட முனைகிறார். ஆனால், காடசிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இசையும் கூட பரிதாபமாக ஒலித்தவாறே கடந்துபோகிறது.

மருத்துவர் அப்பா மகனை அயல்நாட்டில் தொலைத்துவிட்டு காவல்துறையோ, இந்திய தூதரகமோ நாடிச் செல்வதில்லை. அப்படியே பாலம், நடைபாதை, பூங்கா என சுற்றித் திரிகிறார். உண்மையில் ஒலிதான் பிரச்னையா அல்லது பாரானாய்டு மாதிரியான மனநிலை பிரச்னைகளா என ஏதும் புரிவதில்லை. கோக் வாங்கி குடித்துக்கொண்டே மகனுக்காக கவலைப்படுகிறார். அழுகிறார்.

படத்தில் தொடக்கத்தில் மருத்துவரின் உள்மனம் குரலாக ஒலிக்கிறது. பிறகு, அது மருத்துவரின் மகன் நாயகனின் குரலாக மாறி ஒலிக்கிறது.இதற்கடுத்து அயல்நாட்டில் மனித வெடிகுண்டாக மாற்றப்படும் ஒருவரின் குரலாக மாறுகிறது. இப்படி மாறி மாறி குரல் வழியாக கதை சொல்வது எரிச்சல் ஊட்டுகிறது. படத்தை கதை வசனமாக சிடி, டிவிடி அல்லது பென்டிரைவில் கூட பதிவாக்கி கொடுத்துவிடலாமே? அதற்கு எதற்கு கேமரா வைத்து படமாக்கித் தொலையவேண்டும்?

அரிது அரிது படத்தின் இயக்குநருக்கு மக்களுக்கு பெரிய கருத்தூசி போடும் எண்ணம் இருக்கிறது. சரி. அதை எப்படி உணர்வுப்பூர்வமாக காட்சி வடிவில் கூறுவது எனத் தெரியவில்லை. எங்கேயோ போய் எதையோ படமாக்கிவிட்டு இறுதியாக மனித வெடிகுண்டுகள் வேண்டாம் என கருத்தூசி போட்டு முடிக்கிறார். இவரது படத்தை விட திரையரங்கில் பிரசாரம் செய்யப்படும் முகேஷின் புற்றுநோய் விளம்பரம் நேரடியாக நேர்த்தியாக உள்ளது.

இதில் அறிமுக நாயகனாக நடித்தவர் ஹரிஷ் கல்யாண். இந்தப்படத்தை அவர் மறக்கவே நினைப்பார் என்பது உறுதி. இதற்கடுத்த படம்தான் சிந்து சமவெளியா என்று தெரியவில்லை. உத்தரா ராஜ் என்ற பெண் நாயகி. அவருக்கு எப்போதும் போல தமிழ் சினிமாவின் மாறாத லூசு நாயகி பாத்திரம். நாயகனின் அப்பா மனநிலை பிறழ்ந்தவர் சரி. நாயகியின் அப்பாவும் கூட சைக்கோ சாடிஸ்டா என்ன? படத்தில் நடித்துள்ள எவருமே இயல்பான நிலையில் இல்லை. அதீதமாக தனக்கென தனி உலகை உருவாக்கி அதில் வாழ்கிறார்கள். அப்படியான உலகம் பிரச்னையில்லை. பார்வையாளர்களாகிய நாம் அதில் நுழையவே முடியவில்லை.

மனித வெடிகுண்டு தவறு என்கிறார். அதை முஸ்லீம்களை மட்டுமே வைத்து வழக்கம்போல காட்டுகிறார். மனித வெடிகுண்டாக வரும் பாத்திரம், தன்னை மட்டுமே காத்துக்கொள்ள முயல்கிறது. மக்கள் இறப்பதைப் பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. நாயகனை பலிகொடுத்து தன்னைக் காத்துக்கொள்கிறார். ஆனால் அவரின் மனக்குரலாக ஒலியாக காட்சியில் வருவதெல்லாம் அவரை நல்லவனாக காட்டும் விஷயங்கள். ஏன் இத்தனை முரண்பாடுகள்?

ஒருவர் காணாமல் போகிறார், அவரை முறைப்படி காவல்துறையில் ஒப்படைத்து அல்லது அவர்களின் உதவியை நாடி விளம்பரம் செய்தாவது தேடுவது சரியானவழி. ஆனால் அப்படி செய்தால் படம் உடனே முடிந்துவிடுமே என யோசித்து ஜவ்வாக இழுத்து இழுத்து ஒருவழியாக முடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை பார்த்து இறுதியாக நாமும் நமக்குள்ளாக பேசிக்கொள்ள தொடங்கிவிடுகிறோம்.....

டஜன் கணக்கில் கருத்தூசி
 
கோமாளிமேடை டீம் 

Initial release: 24 December 2010
Music director: Thaman S

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்