பேச்சுரிமை என்றால் என்ன என்பதை முழுமையாக விளக்கி சிந்திக்க வைக்கும் நூல்!

 

 

 




 

 

 

 

ப்ரீஸ்பீச்
நிகல் வார்பர்டன்
ஆக்ஸ்போர்ட் பிரஸ்

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் நிறைய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. வேலைவாய்ப்பின்மை காரணமாக வலதுசாரி மதவாதம் தலைதூக்கி வருகிறது. தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் மூலம் பயமும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. ஏழை நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் வழியாக வெறுப்பு பேச்சு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மெல்ல பறிபோகத் தொடங்கி வருகின்றன. ஃப்ரீஸ்பீச் என்ற நூல், பேச்சுரிமை என்றால் என்ன, அதற்கான  கொள்கை, தத்துவங்கள், அதற்கு எழுந்த சவால்கள், மத மீறல்களைக் கலைப்படைப்புகள், மதத்தை பகடி செய்யும் திரைப்படம், நாடகங்கள் ஆகியவை பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

பேச்சுரிமை என்றால் என்ன, இதன் தொடக்கமாக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஆன் லிபர்டி என்ற நூல் முன்வைக்கப்படுகிறது. இதில் எழுத்தாளர் மில், பேச்சுரிமை ஏன் முக்கியம். அதை காப்பது எந்தளவு அவசியம் என்று விளக்கி கூறியிருக்கிறார். இவர் கூறிய கருத்துகளை வாசித்தபிறகு, நூல் பேச்சுரிமைக்குள் வருவதாக கூறும் வெறுப்பு பேச்சு, ஆபாச படங்கள், மதங்களை கேலி கிண்டல் பகடி செய்யும் திரைப்படங்கள் என பக்கம் நகர்கிறது.

அரசியலமைப்புச் சட்டம், நீதிசட்டம் என்பதெல்லாம் இன்றைக்குள்ள மதவாத அரசுகளுக்கு கேலிக்குரிய, கேளிக்கைக்கு உரிய பொருள். வெளிப்படையாக அதை எதிர்க்கவில்லை என்றாலும், தங்களின் உதவிக்குழுக்களை கூலிப்படைகளை தூண்டிவிட்டு பேச்சுரிமைக்கு எதிரான தணிக்கையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதில் முக்கியமானது தடை கலாசாரம், நூலில் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற சீக்கிய குருத்துவாராவை அடிப்படையாக கொண்ட நாடகத்தை தடுக்க ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டதை எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதை எழுதியவர் உயிருக்கு பயந்து தலைமறைவாகும்படி சூழல் உருவானது. ஜனநாயக உரிமைகளுக்கு பெரிய மதிப்பளிக்கும் நாட்டிலேயே இப்படி என்றால், கிறித்தவர்களை, முஸ்லீம்களை படுகொலை செய்யும், எளிய இரையாக தலித், ஆதிவாசி, சிறுபான்மை இன பெண்களை வல்லுறவு செய்யும் இந்தியாவில் நிலைமை என்னவாக இருக்கும், நினைத்துப் பாருங்கள். 


இஸ்லாம் மதத்தில் உள்ள பெண்களின் உரிமைகளை பறிக்கும் விஷயங்களை பற்றி ஒருவர் திரைப்படம் எடுக்கிறார். அதில், வரும் நான்கு கதைகளிலும் பெண்கள்தான் மதத்தின் பெயரில் சூறையாடப்படுகிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி உண்மையைச் சொன்னதற்காக அதில் நடித்த நடிகர் படுகொலை செய்யப்பட்டார். கொலையை செய்தவர், இஸ்லாமிய அடிப்படைவாதி. பரிதாபம்தானே? இதே நிலை இந்தியாவில் வளர்ந்து வருகிறது. வலதுசாரி இந்து மதவாத அரசு அதை ஆதரித்து கூலிப்படை இயக்கங்களை வளர்த்தெடுத்து வருகிறது.

ஆபாசபடங்களை மெக்கின்னோன் என்ற பெண்மணி எதிர்க்கிற போராட்டம் பற்றிய அத்தியாயம் முக்கியமானது. தன் தரப்பு வாதமாக, பெண்கள் மீதான குற்றச்செயல்களுக்கு ஆபாசப்படங்களே கருவி. அதன் அடிப்படையில் குற்றங்கள் நடக்கின்றன என்று அவர் கூறி, அப்படங்களை முழுமையாக தடைசெய்ய்க்கூறுகிறார். பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். அதற்கு மறுப்பாக பல்வேறு வாதங்கள், கருத்துகளை எழுத்தாளர் நிகல் முன்வைத்திருக்கிறார். அவை வாசிக்க, சிந்திக்க சிறப்பாக உள்ளன.

பேச்சு சுதந்திரத்தில் வெறுப்பு பேச்சை பேசிய இர்விங் என்ற வரலாற்று ஆய்வாளர் பற்றியும் நூல் விவாதிக்கிறது. அவருக்கு மறுப்பு எழுதிய எழுத்தாளர், அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, அதில் நீதிமன்ற நிலைப்பாடு ஆகியவை நமக்கு அவசியமான தகவல்களைத் தருகின்றன.

நூலின் இறுதியில் பேச்சு உரிமை பற்றி அறிந்துகொள்ள வாசிக்கவேண்டிய ஏராளமான நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அதையும் ஒரு பார்வை பார்க்கலாம். காசு கொடுத்து தரவிறக்கி வாசிக்கலாம்.

பேச்சுரிமை என்பது வெறும் தாளில் இருக்கிறதா, நடைமுறையில் அதற்கு என்ன மதிப்பு என ஆராய்ந்து புரிந்துகொள்ள நிகல் எழுதியுள்ள இந்த நூல் உதவுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றி நம்மை யோசிக்க வைக்கிறது. யோசித்தால்தான் தெளிய முடியும் அல்லவா? அந்த வகையில் இடது, வலது என இருதரப்பிலுமான வாதங்களை இந்நூலில் வாசிக்க முடிகிறது.

கோமாளிமேடை டீம்

 https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://global.oup.com/academic/product/free-speech-a-very-short-introduction-9780199232352&ved=2ahUKEwigwPeY7YCIAxXs2TgGHTNPEEkQFnoECBYQAQ&usg=AOvVaw2FWf65rrPnKLayxKfoCuKy

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்