பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

 

 

 

 


 


 

 

 குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்!

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள்.

வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை.

சீக்கிய மதத்தின் அடிப்படையே இந்து, முஸ்லீம் நல்லிணக்கம்தான். அம்மதம், யாரையும் பிறப்பு சார்ந்து இழிவுக்குள்ளாக்குவதில்லை. நான் கூறியதெல்லாம் நூல் அளவில்தான். ஆனால் நடைமுறையில் ஜாட் சாதி சீக்கியர்கள், சீக்கிய மதத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். பிறர் அனைவரும் கீழானவர்கள்தான். பஞ்சாப், ஹரியாணாவில் இதே நிலைதான் நிலவுகிறது. இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் நிறுத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட இனக்குழு மக்களின் நிகழ்ச்சிகளில் அம்பேத்கர் தவறாமல் இடம்பிடிக்கிறார். அவர்கள் அம்பேத்கர் வழியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். வலிமை பெறுகிறார்கள். சாதி வேறுபாடுகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் சாமியார்கள் மடம் அமைத்து காணிக்கை வாங்கி கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள். அவர்களை வணிகர்கள், காவல்துறை, நீதித்துறை என அனைவருமே வணங்கி வழிவிட்டு நிற்கிறார்கள்.

பல்வேறு வல்லுறவு, கொலை, கொள்ளை, முறைகேடு, ஏமாற்றுதல் என எத்தனை புகார்கள் வந்தாலும் சாமியார்களை அரசு கண்டுகொள்வதில்லை. கைக்கட்சியோ, தாமரையோ இந்த விவகாரத்தில் இரண்டுமே ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி கூட மெல்ல மென்மையான இந்துத்துவ நகர்வைக் கொண்டிருக்கிறதுதானே? தாழ்த்தப்பட்ட சாதியினர், வால்மீகி, ரவிதாஸ், கபீர் , பாலக்நாத் ஆகிய ஆளுமைகளை வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். பொதுவாக சமகாலத்தில் வெற்றி பெற முடியாதபோது, தலைவர்கள் இல்லையென்றபோது கடந்தகாலத்தில் உள்ளவர்களை இழுத்து வைத்து சொந்தம் கொண்டாடுவதுதானே வழக்கம். அதேதான்.

தேரா சச்சா சவுதா மடத்தை எடுத்துக்கொள்வோம். இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் ஜாட் சாதியைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். யூட்யூபில் கூட பல்வேறு சர்கஸ்களை செய்துகொண்டிருக்கும் வினோத கோமாளித்தனமான வீடியோக்களைப் பார்க்கலாம். வல்லுறவு, கொலை புகாரில் சிறைவாசம் அனுபவித்து வருபவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். அவரை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற வலதுசாரி மதவாத கட்சி முயன்றுவருகிறது. தேர்தல் நடைபெறும்போது, குர்மீத்துக்கு பிணை வழங்கப்படுவது நிச்சயம் தற்செயல் அல்ல. 

 

குர்மீத்தை குடிநோய், போதைப்பொருட்களை எதிர்க்கும் நாயகனாக தாழ்த்தப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள்.
மக்களுக்கு உதவிகளை செய்து திட்டங்களை உருவாக்கிய அரசியல் தலைவர்களுக்கு பிணை எப்போதும் கிடைக்கமாட்டேன்கிறது. ஆனால் குர்மீத்துக்கு பிணை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒன்றிய அரசு, மாநில அரசு என இரண்டிலும் மதவாத கட்சி இருந்தால், பிணை கொடுப்பதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. குற்றவாளியால் பிரயோஜனம் என்றால் அவர்களை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறார்கள். அப்போது குற்றம், தண்டனை என்பதே கேலிக்கூத்துதானே? ஏன், எதற்கு, எதுக்கு இப்படி செஞ்சே? என்ற கேள்வியை கைக்கூலி ஊடகங்கள் அரசைப் பார்த்து கேட்பதில்லை. கேட்டால் வாலாட்டியதற்கு கிடைத்து வந்த பிஸ்கெட் இனிமேல் கிடைக்காமல் போய்விடுமென்ற பயம் உள்ளது.

சாமியார்கள் மக்களின் பிரச்னைகளை தீர்க்கிறார்களா இல்லை ஆறுதல் சொல்லித் தேற்றுகிறார்கள். அதற்கே அவர்களுக்கு மக்கள் பெரியளவு காணிக்கையை அள்ளிக்கொடுக்கிறார்கள். இதற்கு சாமியார்கள் செய்யவேண்டியது என்ன? உடை, சிகை அலங்காரம், முறையான பேச்சு பயிற்சி. பேசியதை ஊடகங்களிடம் பரவலாக்கவேண்டும். அவ்வளவேதான். மீதியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களை வைத்து அரிசி, பருப்பு, பிஸ்கெட், ஷாம்பூ என பல்வேறு பொருட்களை மட்டமாக தயாரித்து குறைந்த விலைக்கு விற்கலாம். விளம்பரத்தில் இந்திய தேசப்பற்று பொங்கி வழிய வேண்டும். அம்புட்டுத்தேன். ஜெயமே லயம், லயமே ஜெயம் என செட்டிலாகி வாழவேண்டியதுதான்.

அவுட்லுக் இதழில் சந்தோஷ் கே சிங்கின் கட்டுரையை தழுவியது.
pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்