உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்

 

 


 

 

 



 

 

 பிளாக்
ஆதி, தர்சனா பானிக்

ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார்.

நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சியில் காதலி தர்சனா வந்தால் அவரை மடக்குவது,முத்தம் கொடுக்கச் சொல்வது என வேறு டிராக் மாறிச் செல்கிறார். இப்படியான இயக்குநரின் உருப்படாத இயக்கத்தால் படம் வேகம் பிடிப்பதே இல்லை. நாயகி தர்சனாவுக்கு வெள்ளைச் சட்டையை மடக்கி விட்டு தொப்புள் தெரிய நடந்து வருவது தவிர வேறு வேலை ஏதும் இல்லை. பத்திரிகை வேலை என்று சொல்லி எப்போதும் நாலைந்து ரவுடிகள் துரத்த ஒடிக்கொண்டே இருக்கிறார்.  

ஆதித்யா என்ற நாயகன், நாயகி பற்றி பெரிதாக கவலையும் கொள்வதில்லை. கொலை பற்றிய தகவல் போனில் வரும்போது கூட தான் போலீஸ் என்பதை மறந்துவிட்டு போலீஸ் ஸ்டேசன் போய் சொல்லு என்கிறார். அடேய் யார்ரா நீ? நீயும் போலீஸ்தானடா?

படத்தில் எந்த பாத்திரமும் முழுமையாக ஈர்ப்பாக இல்லை. அவை பேப்பரில் வலுவாக எழுதப்படவும் இல்லை. காட்சியில் சிறப்பாக உருவாகி வரவும் இல்லை.

உறக்கத்தில் நடக்கும் வியாதி என்பதுதான் திருப்புமுனைக் காட்சி. அதையும் இறுதியாக ஒன்றுமில்லாதபடி உருவாக்கி படத்தை முடிக்கிறார்கள். ஆதித்யா, அர்ஜூன் என்ற இரட்டையர் பற்றிய காட்சியே ஆதித்யாவின் பாத்திரத்தை புரியவைத்துவிடுகிறது. ஆதித்யா, சுயநலமான ஆள். தான் செய்த தவறான விஷயங்களைக் கூட அர்ஜூன் செய்ததாக கூறி மாட்டிவிடுகிறான். இதனால் அர்ஜூன் மனதளவில் பாதிக்கப்படுகிறான். வீட்டைவிட்டு ஓடிப்போகும்போது அடிபட்டு இறந்துபோகிறான்.

அர்ஜூன் பற்றிய குற்ற உணர்ச்சி, ஆதித்யாவை வாட்டுகிறது. படத்தில் ஆதித்யா தூங்குவது பற்றிய நெடிய காட்சிகள் உண்டு. அவையெல்லாம் சோர்வையே தருகின்றன. கதைக்குள் நுழைய அதிக நேரமாகிவிடுகிறது. அதற்குள்ளேயே நமக்குள்ள பொறுமை காணாமல் போகிறது. தர்சனா, கவர்ச்சிக்கு மட்டும். பத்திரிகையாளராக வேலை செய்வது தனது லட்சியம் என்பவர், அதில் ஏதாவது சாதிக்கிறாரா என்றால் இல்லை.

படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு சன்டிவி சீரியல் தரத்தில் உள்ளது. இசையமைப்பாளர் சுரேஷ் பொப்பிலி என்ன மெனக்கெட்டும் இசை, சீரியல் தரத்தை தாண்டவில்லை. டைட்டில் கார்டு இசை மட்டுமே தேறுகிறது. சில நேரங்களில் பின்னணி இசை இல்லாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. வில்லனின் அறிமுக காட்சியே பட்ஜெட் பரிதாபத்தை, இயக்குநரின் கிரியேட்டிவிட்டியை உலகத்திற்கு சொல்லிவிடுகிறது. சிம்புதேவனின் கார்ட்டூன் போல ஒன்றைப் போட்டு அதன் வழியாக வில்லன் ஒருவரைக் கொல்வது போல காட்டுகிறார்கள். இப்படி காட்டப்படும் படம், சுவரில் மாட்டப்பட்டுள்ளது. என்ன ஒரு புத்திசாலித்தனம்.

உறக்கத்தை வைத்தே பழிக்குப்பழி

கோமாளிமேடை டீம்







 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்