சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்

 

 

 




 

 

 

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களை விட டெங்கின் வாழ்க்கை நிறையவே மாறுபட்டது. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் இமாலய உயரத்தையும், பாதாள வீழ்ச்சியையும் கண்டவர். எதிரிகள் பற்றி கவலைப்படாமல் தனது செயல்பாட்டில் கவனம் வைத்து வென்றவர். அரசியல் தொடர்புகள்,தனிப்பட்ட நட்பு, திருமண உறவு ஆகியவற்றின் மூலமே தன் அரசியல் வாழ்க்கையை நீட்டித்துகொண்ட ஆளுமை.

சிறுவயதில் வெளிநாடுகளுக்கு அதிக பயணம் செய்து வலம் வந்தவர். சிச்சுவானில் பிறந்தவரான டெங், 1920ஆம் ஆண்டு, பிரான்சுக்கு கம்யூனிஸ்ட் கல்வி கற்கச் சென்றார். அங்குதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு எழுந்தது. பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கல்வி கற்றார். 1927ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவர், தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் காரணமாக எந்நாளைக்குமான ஜென்ம விரோதியாக ஜப்பான் நாடு மாறியது. இன்று, ஒலிம்பிக்கில் நடந்த சில போட்டிகளில் ஜப்பான் நாட்டு அணியிடம் சீன அணி தோற்றுப்போனது. உடனே சீன இணையத்தில் சீன அணி, தேசதுரோகியாக சித்திரிக்கப்பட்டது. வீரர்கள் கடுமையாக கேலிவதை செய்யப்பட்டனர்.
1937-45 வரையிலான காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத கட்சியும் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக சேர்ந்து ஜப்பானை எதிர்த்தன. இந்த காலகட்டங்களில் டெங், கட்சி ரீதியாக தன்னை வளர்த்துக்கொண்டார். 1920, 1930 களில் அரசியல் தலைவரான சூ என்லாயுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டு மா சேதுங்குடன் தொடர்பு கிடைக்கிறது. மாவோவுடனான உறவு இனிப்பும், கசப்பும், உவர்ப்புமாகவே இருந்தது. ஆனால் டெங் அரசியல் ரீதியாக பதவிகளைப் பெற சாதிக்க மாவோவுக்கு காட்டிய விசுவாசம் உதவியது. ராணுவத்தில் உள்ள தொடர்பும் ஆதரவும் ஆட்சியில் இருந்தபோது பெரிதும் உதவியது. 1931ஆம் ஆண்டில் ஏழாவது பிரிவு சிவப்பு ராணுவப்படையை முறையாக கையாளவில்லை என விமர்சிக்கப்பட்டார். 1933ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சி விதிகளின்படி டெங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டெங்கின் வாழ்க்கையைப் பார்த்தாலே அவர் மீது மூன்று முறை கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை அறியலாம். இதற்கு காரணங்களாக ராணுவப்பிரிவை முறையாக கையாளவில்லை, முதலாளித்துவ ஆதரவாளர், தியான்மென் சதுக்க சம்பவம் ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். இதில் எதையும் முழுமையாக நம்ப முடியாது. ஏனெனில் சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் பதிப்பகம், டெங் ஷியாபோபிங்கின் பேச்சுகள், செயல்பாடுகளை நூல்களாக வெளியிட்டுள்ளது. இவை அனைத்துமே குறிப்பிட்ட சம்பவத்தை பற்றி மட்டுமே விவரிப்பவை. அதில், டெங்கின் உணர்வு நிலை, எதிர்வினைகள் ஏதுமே இருக்காது. அந்தளவு கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் தணிக்கையும், செம்மையாக்கவும் துல்லியமாக உள்ளது. மேற்கு நாடுகளில் உள்ள சுயசரிதைகளுக்கும், சீனாவில் வெளிவரும் கட்சி தலைவர்களின் சுயசரிதைக்கும் நிறைய வேறுபாடுகளைப் பார்க்கலாம். சீன சுயசரிதை மிகவும் சாதாரணமான செயல்களை விவரித்து நகரும். சர்ச்சையான விஷயங்களே இருக்காது.

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவானில் 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி பிறந்தவர் டெங் ஷியாபோபிங். அப்போது வைக்கப்பட்ட பெயர், டெங் ஷியான்செங். தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது வயது 5. அங்கு இருந்த ஆசிரியர், பெயர் உச்சரிப்பு தவறாக இருக்கிறது. தத்துவவாதியான கன்பூசியஸை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என கருதி, ஷிஷியான் என பெயர் மாற்றம் செய்தார். 1927ஆம் ஆண்டு தேசியவாத கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1929ஆம் ஆண்டு குவாங்ஷி சென்றவர், தனது பெயரை டெங் பின் என மாற்றிக்கொண்டார்.

டெங் கல்வி கற்கும்போது அரச முறையிலான கல்வியே நடைமுறையில் இருந்தது. தனியார் பள்ளியில் படித்தவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அனைவருமே நிலக்கிழார்களின் வாரிசுகள்தான். டெங்கின் அப்பா பெயர், டெங் வென்மிங். இவர் வசதியாக வாழுமளவு நிலங்களைக் கொண்டவர். தனது நிலங்களை குத்தகைக்கு பிறருக்கு அடைத்துவிட்டு, உள்ளூர் அரசில் சிறிய பதவியொன்றை வகித்து வந்தார்.

வென்மிங்கிற்கு மொத்தம் நான்கு மனைவிகள் மூலம் ஏழு பிள்ளைகள். நான்கு ஆண், மூன்று பெண் என ஏழுபேர் பிறந்தனர். டெங், கட்சிப்பணிக்கு என கிளம்பியபிறகு குடும்பத்துடன் பெரிதாக தொடர்புகொள்ளவில்லை. அவரது சகோதர சகோதரிகள் ஆசிரியர், நாளிதழ் ஆசிரியர், நகர மேயர் என பல்வேறு பதவிகளை வகித்தனர். டெங் சூபிங் என்ற சகோதரர், தேசியவாத கட்சியில் அதிகாரியாக இருந்து, பின்னாளில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

சீனாவின் முன்னேற்றம் பற்றி பேசும்போது டெங் ஷியாபோபி்ங் பற்றியோ, அவரது மேற்கோள்களோ இன்றி சீன அதிபர் ஷி ச்சின்பிங் பேசுவதேயில்லை. ஷின்குவா செய்தி நிறுவனத்தின் செய்திகளை நீங்கள் வாசித்தாலே தெரியும். டெங் ஷியாபோபிங் பெயர் அதிக முறை கட்டுரைகளில் பயன்பட்டு வருவதை அறியலாம். நவீன சீனாவிற்கான அடித்தளமான பொருளாதாரத்தை முதலீடுகளுக்காக திறந்து வைத்தவர். சோசலிச கொள்கைகளை, ரஷ்யாவைப் பார்த்து அப்படியே நகல் எடுக்காமல் சீன கலாசார தன்மைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறியவர் டெங். வளர்ச்சி கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் கட்சி ஆலோசித்து முடிவெடுத்துவிட்டால் அதை நடைமுறைப்படுத்துவதே டெங்கின் இயல்பு, அதை அவர் விமர்சித்து பேசியதில்லை. அமைப்பைக் காப்பாற்றுபவர் என புகழ்ந்து கூறுவார்கள். அது உண்மையே.

மூலநூல்
டெங் ஷியாபோபிங் அண்ட் தி சைனீஸ் ரிவல்யூஷன்
தமிழாக்கம்
ஜெனரல்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்