நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்

 

 

 



 


 

 

நேர்காணல்
விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம்


பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது?

எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம்.

நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஆயுதங்களை கைவிடவேண்டும் என கோரிக்கையை அரசு முன்வைத்தது. இப்போது நடத்தப்படவிருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் அப்படியான கோரிக்கை ஏதேனும் உள்ளதா?

இருதரப்பிலும் ஆயுதங்களை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். நக்சலைட்டுகள், ராணுவப்படைகளை காடுகளில் இருந்து விலக்கிக்கொள்ள கூறினார்கள் ஆறுமாதங்களுக்குள் கேம்புகள் அகற்றப்பட கோரினர். ஆனால், அதை நிறைவேற்ற அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கவேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கூறுவதோடு, சாலை, பாலம், மருத்துவமனை, பள்ளி, மின்சார வசதியை எதற்கு வேண்டாம் என்று கூறுகிறார்கள் என விளக்கவேண்டும். அரசு, நக்சலைட்டுகள் கூறுவதை கேட்கத் தயாராக உள்ளது. அவர்களை மைய ஊடகத்திற்கு கொண்டுவரவும் உடன்படுகிறது. அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்பதோடு, பஸ்தரில் பொருளாதார மேம்பாடும் கிடைக்கவேண்டும்.

நக்சலைடுகள் என்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையா, அல்லது சமூக பொருளாதார அடிப்படையில் முடிவெடுக்கவேண்டிய சிக்கலான பிரச்னையா? இதை எப்படி பார்க்கிறீர்கள்.

இதை நீங்கள் எப்படி சமூக பொருளாதாரத்தோடு தொடர்புடையது என கூறுவீர்கள்? அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. மேம்பாட்டு திட்டங்களை அழிப்பது, கொள்ளையடிப்பது, மிரட்டி பணம் பறிப்பது, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது ஆகிய செயல்பாடுகளை செய்துவருவதால், நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டுதான் வருகிறது. பஸ்தரில் உள்ள சுக்மா கிராமத்தில் உள்ள இருபத்தைந்து வயதான இளைஞர் ஒருவர், ராய்ப்பூரில் உள்ள அரசு நிகழ்ச்சியில் என்னை சந்தித்து பேசினார். தன் வாழ்நாளில் முதல்முறையாக டிவி ஒன்றைப் பார்த்தேன் என்று கூறினார். இப்படியான சூழலுக்கு யார் பொறுப்பு?

பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு எதிராக நீர், நிலம், காடு ஆகியவற்றை பாதுகாக்க நக்சலைட்டுகள் முயல்கிறார்கள் என்று கூறப்படும் கோணமும் உள்ளதே?

நீர், நிலம், காடு என்பது நக்சலைட்டுகளுக்கு சொந்தமானது அல்ல. அது பஸ்தரில் உள்ள பழங்குடி மக்களுக்கு உரிமையானது. இன்று, உள்ளூர் மக்கள் பாதுகாப்பு கேம்ப்களை அமைக்க கோரி வருகிறார்கள். தொடக்கத்தில், மக்கள் கேம்ப்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவத்தின் கேம்ப்கள், பொருளாதார மேம்பாட்டு கேம்ப்களாக மாறியுள்ளன. அவர்கள், அடிப்படைக் கட்டமைப்பு, அரசு சேவைகள், உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்கள். அரசு, இருபத்து ஒன்பது கேம்ப்களை அமைத்துள்ளது. இன்னும் கூடுதலாக முப்பது கேம்ப்களை அமைக்கவேண்டியுள்ளது.

கட்டுப்பாடின்றி சுரங்கங்களை தோண்டுவதால்தான் ஆதிவாசிகள் காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாகவும், உள்ளூர் சூழலியலை சேதப்படுத்தும் செயலாக மாறிவருகிறது என பழங்குடி உரிமைகளுக்கு போராடுபவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

சுரங்கம் தோண்டும் பகுதியில் உள்ள மக்கள் வேறு இடங்களில் குடியேறுவதற்கான, மறுவாழ்வுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு சட்டப்படி செய்யப்படுகிறது. உலகில் வேறு எங்கும் இதுபோல சுரங்கம் தோண்டுவது நடைபெறவில்லையா என்ன? பஸ்தர் உலகிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு விட்டதா? தேசிய கனிம மேம்பாட்டு கார்ப்பரேஷன், பஸ்தரில் ஏற்கெனவே இயங்கிக்கொண்டுதான் உள்ளது. பஸ்தரை வளமாக்க, அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு செல்ல சுரங்கங்கள் தேவை. உள்ளூர் மக்கள், அரசின் முடிவுகளை எதிர்த்தால் அங்குள்ள மக்கள் தேர்தலில் வென்று எம்எல்ஏ, எம்பி, பஞ்சாயத்து தலைவர்களாகி தங்கள் பிரச்னைகளைப் பேசலாம். நிறைய மாநிலங்களில் மேம்பாட்டு திட்டங்கள், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

அண்மையில் நக்சலைட்டுகளுக்கு எதிரான சண்டையில் காவல்துறை, பாராமிலிட்டரி படை பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதற்கு என்ன காரணம்?

அதற்கு அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு செயல்பாடுகளை மேற்கொண்டதுதான் காரணம். இல்லையென்றால், அரசு பழையபடி முந்தைய திட்டங்களோடுதான் இயங்கிவரும்.

நன்றி
பிரன்ட்லைன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்