வன்முறை வழியாக அகிம்சையைத் தேடும் கல்லூரி பேராசிரியர்!
மனிதா மனிதா
இயக்கம் பி கோபால்
டாக்டர் ஆர் ராஜசேகர், நக்மா
இசை ஏஆர்ஆர்
இரண்டு ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் கல்லூரி பேராசிரியரான நாயகன் இறங்குகிறார். அது சாத்தியமானதா என்பதே கதை.
படத்தில் ஒரே நல்ல விஷயம், ரஹ்மானின் இசைதான். வேறெந்த விஷயமும் சரியாக இல்லை. இயக்குநர் பி கோபாலைப் பொறுத்தவரை வணிக வெற்றிப்படங்களை சிரஞ்சீவி, பாலைய்யா ஆகியோருக்கு கொடுத்திருக்கிறார். விமர்சன ரீதியாக பார்த்தால் பெண்களை கவர்ச்சிப்பொருளாக, பாதுகாக்க வேண்டியவர்களாக, பிள்ளை பெறும் எந்திரங்களாக பார்க்கும் பார்வையை உருவாக்குகிற காட்சிகளை வசனங்களைக் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார்.
கல்லூரியில் பேராசிரியராக உள்ள நாயகனுக்கு, அப்பகுதியில் உள்ள ரவுடியிடமிருந்து சந்திக்க அழைப்பு வருகிறது. அதை மறுக்கிறார். இதனால், கல்லூரியில் அடிதடி தொடங்குகிறது. அந்த ரவுடியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளைக் கொல்ல மற்றொரு ரவுடி முயல்கிறான். அதற்கு நிறைய முன்கதைகள் உள்ளன. இதை அறியாத நாயகன் இருவரையும் சமாதானப்படுத்தி சமூகத்தில் அமைதியை ஏற்படுத்த நினைக்கிறான். ஆனால், அதன் விளைவாக அவனை விட்டு பிரிந்திருக்கும் முன்னாள் மனைவியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நாயகன் இறுதியாக என்ன செய்தார், தனது அகிம்சை உணர்வை கைவிட்டாரா, ஆயுதம் எடுத்தாரா, இல்லையா என்பதே கதை.
படத்தில் நாயகனாக ராஜசேகரை நடிக்க வைத்துவிட்டு அகிம்சை, அல்வா என எதற்கு பாடம் நடத்துகிறார் என்றுதான் தோன்றியது. ஆனால் இயக்குநர் கோபால் இறுதிவரை நாயகனது பாத்திரத்தை அமைதியை நாடுபவராகவே வைத்து படத்தை முடித்துவிட்டார். இப்படியாக அகிம்சையை விரும்புகிற நாயகன் பாத்திரம், பார்வையாளர்களாகிய நமக்கு பிடித்திருக்கிறதா என்றால் இல்லை. நிச்சயம் இல்லை. வசனத்திற்கும் நகரும் காட்சிகளுக்கும் பெரிய பொருத்தம் இல்லை. கல்லூரி நூலகத்தில் ரவுடியின் ஆள் ஒருவனை நாயகன் வெளியே போக சொல்லுவார். அவன் துப்பாக்கியை எடுப்பான். இவர் அங்கேயே அவனை அடித்து உதைத்து பொருட்களை உடைத்து வெளியே துரத்துவார். அந்த காட்சியின் தொடக்கத்தில் இது நூலகம். சத்தம் போடாதே என்று கூறியிருப்பார். வினோதம். படம் நெடுக இந்த வினோதம் நடைபெறுகிறது. பி கோபால் யுனிவர்சில் இதெல்லாமே சாத்தியம்தான். ஐ நோ தி ஆடியன்ஸ் பல்ஸ் என படம் எடுத்திருக்கிறார்.
நக்மா இதில் நாயகனின் மனைவியாக வருகிறார். அவருக்கு தன் கணவன், தன் குடும்பம் என்பதுதான் பிடித்திருக்கிறது. அடுத்தவர்கள் பிரச்னையில் நாம் ஏன் தலையிடவேண்டும் என நினைக்கிறாள். ஆனால், நாயகன் நமக்கென்ன என ஒதுங்கிப்போகும் குணம் கொண்டவரல்ல. எவனா இருந்தா எனக்கென்னடா என அடித்து உதைப்பவர், இப்படி பொதுநலம், சுயநலம் என இருக்கும் இருவருக்கும் பிள்ளை பிறக்கிறது. அதை ஒரு கலவரத்தில் ரவுடிகள் சுட்டுக்கொல்கிறார்கள். இதனால் நக்மா, கணவனைப் பிரிந்து தனியாக செல்கிறாள்.
நாயகனுக்கு மனைவியைப் பிரிவதில் வருத்தம்தான். ஆனால், மனைவி, கணவனிடம் பேச மறுக்கிறாள். இறந்துபோன பிள்ளை, கணவனின் பொதுநல குணத்திற்காகவே பலியானான் என நினைத்து வன்மம் கொள்கிறாள். இத்தனைக்கும் நாயகன், நாயகி என இருவருமே கல்லூரியில் பணியாற்றும்போது காதலித்து மணம் செய்துகொள்கிறார்கள்.
கிருஷ்ணம் ராஜூ , சரண் ராஜ் ஆகிய இருவர்தான் ரவுடிகள். இதில் கிருஷ்ணம் ராஜூவின் நடிப்பு பரவாயில்லை. அவர் கொஞ்சம் நல்ல ரவுடி. நாயகன் அவரது மகள் படிக்கவேண்டும் என்பதை காதுகொடுத்து கேட்கிறார். ஆனால் கூடுதலாக, மகளுக்கு பாதுகாப்புக்கு ஆட்களை தயார் செய்து அனுப்புகிறார். நாயகன் நல்லவன் என புரிந்துகொள்கிறார். தனது மகளை அவன் பாதுகாப்பான், தங்கை போல பார்த்துக்கொள்வான் என நம்புகிறார். இருவருக்குமான நட்பு உருவாகும் காட்சி பரவாயில்லை. மற்றபடி கதையில் பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை.
கவர்ச்சியான பாடல்கள், நக்மாவிற்கென சில கிளுகிளு காட்சிகள் என படம் நகர்கிறது. பெரிதாக சொல்ல ஏதுமில்லை. இறுதியாக சரண்ராஜை சுட்டுக்கொன்று படத்தை முடிக்கிறார்கள். கிருஷ்ணம் ராஜூவின் மகளுக்கு, அவள் காதலித்த பையனை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சுபம். விரும்புவர்கள் யூட்யூபில் உள்ள தமிழ் டப் படத்தைப் பார்க்கலாம். இந்தப் படத்தில் உள்ள ஒரு பாடலும், உழவன் படத்தில் உள்ள பாடலும் ஒரே ட்யூன். ஆனால் வரிகள் மட்டுமே வேறுவேறு.
அதிக ரத்தம் சிந்தி வாங்கிய இரைச்சலான அகிம்சை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக