முயற்சியும், பயிற்சியும் செய்தால் எழுத்தாளராக மாறமுடியும்!

 

 

 




 

 

 

ரைட்டிங் தட் கெட் நோட்டிஸ்டு
எஸ்டெல் எராஸ்மஸ்

இந்த நூல் பொது வாசகர்களுக்கானது அல்ல. வளரும், துறையில் ஏற்கெனவே உள்ள எழுத்தாளர்களுக்கானது. நூலை எழுதியுள்ள எழுத்தாளர் எஸ்டெல், பல்வேறு பதிப்பகங்கள், பெண்கள் பத்திரிகைகள், நாளிதழ்களில் பணியாற்றி பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது சப்ஸ்டாக், பிளாக், வலைத்தளத்தளங்கள், பாட்காஸ்ட் ஆகியவற்றை நடத்தி வருகிறார். புதிய தலைமுறையினருக்கு எழுதுவது பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார். நீங்கள் அவருடைய வலைத்தளத்திற்கு சென்று, மின்னஞ்சலுக்கு பதிவு செய்தால் கூட இலவச நூலை தரவிறக்கிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார். நூல் தரவிறங்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் முயலுங்கள்.

எழுத்தாளர் பயணிதரன் என்பவர் கூட இப்படி மின்னஞ்சலில் இணைபவர்களுக்கு புத்தகப் பரிசு ஒன்றை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், வலைத்தளத்தில் சேர்ந்தபிறகும் கூட அவரது இலவச பரிசு இன்னும் வந்து சேரவில்லை. புதிய வாசகர்களைப் பிடிக்க இப்படியான தூண்டில்களை போடவேண்டும்போல.
நூலில், எஸ்டெல் எப்படி எழுதவேண்டும், எடிட்டர்கள் கூறுவதைப் புரிந்துகொள்வது, நேரத்திற்கு வேலையை முடிப்பது, அதற்கான பணத்தைப் பெறுவது, பணம் கொடுக்க தாமதமானால் அதற்கு கடிதம் எழுதி விசாரிப்பது, கட்டுரைகளை நிராகரித்த எடிட்டர்களுக்கு பதில் எழுதுவது என நிறைய விஷயங்களை தனது அனுபவங்களைச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இறுதியில் எழுத்தாளர்கள் தம்தைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

இன்று அனைத்து பத்திரிகைகளும் இடது, வலது என குறிப்பிட்ட கொள்கை பக்கம் ஒதுங்கிவிட்டன. வலதுசாரி மதவாதிகள் அதிகாரத்தில் இருப்பதால், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற வார இதழ்கள் அவர்களை தொழுது பிழைக்க தொடங்கிவிட்டன. குங்குமம், குமுதத்தை அப்படியே பின்பற்றி நடிகைகளின் உடல்களை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து போட்டு நிரந்தரமாக மூன்றாவது இடத்தில் தன்னை தக்கவைத்துக்கொண்டுவிட்டது. எழுத்தாளர் எஸ்டெல், இதுபோல பத்திரிகைகளுக்கு எப்படி எழுவது என புரிந்து எழுதினால் பிரசுரமாகும் என கூறுகிறார்.

எழுதிய கட்டுரைகள் மறுக்கப்பட்டால் என்ன செய்வது, அதை எப்படி புரிந்துகொள்வது என கூறியுள்ளது சற்று அவசியமானது. அனுப்பியுள்ள பதில் சார்ந்து நாம் புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை சிறப்பாக விளக்கி கூறியுள்ளார். நூலின் இறுதியில் பத்திரிகையாளர்களுக்கான முக்கிய வலைத்தளங்கள், வாசிக்க வேண்டிய நூல்கள், நிபுணர்களை அணுகுவதற்கான இடங்கள் ஆகியவற்றை நூலாசிரியர் கொடுத்திருக்கிறார். இது உண்மையில் நல்ல தகவல்கள், ஐடியாவாக யோசித்தாலும் பிரமாதமானதுதான்.  

கட்டுரைகளில் தகவல் பிழைகள் வருவது இயல்பான ஒன்று. ஒன்றை சோதித்து எழுதுவதற்கும், நிலைவில் இருந்து எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சோதித்து எழுத மருத்துவ, அறிவியல் வட்டார வலைத்தளங்கள் நிபுணர்கள் பற்றி தனியாக இரண்டு அத்தியாயங்களில் தகவல்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் அமெரிக்காவை மையமாக கொண்டவை. இந்தியாவில் அரசு ஆவணங்கள், பொது தகவல்கள் வெளிப்படையாக உள்ளனவா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் எழுத்தாளர்கள், குறிப்பிட்ட தகவல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.

இணையம் சார்ந்து கட்டுரைகளை வெளியிடும்போது வரக்கூடிய கேலிவதைகளை எதிர்கொள்வது பற்றிய கட்டுரை முக்கியமானது. அமெரிக்காவிலேயே ஒரு எழுத்தாளருக்கு கட்டுரை சார்ந்து மிரட்டல்கள், கேலிகள் வருகிறது என்றால், கல்வியறிவு குறைந்து வரும், வேதகாலத்திற்கு நகரும் இந்தியாவில் நிலைமை எப்படி? இன்னும் மோசம்தான். இணையத்தில் உள்ள வன்மம் கக்கும் சாணி வண்டுகளை எதிர்கொள்வதற்கு நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை காலத்தைப் பொறுத்து நல்ல முயற்சி எனலாம்.

கட்டுரைகளில் தேய்வழக்குகளை பயன்படுத்தாமல், பல்வேறு புதிய சொற்களை பயன்படுத்த எழுத்தாளர் எஸ்டெல் கையாளும் உத்தி சிறப்பாக உள்ளது. வளவளவென செய்தியை சொல்லாமல் நறுக்கென கூறுவது, தலைப்புகளை கவர்ச்சியாக வைப்பது, ஒரு கட்டுரையை இருவேறு பொருள் கொண்ட தன்மையில் மாற்றி எழுவது என நிறைய விஷயங்களை சொந்த அனுபவம் வழியாக விவரிக்கிறார். எப்படி மாற்றுவது என எடுத்துக்காட்டுகளையும்கூட கொடுத்திருக்கிறார். நண்பர்களே எழுத்து துறையில் நீங்கள் இருந்தால், நூல் உங்களுக்கு சிறந்த பயனுடையது. அப்படி இல்லையென்றாலும் நூலை வாசித்தால், அறிவியல், பத்திரிகை தொடர்பான பல்வேறு வலைத்தளங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டுரை பலரால் ஏன் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக செம்மையாக்கம் என்பது கட்டுரைக்கு எந்தளவு முக்கியம் என்ற அடிப்படையை உணரலாம்.

கோமாளிமேடை டீம் 



https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://estelleserasmus.com/&ved=2ahUKEwiKjpmn8_CHAxUUzjgGHUx6HTIQFnoECFwQAQ&usg=AOvVaw0kncNgBH7R-LfQJ7NHzeRe

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://estelleserasmus.substack.com/&ved=2ahUKEwiKjpmn8_CHAxUUzjgGHUx6HTIQFnoECF8QAQ&usg=AOvVaw2mefB2An7h0kZrn-C4Tzo-
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்